For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒற்றுமையாக இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நாம் ஒற்றுமையுடன் இருந்து, தேர்தலில் வெற்றிக்காக போரிட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆரிய அம்மையார் ஆட்சி வந்து விடும், தமிழ்நாடு மூட நம்பிக்கைகள் படர்ந்த காடாகி விடும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

நேற்று கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.

கோவை மாவட்ட நிர்வாகிகளிடையே முதல்வர் பேசியதாவது:

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓரளவு ஒற்றுமை, செல்வாக்கு இருந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியது - நற்பெயரை ஈட்டித் தந்ததோடு; தி.மு.கழகத்தின் செல்வாக்கையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும்; கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் கழகத்திற்குத் தற்போது சுமார் 30 முதல் 38 சதவிகித வாக்குகள் உள்ள நிலையில், இஸ்லாமியருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு - அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடும் வழங்கியதும், அந்தச் சமூக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது.

கூட்டணிக் கட்சியினரோடும் இணக்கமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளிடையே நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளை முழுமையாகக் களைவதன்மூலம், தொகுதிகளுக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் - மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி வாய்ப்பு உள்ளது என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த 9 என்பது, 10 ஆகவும் உயரலாம் - நான் கோவை மாவட்டத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த நம்பகமான, நடுநிலையான தகவலைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால், அந்தத் தகவல் எனக்கும் உங்களுக்கும் எதை அறிவுறுத்துகிறது என்றால், நான் சொல்லப் போகின்ற சில விஷயங்களைப் பற்றி இந்தக் கூட்டத்திலே இருக்கின்றவர்களுடைய உள்ளத்தைப் பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், கழகத்தினுடைய தலைவர் இங்கே சில விஷயங்களைச் சொல்லி, என்னைப் புண்படுத்திவிட்டாரே? என்று எண்ணாமல்; ஆபரேஷன் நேரத்திலே புண்படுத்தாமல் எந்த டாக்டரும் சிகிச்சை செய்ய முடியாது என்பதால், அப்படி நீங்கள் இதனைக் கருதிக் கொள்ள வேண்டுமென்று அதைச் சொல்ல விரும்புகிறேன்.

நான் அறிந்த தகவல்களை இங்கே பெரிதுபடுத்தி, ஒரு விசாரணை மன்றம் அமைத்து, இது உண்மையா அல்லது பொய்யா அல்லது உண்மைக்கு மாறானதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. தவறே இருந்தாலும், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய தவறினாலும், அவற்றையெல்லாம் திருத்திக் கொண்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் - ஒன்றுபட்டுப் போரிட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டத்தான் இந்தக் கூட்டம் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு கழக உறுப்பினரும் மறந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தந்தை பெரியாரும், அவர் வழியில் வந்த அண்ணாவும், இந்த இயக்கத்தை உருவாக்கி, அதை வளர்த்து, எங்கள் கையிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுக்களைப் பெற்று, இந்தக் கழகத்தை ஆட்சியிலே அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியினுடைய கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு, ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று எண்ணுகின்ற யாரும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கத் தகுதி உள்ளவர்கள் அல்ல. அது எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிப்பட, நம்முடைய கொள்கைகள் வெற்றி பெற - நாடு பலன் பெற இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஒருவேளை, ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம்.

தி.மு.க.வின் வெற்றிக்காகப் போராடுவோம் என்றால், திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகளுக்காக கடைசி வரையிலே போராடக் கூடிய சுபாவமும், அந்த உறுதியும் நமக்கு என்றென்றும் உண்டு. அந்த உறுதியோடுதான் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இதற்கிடையிலே, கொள்கை மாற்றங்களால், லட்சியங்களால் மாறுபடாமல்; நிர்வாக ரீதியாக வேறுபட்டு, இந்த இயக்கத்தை ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற பகுதிக் கழகத்தை, கிளைக் கழகத்தை, மன்றங்களை - அது மகளிர் மன்றமானாலும் அந்த மன்றத்தை, தொழிலாளர் இயக்கமானாலும், அந்த இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதிலே வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற தேர்தலிலே வெற்றி பெற முடியாது. வெற்றி பெறாவிட்டால், நான் எனக்குச் சொல்வதாகக் கருதக்கூடாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. அதை மறந்து விடக்கூடாது - பெரியாருடைய கொள்கை இருக்கிறது - அண்ணாவினுடைய லட்சியம் இருக்கிறது. அந்த இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்தால்தான் நிலைக்கும்; அவைகளைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும்.

