For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம்-மேலும் மழை பெய்யும் வாய்ப்பு

Google Oneindia Tamil News

Satellite View
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருக்கிறது. இதனால் மேலும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேசமயம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத்திற்கும் தென் மேற்குப் பருவ மழை மூலம் நல்ல மழை கிடைத்துள்ளது.

வெப்ப சலனம், மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சென்னையில் பலத்த மழை கொட்டியது. காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்தது. சென்னையிலும் லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

ஆந்திர கடலோரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒருசில நேரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். அக்டோபர் மாதத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

அட்டகாசமான ஆகஸ்ட்:

சென்னை நகரில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னையில் 204.2 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

1894-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அதிக அளவாக 336.3 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அதன்பிறகு இந்த வருடம்தான் ஆகஸ்டு மாதம் அதிக மழை பெய்து இருக்கிறது.

சென்னை நகரில் ஆண்டு முழுவதும் 700 முதல் 800 மில்லி மீட்டர் மழை பெய்யும். இந்த மாதம் வரை பெய்த மழையின் அளவை கணக்கிட்டால் சென்னையில் இந்த ஆண்டு 257 மில்லி மீட்டர் மழை அதிகமாக பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று வரை மொத்தம் 496 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திண்டிவனத்தில் தண்டவாளத்தில் விரிசல்:

இதற்கிடையே, சேலத்தில் இருந்து மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ரயில் நிலையத்தையொட்டி தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை ஊழியர்கள் பார்த்தனர். அதிகாலை 3.45 மணியளவில் விரிசல் ஏற்பட்டதை கண்டுபிடித்து அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விரிசல் ஏற்பட்ட தகவல் சேலம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை நோக்கி வந்த சேலம் எக்ஸ்பிரஸ் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், நெல்லை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன.

மழையால் ஏற்படும் வழக்கமான விரிசல் என்பதால் அவற்றை உடனே சரி செய்தனர். ஆனாலும் அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன.

சேலம் எக்ஸ்பிரஸ் 3.45 மணிக்கு வழக்கமாக வந்து சேரும். இன்று 4.40 மணிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து எல்லா ரயில்களும் தாமதமாக வந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X