For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

234 தொகுதிகளுக்கும் தொகுதிக்கு 15 பேர் வீதம் அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார்!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: காங்கிரஸ் இருக்குமா, போகுமா என்ற எதிர்பார்ப்பில் மட்டும் தீவிரமாக திமுக இருந்து வரும் நிலையில், மறுபக்கம் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக படு வேகமாக காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது சட்டசபைத் தேர்தல் தொடர்பாக.

அதிமுக முகாமில் பல்வேறு வேலைகள் படு ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேட்பாளர் பட்டியலை கிட்டத்தட்ட முடித்து விட்டார் ஜெயலலிதா என்றும் கூறப்படுகிறது.

அதாவது தொகுதிக்கு 15 பேர் வீதம் 234 தொகுதிகளுக்கும் 3510 பேர் கொண்ட ஒரு உத்தேச வேட்பாளர் பட்டியலை அவர் தயாரித்து முடித்து விட்டாராம். இந்த பட்டியலிலிருந்துதான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தேச பட்டியல் தயாரிப்புப் பணியில் சில முக்கியமான காவல்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிளாம். இவர்களின் உதவியோடுதான் 3510 பேரையும் ஜெயலலிதா தேர்வு செய்து வைத்துள்ளாராம்.

சில முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளார் ஜெயலலிதா. இந்த புதிய விரிவடைந்த கூட்டணி நிச்சயம் திமுகவுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதும் அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

இதுபோக திமுக அரசு மீது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெருகி வரும் பல்வேறு மட்டத்திலான அதிருப்தி அலைகளும் ஜெயலலிதாவை படு உற்சாகமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேகத்தில்தான் தற்போது வேட்பாளர் உத்தேசப் பட்டியலையே அவர் தயாரித்து முடித்து விட்டாராம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய மூன்று கட்சிகள்தான் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ள கட்சிளாகும்.

தேமுதிக, தொகுதி வாரியாக பொறுப்பாளர்களைப் போட்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. வார்டு வாரியாக, கிளை வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்து வருகிறது தேமுதிக.

பாமக குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து வைத்து அங்கு நமக்கான வெற்றி வாய்ப்பு என்ன என்பதை ஆராய்ந்து அந்த கோணத்தில் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில்தான் அதிமுக மேலும் ஒரு படி மேலே போய் வேட்பாளர் பட்டியலையே ரெடி செய்து விட்டது.

வேட்பாளர் உத்தேசப் பட்டியலை கட்சியினர் யாருக்கும் தெரியாமலேயே, குறிப்பாக மாவட்ட செயலாளர்களுக்குக்கூட தெரியாமல் ஜெயலலிதா தயாரித்துள்ளாராம். முழுக்க முழுக்க தனக்கு விசுவாசமான காவல்துறை அதிகாரிகளை மட்டும் வைத்து இதை தேர்வு செய்துள்ளாராம்.

கட்சிக்காரர்களிடம் இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் பணியைக் கொடுத்தால் பாலிட்டிக்ஸ் செய்து பாழாக்கி விடுவார்கள் என்பதால்தான் காவல்துறையை நம்பினாராம் ஜெயலலிதா. தற்போது இந்தப் பட்டியலில் உள்ளவர்களை மேலும் வடிகட்டி அதிலிருந்து இறுதி வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா தேர்வு செய்வார் என்று தெரிகிறது.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா தேர்வு செய்திருந்தாலும் கூட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கிடையே சமீபத்தில் தான் நியமித்த தொகுதி செயலாளர்கள் பலரை கட்டம் கட்டி ஓரம் கட்ட ஜெயலலிதா தீர்மானித்துள்ளாராம். எம்.ஜி.ஆர். காலத்தில் தொகுதி செயலாளர்கள் நியமனம் பிரபலமாக இருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர்.

ஜெயலலிதாவும் சமீபத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் செயலாளர்களை நியமித்தார். இதையடுத்து நாம்தான் வேட்பாளர் என்ற கோதாவில் குஷியாகி விட்டனர் இவர்கள்.இதனால் இவர்களுக்கு்க கொடுக்கப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகளில் அக்கறை காட்டாமல் காசு பார்க்கத் தொடங்கி விட்டனர். பலர் கட்சி வளர்ச்சிப் பணிகளை சுத்தமாக மறந்தே போய் விட்டனராம். இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும், பிறநிர்வாகிகளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே இதுபோன்ற தொகுதிச் செயலாளர்களை தூக்கி விட ஜெயலலிதா தீர்மானித்துள்ளாராம். யார் யார் தாறுமாறாக செயல்படுகிறார்கள் என்ற பட்டியலை அவர் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கேட்டுள்ளார். பட்டியல் வந்தவுடன் களையெடுப்பு நடக்குமாம்.

மதுரை கூட்டத்திற்குப் பின்னர் அதிரடி மாற்றங்கள் நிறைய இருக்கும் என்கிறார்கள்.

3 நாட்களுக்கு 39வது ஆண்டு விழா:

இதற்கிடையே, அதிமுகவின் 39-வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாட்களுக்குப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க, கட்சியின் 39-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் 22.10.2010 வெள்ளிக் கிழமை முதல் 24.10.2010 ஞாயிற்றுக் கிழமை வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X