• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலாகல விழாவுடன் தொடங்கியது காமன்வெல்த் விளையாட்டு

|

Commonwealth Games
டெல்லி: 19வது காமன்வெல்த் போட்டிகள் இன்று டெல்லியில் கோலாகலமாக தொடங்கின.

டெல்லி காமன்வெல்த் போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 7000 வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் சார்பில் 619 பேர் கொண்ட பிரமாண்ட அணி பங்கேற்கிறது. மொத்தம் உள்ள 17 போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது. கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. இந்த முறை மேலும் முன்னேற்றம் அடையும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது.

இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளிலேயே மிகப் பெரியது இது என்ற பெருமை டெல்லி போட்டிக்குக் கிடைத்துள்ளது. பல மாத குழப்பங்கள், கடைசி நேர களேபரங்கள், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் என பெரும் அமளியை உருவாக்கி ஓய்ந்துள்ளது டெல்லி போட்டி.

இருப்பினும் தற்போது வெளிநாட்டு அணி நிர்வாகங்கள், மீடியாக்களின் பாராட்டுக்களைப் பெற ஆரம்பித்துள்ளது டெல்லி. கேம்ஸ் வில்லேஜ் முதல் அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வெளிநாட்டு மீடியாக்காரர்கள், இவ்வளவு அருமையான ஏற்பாடுகளா என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.

எதிர்ப்பு, அதிருப்தி, கோப, விரக்தி அலைகள் ஓய்ந்து, விளையாட்டு உற்சாக அலை டெல்லியில் கரைபுரள ஆரம்பித்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஜேக்கஸ் ரோக் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.

இந்தப் பின்னணியுடன் இன்று இரவு 7 மணிக்கு காமன்வெல்த் போட்டி தொடக்க விழா தொடங்கியது. பின்னர் கண் கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அணிவகுத்து வந்தன. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக் கொடி ஏந்தி வந்தார். அவரது தலைமையில் இந்திய அணியினர் நடைபோட்டு வந்தனர்.

இறுதியில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கோலாகலமாக நடந்த தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பல கட்ட பலத்த பாதுகாப்பு:

தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் மிக மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளில்லாத விமானங்கள் மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு என வான் ரீதியாகவும், தரை மார்க்கவும் பல்வேறு கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதாரண போலீஸார் முதல் அதிரடி கமாண்டோக்கள் வரை கிட்டத்தட்ட 1 லட்சம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான தாக்குதல் நடந்தாலும் அதை முறியடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேம்ஸ் வில்லேஜில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்லேஜுக்குள் யாரும் அவ்வளவு எளிதில் போய் விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.

இரும்புக் கோட்டையாக மாறிய டெல்லி:

காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் டெல்லி இரும்புக்கோட்டை போல மாறியுள்ளது. அனைத்துக் கடைகள், மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களை இன்று மட்டும் மூ்ட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதால், கிட்டத்தட்ட பந்த் நடப்பது போல காணப்படுகிறது டெல்லி.

தொடக்க விழாவின்போது எந்தவிதமான அசம்பாவிதத்திற்கும் இடம் அளித்து விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறவுள்ள 41 இடங்களில் 80 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 650 போலீஸ் வேன்கள், 350 அதி விரைவுப் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். புற ராணுவப் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போட்டிகளின்போது போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையர் தத்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

போட்டிகளைக் காண வரும் விளையாட்டுப் பிரியர்கள், உரிய இடங்களுக்கு முன்கூட்டியே போய்விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரசிகரும் முழுமையாக சோதனையிடப்பட்ட பின்னரே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவார்.

போட்டி அட்டவணை:

அக்டோபர் 3, 2010 - தொடக்க விழா, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.

நீர் விளையாட்டு

நீச்சல் - அக். 4-9
சின்குரோனைஸ்ட் நீச்சல் - அக். 6-7
டைவிங் - அக். 10-13

வில்வித்தை - அக். 4 முதல் 10ம் தேதி வரை.

தடகளம்

டிராக் அன்ட் பீல்ட்- அக். 6-12
மாரத்தான்- அக். 14
நடைப் போட்டி - அக். 9

பேட்மிண்டன் - அக். 4 முதல் 14ம் தேதி வரை.

குத்துச் சண்டை - அக். 5 முதல் 13ம் தேதி வரை

சைக்கிள் போட்டி

டிராக் - அக். 5 முதல் 8 வரை.
ரோட் மாஸ் ஸ்டார்ட்- அக். 10
ரோட் டைம் டிரையல் - அக். 13.

ஜிம்னாஸ்டிக்ஸ்

ஆர்ட்டிஸ்டிக் - அக். 4 முதல் 8 வரை.
ரிதமிக் - அக். 12 முதல் 14 வரை.

ஹாக்கி - அக். 4 முதல் 14 வரை.

லான் பவுல்ஸ் - அக். 4 முதல் 13 வரை.

நெட்பால் - அக். 4 முதல் 12 வரை.

ரக்பி செவன்ஸ் - அக். 11 முதல் 12 வரை.

துப்பாக்கிச் சுடுதல்

கிளே டார்கெட் - அக். 6-13.
புல் போர் - அக். 9-13
பிஸ்டல், ஸ்மால் போர் - அக். 5 -13.

ஸ்குவாஷ் - அக். 4 முதல் 13 வரை.

டேபிள் டென்னிஸ் - அக். 4 முதல் 14 வரை.

டென்னிஸ் - அக். 4 முதல் 10 வரை.

பளு தூக்குதல் - அக். 4 முதல் 12 வரை.

மல்யுத்தம் - அக். 5 முதல் 10 வரை.

நிறைவு விழா - அக்டோபர் 14, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X