For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களுக்கு தேவை சுதந்திரம்: காஷ்மீரில் அமைதி திரும்ப கிலானி போடும் 5 நிபந்தனைகள்!

Google Oneindia Tamil News

Geelani
ஸ்ரீநகர்: பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமானால் ஐந்து நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக காஷ்மீரில் நீடித்து வரும் கலவரம், வன்முறைக்கு இதுவரை 105 பேர் பலியாகியுள்ளனர். இந்த கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டத் தேவையான வழிமுறைகளைப் பரிந்துரைக்க உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு நேற்று 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றது.

இந்தக் குழுவினர் நேற்று கிலானி, மீர்வைஸ் உமர் பாரூக் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினர். கிலானியை அவர்கள் சந்தித்தபோது அமைதி திரும்ப ஐந்து நிபந்தனைகளை தெரிவித்தார்.

சீதாராம் எச்சூரி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு கிலானியை அவரது ஹைதர்புரா இல்லத்திற்குச் சென்று சந்தித்தது. கிலானி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்திக்க மறுத்ததால் எச்சூரி தலைமையிலான குழு, கிலானியை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்தது. இக்குழுவில் டி.ஆர்.பாலு, சுல்தான் ஓவைசி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

அவர்களிடம் கிலானி பேசுகையில், காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமானால் இந்திய அரசு ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். இதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டால், உடனடியாக இங்கு இயல்பு நிலை திரும்பும் என்றார்.

கிலானி போட்ட ஐந்து நிபந்தனைகள்:

1. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. இங்கு குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கடுமையான, மக்கள் விரோத சட்டங்களையும் நீக்க வேண்டும்.

4. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

5. சமீபத்தில் நடந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான பாதுகாப்புப் படையினரை கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோல இனி நடக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

'எங்களுக்கு தேவை சுதந்திரம்':

எங்களுக்குத் தேவை பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் அல்ல, மாறாக சுதந்திரம்தான் தேவை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. 1947ம் ஆண்டு முதல் இதுவரை 150 முறை பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டன. ஆனால் எதுவுமே உருப்படியான பலனைத் தரவில்லை. எனவே இதை ஒரு சர்வதேச பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் மட்டுமே உரிய தீர்வைக் காண முடியும் என்றார் கிலானி.

இந்த நிபந்தனைகளை கேட்டுக் கொண்ட எச்சூரி தலைமையிலான குழுவினர், இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து ஆவண செய்வதாக உறுதி அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி வந்தனர்.

இதேபோல மீர்வைஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோரது வீடுகளுக்கும் தனித் தனி குழுக்கள் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.

கருப்புப் பட்டையுடன் மீர்வைஸ்:

மீர்வைஸை குழுவினர் சந்தித்தபோது அவர் கருப்புப் பட்டையை அணிந்தபடி குழுவினரை எதிர் கொண்டார்.

தன்னை சந்தித்த குழுவிடம் மீர்வைஸ் கூறுகையில், நாங்கள் அமைதி திரும்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தெருச்சண்டை மூலம் காஷ்மீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் காஷ்மீர் குறித்துப் பேச வேண்டுமானால்,இந்தியா மட்டும் அதில் பங்கேற்க முடியாது. மாறாக, பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் குறித்தும் நாம் பேசியாக வேண்டும். எனவே பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் இடம் பெற வேண்டும். எனவே ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் ம்னதில் கொண்டு, அவர்களை உள்ளடக்கியதாக பேச்சுவார்த்தை அமைய வேண்டும்.

பிரச்சினையைத் தீர்க்க இந்தியா மற்றும் பாகிஸ்தானில் காஷ்மீர் கமிட்டியை தொடங்க வேண்டும். அதன் மூலம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பாக்.கை உள்ளடக்கியே பேச வேண்டும்-மாலிக்:

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கூறுகையில்,எங்களது கோரிக்கைகளை குழுவிடம் கொடுத்துள்ளோம். காஷ்மீர் மக்களையும், பாகிஸ்தானையும் உள்ளடக்கிய கமிட்டி அமைப்பதன் மூலம் மட்டுமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முக்தி கூறுகையில், இது மிகவும் வரவேற்கத்தக்கது. பிரிவினைவாத தலைவர்களுடன் மத்திய அரசு இறங்கி வந்து பேசியிருப்பது நல்ல அறிகுறியாக தெரிகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X