For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை துறைமுக இணைப்புச் சாலை திட்டம் ரத்து-ஜெ. கண்டனம்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வட சென்னை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த துறைமுகம் இணைப்புச்சாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வட சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்காதா என்ற நிலையில், சென்னை-எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் மணலி-எண்ணூர் சாலை மேம்பாட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது வட சென்னை மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சென்னை துறைமுகத்திற்கு தினமும் வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில், 95 விழுக்காடு லாரிகள் திருவொற்றியூர், ராயபுரம் வழியாகத் தான் துறைமுகத்திற்கு வருகின்றன. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பொன்னேரி நெடுஞ்சாலை, உள்வட்டச் சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு 2005-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்பொழுது இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு முடிவுறும் என்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களினால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், 2008 -ம் ஆண்டு ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டும், சென்னை துறைமுக நிர்வாகத்திற்கும், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.

இந்தச் சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் கால தாமதம் ஏற்பட்டது உண்மை தான் என்றும், விரைவில் மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் மத்திய அமைச்சர் அறிவித்தார்.

இதனையடுத்து, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 11 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், இவர்களில் குறைவான விலையை யார் கொடுத்துள்ளார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், சென்னை துறைமுக நிர்வாகம் முறையான ஒப்புதலை அளிக்கவில்லை.

தற்போது அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை ரத்து செய்து ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எனவே, சென்னை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அக்டோபர் 5-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X