• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் மீது 'எந்த 'அம்மா' குப்பையைக் கொட்டினாலும் உதறி விட்டுப் போவோம்-கருணாநிதி

|

Karunanidhi
திருச்சி: நம் மீது எந்த 'அம்மா' குப்பையைக் கொட்டினாலும், அதைத் தட்டிவிட்டு, உதறிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். மீண்டும் அவர்கள் மீது சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசக் கூடாது. வேண்டுமானால், ஏன் குப்பையைக் கொட்டவில்லை என்று கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.

திருச்சி மன்னார்புரத்தில் நேற்று பிரமாண்ட திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை:

எத்தனை முறை திருச்சி வந்தாலும், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும், இந்தக் கூட்டம் திமுகவின் வளர்ச்சிக்கு, எதிர்கால வெற்றிக்கு அடையாளமாக இருக்கிறது. முதல்வர், அமைச்சர்கள் ஆனாலும் கொள்கையை சிறிதும் நழுவவிடாமல் இருக்கிறோம். தேர்தல், கூட்டணி, வெற்றி, தோல்வி எதுவும் பாதிக்காமல் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.

நம்மைத் தூற்றுகிறார்கள், பழிக்கிறார்கள். இப்தார் நோன்பு நடைபெறும் காலம் இது. நாமும் எதிர்வாதம் செய்துகொண்டிருக்காமல், நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்காக மறுப்புக்கு மறுப்பு, பதிலுக்கு பதில் என்றில்லாமல், மறுப்புக்கு விளக்கம், பகுத்தறிவு வியாக்யானமாக அளிக்க வேண்டும். அதுதான் நமக்குத் தேவை.

நபிகள் நாயகம் செல்லும் வழியில் பெண் ஒருத்தி மாடி வீட்டிலிருந்து குப்பைகளை வீசி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவற்றை தட்டிவிட்டு எதுவும் நடக்காததுபோல் நபிகள் சென்றுகொண்டிருந்தார். ஒரு நாள் நபிகள் மீது குப்பைகள் விழவில்லை. அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு எனத் தெரிந்து நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இது எடுத்துக்காட்டு.

நம் மீது எந்த 'அம்மா' குப்பையைக் கொட்டினாலும், அதைத் தட்டிவிட்டு, உதறிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். மீண்டும் அவர்கள் மீது சாக்கடைத் தண்ணீரை அள்ளி வீசக் கூடாது. வேண்டுமானால், ஏன் குப்பையைக் கொட்டவில்லை என்று கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் எல்லோரும் பாராட்டும் திட்டமாக உருவாகப் போகிற கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. கோபாலபுரம் வீட்டை இப்போது நான் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். திருச்சியில்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தோம்.

அறிவித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல், ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆட்சியர்களுடன் கலந்து பேசி இத்திட்டத்தில் ஒரு தவறும் வந்துவிடக் கூடாது, யாரும் விடுபட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறேன்.

21 லட்சம் வீடுகளை 6 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டுமானால், முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி தொடங்கிவிட்டது. மிக விரைவில் எத்தனை வீடுகள் எங்கெங்கே கட்டப்பட்டு வருகின்றன என்ற புள்ளிவிவரத்தை தருகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.

திருச்சி வரும்போது செப். 7-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சிகளின் சாலைகளை மேம்படுத்த, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த 1,000 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையில் கையெழுத்திட்ட பின்னரே ரயிலில் ஏறினேன்.

இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் அகங்காரமாகப் பேசுகின்றனர். ஜெயலலிதா இழிவாகப் பேசியதை மீண்டும் மீண்டும் என் காதில் போட வேண்டுமா? அதற்கு அவசியம் இல்லை.

ஒரு காலத்தில் புரட்சிகர இயக்கமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். சிறுதாவூர் நில பிரச்னையை என்னிடம் கொண்டு வந்தார்கள். அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டேன். ஆனால், அதற்குள் அவர்களே சிறுதாவூருக்குச் சென்றுவிட்டார்கள். அதற்காக என் மீது கோபித்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?

நல்ல காலம் பெரியாரையும், அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பேன். என்றாலும், அந்தக் கொள்கையில் மிகுந்த பற்று கொண்டவன் நான். ஜீவாவுக்கு சட்டப்பேரவையில் படம் திறக்கப்படும் என்று அறிவித்த என்னை ஏன் துரத்துகிறீர்கள்? நான் என்ன கோவிந்தசாமியா? அவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? திமுக ஆட்சியின் சாதனையைப் பாராட்டுவது அவ்வளவு பெரிய தவறா?

மணலி கந்தசாமி ஒரு முறை க. சுப்புவுடன் என்னிடத்தில் வந்து திமுகவில் சேர விரும்புவதாகக் கூறினார். முடியாது, உங்களது தியாகம் உழைப்பு, பெருமையை நாடே அறியும். இப்போது கட்சி மாறுவது உங்களுக்குப் பெருமை சேர்க்காது என்று கூறித் தடுத்து கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு திரும்ப அனுப்பிவைத்தவன் நான். இது நல்லகண்ணுவுக்கும் தெரியும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X