For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்-ஜெ., தலைவர்கள் வாழ்த்து

Google Oneindia Tamil News

Ramzan
சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு கடந்த ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நோன்பு முடிவடைந்த நிலையில், ஷவ்வால் மாதப் பிறை நேற்று தூத்துக்குடி, சென்னை பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் தென்பட்டது.

இதைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

ஜெயலலிதா வாழ்த்து:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

ஈத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அருள் மறையாம் திருமறை குர்ஆன் அருளப்பட்ட இந்தப் புனித மாதத்தில் நோன்பிருக்க வேண்டுமென்பது இறைவனின் கட்டளையாகும். நோன்பிருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் இஸ்லாமியர்கள் பெறுகிறார்கள்.

மனிதர்களுக்கு நேர்வழியையும், சத்தியத்தையும் உணர்த்தக்கூடிய மாதமாகவும், சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கக்கூடிய மாதமாகவும், தர்மம் செய்வதற்கு உகந்த மாதமாகவும், உண்மையான ஏழை, எளியவர்களை அடையாளம் கண்டு துயரங்களை துடைத்துவிடுகின்ற மாதமாகவும் ரமலான் மாதம் விளங்குகிறது.

இந்த மகத்தான ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு, இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்திய, அசத்தியத்தை பிரித்து காட்டக்கூடியதுமான குர்-ஆனில் அருளப்பட்ட போதனைகளை இந்நாளில் நினைவு கூர்ந்து அவற்றை கடைப்பிடிக்க சூளுரைத்துக் கொள்வோம். அனைவரும் ஒன்று திரண்டு மதுவென்னும் பாவத்தை ஒழிக்க பாடுபடுவோம் என இந்த நன்னாளில் சபதமேற்று செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட செய்தியில், பகுத்துண்டு பல்லுயில் ஓம்பும் பண்பாட்டுத் திருநாளாம் இப்பெருநாளில், சமய நல்லிணக்கம் செழிக்கவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து, ம.தி.மு.க. சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு நெஞ்சார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், இல்லாதவர்கள் அனுபவிக்கும் இன்னலை அனைவரும் உணரச் செய்வதற்கே, நபிகள் நாயகம் நோன்பு இருப்பதை ஒரு முக்கிய கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்படி தங்களை வருத்திக் கொண்டு நோன்பினைக் கடைப்பிடித்த இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் கே.எம்.காதர் முகைதீன் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், எல்லோருக்கும் ஈது பெருநாள் வாழ்த்துக்கள். மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளை நீக்கவும், வன்முறை எண்ணம் மறையவும், எங்கும் எதிலும் நன்முறையும் மென்முறையும் நிறையவும், அமைதி வழியில் அறநெறியில் ஆக்கப்பூர்வமாகப் பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலும் இன்று கொண்டாட்டம்:

கேரளாவிலும் நேற்று இரவு பிறை காணப்பட்டது. இதையடுத்து இன்று அங்கு ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் இன்று ரம்ஜான் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X