நாளைக்கு நம்முடைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, வேறு ஒரு ஆட்சி - பார்ப்பனியத்தைப் பாதுகாக்கிற ஆட்சி - பக்கபலமாக இருக்கின்ற ஆட்சி இந்தத் தமிழகத்திலே வருமேயானால் என்ன ஆகும்? நான் இங்கே சொன்னேனே, நண்பர்கள் பேசும்போது, நம்முடைய தம்பி கண்ணப்பன் பேசும்போது கூடக் குறிப்பிட்டு, இந்த அண்ணா என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னேனே, ஏன்? அண்ணா தி.மு.க. என்று சொல்லாதீர்கள் என்றேன். அருமை நண்பர் எம்.ஜி.ஆர். - அந்தப் பெயரை வைத்தபோது, அவர் அந்தப் பெயரை வைக்கத் தகுதி படைத்தவர் என்றுகூட நான் கருதியதுண்டு. அப்படிக் கருதியதால் தான், அதைப்பற்றிய அபிப்பிராயத்தை இன்றைக்கும் நான் அறுதியிட்டுச் சொல்லக்கூடிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கின்றேன்.

ஆண்டாண்டுதோறும் விஜயதசமி கொண்டாடுகின்ற அம்மையாருடைய ஆட்சியிலே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது? எந்தக் காரியமானாலும், அதற்கொரு யாகம் நடத்தி, பூஜை நடத்தி, அந்தப் பூஜைக்குப் பிறகுதான், அந்தக் காரியத்திலேபோய் இறங்குவது என்று எண்ணுகின்ற ஒரு ஆரிய அம்மையார் ஆட்சியில் அண்ணாவுக்கு என்ன வேலையிருக்கிறது? இந்த ஆட்சி போனால் - நீங்கள் ஞாபகத்திலே வைத்துக் கொள்ளுங்கள் - போகப் போவதுமில்லை; அது நடக்கப் போவதுமில்லை.

இருந்தாலும், நீங்கள் ஒரு யூகமாக எண்ணிப் பார்த்தால், நம்முடைய ஆட்சி போய்விட்டால், வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி அம்மையாருடைய ஆட்சியாக இருக்குமேயானால், அங்கே அண்ணாவினுடைய கொள்கைகளுக்கு இடமில்லை; பெரியாருடைய கொள்கைகளுக்கு இடமில்லை; சாதி மறுப்புக்கு இடமில்லை; மூட நம்பிக்கை மறுப்புக்கு இடமில்லை. அப்படிப்பட்ட மௌடீகம், மூட நம்பிக்கை படர்ந்து, காடாக ஆகியிருக்கின்ற ஒரு நாட்டைத்தான் தமிழகத்திலே நாம் காண நேரிடும்.

முக்கியமாக, நாம் வெற்றி பெற வேண்டுமென்று - நானோ, இந்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற நம்முடைய கழகத் தலைவர்களோ எண்ணுவதற்குக் காரணம், எழுதுவதற்குக் காரணம், உங்களையெல்லாம் அழைத்துப் பேசுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல; அல்லவே அல்ல; முக்காலும் இல்லை; நிச்சயமாக இல்லை.

எங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, நாம் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கு, உங்களை அழைக்கிறோம் என்று இந்த நாட்டு மக்கள் தந்துள்ள பொறுப்பு, பெரியார் வழங்கிய பொறுப்பு, அண்ணா தந்துள்ள பொறுப்பு, இவைகளைக் காப்பாற்றமுடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கமே தவிர; இந்த இயக்கத்தை - திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்த முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அல்ல. அந்தக் கவலை ஏற்படாது. அந்தக் கவலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

இந்தியாவிலே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய நூலகத்தை ஏற்படுத்துகிறோம் என்றால், ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால், இவைகளெல்லாம் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒருவேளை - நடக்காது - நடக்கக்கூடாது. நாம் மாற்றப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அதை நாம் காணப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு ஏற்பட வேண்டும் - தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா?

தஞ்சையிலே இராஜராஜனுக்கு விழா எடுத்தோம் என்றால், கோவையிலே செம்மொழி மாநாடு நடத்தினோம் என்றால், அங்கெல்லாம் நம்முடைய இலக்கியத்தை, காவியங்களை, நூல்களை நாம் பெற்றிருந்த கலைகளை, சரித்திர ஆதாரங்களையெல்லாம் நினைவூட்டக்கூடிய சொற்பொழிவுகள், நாடகங்கள், கூத்துக்கள் இத்தனையும் அங்கே நடைபெற்றன என்றால் அதற்கு என்ன காரணம்? நம்முடைய இயக்கத்தினுடைய ஆட்சி நடை பெறுவதுதான் காரணம். இதற்கு ஒரு இம்மியளவு ஊனம் வந்தாலும், இந்த ஆட்சி போய்விட்டால் - இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார். பெரியார் கடந்த காலமாகிவிடுவார் - என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆகவே, நாம் எல்லோரும் தமிழர்கள் - எல்லோரும் திராவிடர்கள் - எல்லோரும் சுயமரியாதைக்காரர்கள் - எல்லோரும் பெரியாரின் பிள்ளைகள் - எல்லோரும் அண்ணாவின் தம்பிகள் என்ற அந்த உணர்வோடு நாம் ஒன்றுபடுவோம்; தொடர்ந்து நமது அணியை நடத்திச் செல்வோம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X