For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காங்கிரஸ் தனித்தன்மையை இழக்கக் கூடாது-சோனியா காந்தி

Google Oneindia Tamil News

Soina Gandhi
திருச்சி : தமிழகத்திலே நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் எது முக்கியம் என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி தனது தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்பதிலே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இந்த கட்சி முதன்மையான இடத்தை பெற்று மக்கள் மத்தியிலே மக்களுக்கு நெருக்கமான கட்சியாக இருக்கவேண்டும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா, சோனியா காந்தி தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த தினவிழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதே விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களோடு முறைப்படி காங்கிரஸில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் சோனியா காந்தி பேசுகையில்,

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மகா சமுத்திரம் போல் திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்த்து உணர்ச்சி பிழம்பாக நிற்கிறேன். நமது இனிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களோடு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்த போது எவ்வாறு உணர்ச்சி வசப்பட்டேனோ, அதே உணர்ச்சி வசத்தோடு இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது எந்த அன்பையும், அதரவையும் பார்த்தேனோ அதனை இப்போதும் காண்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட தலைவர்களை, முன்னணி தலைவர்களை இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டியதற்காக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் இயக்கங்கள் வந்திருக்கின்றன. போய் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் எப்போதும் நிலைத்து நிற்கிறது என்றால் காங்கிரஸ் கட்சியின் சாதனை வரலாற்றில் நிலைத்து நிற்கிறது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் அல்ல நாமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

உலகப்புகழ் பெற்ற தியாக சீலர்கள், மனிதருள் மாணிக்கங்களை தலைவர்களாக பெற்ற இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக இருந்தார் என்பதையும் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திலே எவ்வளவு பங்காற்றினார் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்கள் இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், திட்டமிடப்பட்ட முன்னேற்றத்திற்கும், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியல் இன மக்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை இன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாழ்வாதாரத்தை தந்து முன்னேற்றத்தை அளித்த மிகப்பெரிய பெருமை மகாத்மா காந்திக்கு உண்டு, ஜவகர்லால் நேருவுக்கு உண்டு.

நம்முடைய ஒப்பற்ற தலைவி அன்னை இந்திரா காந்தி அவர்கள் பசுமை புரட்சியின் தாயாக இருந்து இந்தியா முழுவதும் பசுமை புரட்சியின் வெள்ளத்தால் தானியங்களும், உணவு பொருட்களும் பொங்கி வழிகிற உணவு புரட்சியை ஏற்படுத்த காரணமாக இருந்தார்கள். நமது இனிய தலைவர் ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டு இன்று தமிழகத்திலே தகவல் தொழில் நுட்ப புரட்சி மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது என்று சொன்னால் ராஜீவ்காந்தியை நன்றியோடு நினைத்து பார்க்கிற அந்த நல்ல நேரம் இந்த நேரம்.

மத்தியிலே கூட்டணி அரசு அமைப்பதற்கு எல்லா மாநிலங்களில் இருந்து உதவிகள் வந்தாலும் கூட தமிழகத்தில் 2004-ம் ஆண்டு 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளையும், 2009-ம் ஆண்டு 40-க்கு 28 பாராளுமன்ற தொகுதிகளையும் தந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று நாடு முழுவதும் தமிழகம் உள்பட நிறைவேற்றப்பட்டு வருகிற மிகப்பிரமாண்டமான திட்டங்கள் இந்திரா அவாஸ் யோஜனா என்ற ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கிற திட்டம், ஜவகர்லால் நேரு தேசிய நகரமைப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சேவை திட்டம், மகாத்மாகாந்தி பெயரில் உள்ள கிராம வேலை உறுதி திட்டம், மதிய உணவு திட்டம் இப்படி எந்த திட்டமாக இருந்தாலும் மத்திய அரசு பெரும் நிதி உதவி அளித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களையும் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் சில திட்டங்களை நிறைவேற்ற போகிறோம். இந்த நல்ல நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்க ஆசைப்படுகிறேன். ஒவ்வொரு கிராமத்திற்கும் நீங்கள் செல்லவேண்டும், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்து வரும் நல்ல திட்டங்களை நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்லவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இந்த பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

தமிழகத்திலே நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் எது முக்கியம் என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி தனது தனித்துவத்தை இழந்து விடக்கூடாது என்பதிலே நாம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இந்த கட்சி முதன்மையான இடத்தை பெற்று மக்கள் மத்தியிலே மக்களுக்கு நெருக்கமான கட்சியாக இருக்கவேண்டும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திலே காங்கிரஸ் கட்சி தான் எதிர்காலத்தில் அரசியல் கட்சி என்கிற உணர்வோடு நமது கட்சியிலே இணைந்து இருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்கள் புதிய அரசியல் சக்தியாக புதிய உற்சாகத்தோடு தேசிய நீரோட்டத்தை வளப்படுத்துகிற அற்புதமான காட்சியை இன்று தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நிறைவேறி வருகிறது.

இந்த நாட்டின் ஒட்டு மொத்த ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள் 35 வயதுக்கு கீழானவர்கள் அவர்களது அபிலாசைகளை எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்றவேண்டும். அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். வருங்காலத்தில் வலிமையான தமிழகத்தை வலிமையான காங்கிரஸ் கட்சியை அமைக்க சபதம் ஏற்று உறுதி எடுக்கவேண்டும்.

உங்களுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். இது காங்கிரஸ் கட்சியின் புதிய சரித்திரத்தின் தொடக்கத்தை எழுதுகிற ஒரு அற்புதமான நிகழ்வு. இங்கே இருக்கிற ஒவ்வொரு இளைஞனையும் இளம்பெண்ணையும், நடுவயது காரர்கள், முதியவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருக்கிற ஒவ்வொருவரையும் நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், இந்த புதிய தொடக்கத்தை எழுதுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒன்று பட்டு உழைக்கவேண்டும். புதிய சரித்திரத்தை எழுதவேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கிறேன்.

இது ஒரு விழாக்காலம், இந்த விழாக்கால மகிழ்ச்சியை நாங்கள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே வந்து இருக்கிற ஒவ்வொருவருக்கும் எனது தசரா, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறன் என்றார் சோனியா காந்தி.

ஆங்கிலத்தில் பேசினார் சோனியா காந்தி. பேசத்தொடங்கும் முன்பு சகோதர சகோதரிகளே என்று தமிழில் ஆரம்பித்த சோனியா முடிக்கும்போது நன்றி, வணக்கம் என்று கூறி முடித்தார்.

மேடையில் சோனியா காந்தியைத் தவிர காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் இருந்தனர்.மாநில தலைவர் தங்கபாலு வரவேற்றுப் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X