For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவிலுக்குள் திறக்கும் மசூதி-புனேவில் ஒரு மத நல்லிணக்கம்

Google Oneindia Tamil News

Pune Temple and Masjid
புனே: கோவிலா, மசூதியா என்று மக்கள் மனங்களில் மெளனப் போராட்டம் நடந்து வரும் நிலையில் புனே நகரில் ஒரு மசூதியும், கோவிலும் அருகருகே அமைந்து மக்களுக்கு இறையருளை பரப்பி வருகின்றன. அதை விட முக்கியமாக, மசூதியின் ஜன்னல் கதவைத் திறந்தால் அது கோவில் இடத்துக்குள் வருகிறது.

1992ல் நாடே பெரும் கலவரத்தில் மூழ்கிப் போயிருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரம் அது. பலரின் உயிர்கள் பறிபோயிருந்தன. இந்தியாவின் அமைதி சீர்குலைந்து கிடந்தது. ஆனால் புனே நகரில் மட்டும் ஒரு மசூதி அருகே சிலர் கூடியிருந்தனர். அமைதி மட்டுமே அங்கு பேசிக் கொண்டிருந்தது. பெருத்த வேதனையின் முடிவில் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர்.

கோர்பாடி கோவன் என்ற இடத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால்,அங்குள்ள அஹலே சுன்னத் ஜமாத் மசூதி அருகே ஒரு கோவில் கட்டுவது என்பது.

கோவில் கட்ட முடிவு செய்த பின்னர் மசூதி நிர்வாகத்திடம் பேசினர். அவர்களும் மனம் உவந்து சம்மதித்தனர். இதையடுத்து வெகு விரைவில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

மசூதிக்கு அருகே அஸ்திவாரம் போடப்பட்டு மளமளவென கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அந்தப் பணிகளில் முஸ்லீம்களும் பெருமளவில் ஈடுபட்டனர். மசூதியிலிருந்து தணணீரை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டனர்.

இன்று கம்பீரமாக நிற்கிறது மசூதிக்கு அருகே கட்டப்பட்டுள்ள அந்த காசி விஸ்வேஸ்வரர் கோவில். 18 வருடமாக இந்தக் கோவிலும், அதை ஒட்டி உள்ள மசூதியும் மத நல்லிணக்க மணத்தை சற்றும் குன்றாமல் கம்பீரமாக பரப்பிக் கொண்டிருக்கின்றன.

சுன்னத் ஜமாத் மசூதி 200 வருடப் பழமையானதாகும். அயோத்தியில் பற்றி தீ நாட்டையே எரித்தபோது, புனேவில் மட்டும் அது சமாதான ஜோதியாக மாறியது இன்று வரை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இதுகுறித்து கோவிலின் தலைவரான ஆல்பிரட் அந்தோணி (இவர் ஒரு கிறிஸ்தவர்) கூறுகையில், கோவில், மசூதி என்று மக்கள் மோதிக் கொண்டிருந்தபோது நாங்கள் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினோம். பல முஸ்லீம்கள் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினர். மசூதியிலிருந்துதான் நாங்கள் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தினோம் என்றார்.

மசூதி நிர்வாகியான மெளலானா நசீர் கான் கூறுகையில், இது இந்தியா. நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த உணர்வு மட்டுமே எங்களிடம் உள்ளது என்றார்.

இந்தப் பகுதியில், ரம்ஜான், முஹர்ரம், சிவராத்திரி, தீபாவளி என இரு மதத்துப் பண்டிகைகளும் ஒரே மாதிரியாக, அதாவது அனைவரும் சேர்ந்து கொண்டாடப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும். அதாவது முஸ்லீ்ம்கள் தங்களது பண்டிகைககளை கொண்டாடும்போது அதில் இந்துக்களும் கலந்து கொள்வர். அதேபோல இந்துக்களின் பண்டிகைகளின்போது முஸ்லீம்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்களாம்.

நாட்டின் எந்தப் பகுதியில் மதக் கலவரங்கள் வெடித்தாலும் இந்தப் பகுதியில் மட்டும் அதன் சிறு அதிர்வு கூட தெரியாதாம். அந்தஅளவுக்கு இப்பகுதி மக்கள் அமைதியாக, இணக்கமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு இந்தப் பகுதிதான் மிகச் சிறந்த, பொருத்தமான உதாரணம் என்கிறார் கோர்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேவிதாஸ் பாட்டீல். இந்தப் பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்தால் பெரும் நிம்மதியுடன் இருப்பது போலீஸார்தான் என்கிறார் பாட்டீல்.

புனேவில் பூத்துக் குலுங்கும் இந்த மத நல்லிணக்க 'மலரை' ஒவ்வொரு ஊரிலும் நட்டு வைத்தால் என்ன? உரியவர்களே, யோசியுங்கள்!.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X