• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக். 18ல் மதுரையில் எனது தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்-ஜெ.

|

Jayalalitha
சென்னை: மதுரையில் அக்டோபர் 18ம் தேதி எனது தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மதுரை ஆர்ப்பாட்டம் தொடர்பாக நிலவி வந்த இழுபறியும், குழப்பமும் இதன் மூலம் விலகியுள்ளது. இதனால் மதுரை அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திகைப்பில் மக்கள்:

அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. ரவுடிகளின் ஆதிக்கத்தால் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டினால் அனைத்துத் தொழில்களும் முடங்கி உள்ளன. மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விட்டது. மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாகிவிட்டது. நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித் தொழில் நலிந்துவிட்டது. இதனால் மக்கள் திகைத்துப் போய் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் "மக்கள் ஹேப்பி' என்று முதல்வர் கருணாநிதி பெருமிதம் அடைந்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு இன்றியமையாதது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், ஆய்வுக்குப் பிறகு 152 அடி வரை நீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் 2006ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிமுக அரசு போராடி பெற்ற இந்தத் தீர்ப்பின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கத்தில் கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதனை எதிர்த்து 27.3.2006ல் அதிமுக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்:

2006ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட வேண்டும் என்ற தீர்ப்பு முற்றிலும் திசை திருப்பப்பட்டு புதிய அணை என்ற கோரிக்கையை கேரள அரசு முன்வைத்து, அதற்கான ஆய்வுக்கும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிட்டது. இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, முதலில் மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றார்.

பின்னர் அனுமதி அளித்ததை ஒப்புக் கொண்டு மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார். பிறகு அதனை கேரள அரசுக்கு எதிரான கூட்டம் என்றார். பின்னர் பொதுக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார். தன் மக்களின் மகிழ்ச்சிக்கு ஆபத்து என்றதும், தமிழக மக்களை கை கழுவி விட்டார்.

சிக்கித் தவிக்கும் திரைத்துறை:

அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறிவிட்டது. ரவுடிகளைக் கண்டால் காவல்துறையினர் அஞ்சி நடுங்குகின்றனர். காரணம், அனைத்து ரவுடிகளும் ஆளும் பல்வேறு அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள்.

திரைப்படத் துறை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. மற்ற துறைகளிலும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம் பரவத் தொடங்கியுள்ளது. பெரிய ரௌடியாகும் ஆசையில் கொலை செய்தேன் என்று ஒருவர் வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

மதுரை பக்கம் லாரிகளை அனுப்ப அச்சம்:

ஹார்லிக்ஸ், மிட்டாய் ஏற்றிச் சென்ற சரக்கு லாரிகளில் நடைபெற்ற திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மதுரை பக்கம் தங்களது லாரிகளை அனுப்பவே பயப்படுகின்றனர். அன்றாடம் கொலை, கொள்ளைகள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. எதிலும் காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுப்பதில்லை.

தா. கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு, பனையூர் இரட்டை கொலை வழக்கு, சென்னையில் நட்சத்திர ஹோட்டல் தாக்கப்பட்ட வழக்கு, வழக்கறிஞர்கள், மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு என பல வழக்குகளில் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுகின்ற மோசமான சூழ்நிலை நிலவுகிறது. விலைவாசி விஷம்போல உயர்ந்து வருகிறது.

மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன்:

மின்வெட்டுக்கு அதிமுக அரசை குறை கூறியே ஆட்சி காலம் முழுவதையும் கருணாநிதி வீணடித்து விட்டார். வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மணல் கடத்தப்படுகிறது. இது போதாது என்று கிரானைட் கற்களும் கடத்தப்படுகின்றன. இதனை வெளிப்படுத்திய பத்திரிகையாளர் மீது பொய் வழக்கு போடுகிறார். மொத்தத்தில் நாட்டின் வளத்தை கொள்ளையடித்து தன் வளத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

மக்களின் இன்னல்களுக்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து கோவை மற்றும் திருச்சியில் நடைபெற்ற வரலாறு காணாத ஆர்ப்பாட்டத்தை கண்டு கலங்கிய கருணாநிதி, மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த பல தடைக்கற்களை உருவாக்கி வருகிறார். மதுரைக்கு வராதே; வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து மதுரையில் அக்டோபர் 18 ம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X