For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி ஷாப்பிங்... திணறும் தி நகர்!

Google Oneindia Tamil News

T Nagar
சென்னை: தீபாவளி நெருங்கிவிட்டதால் மக்கள் துணிகள் மற்றும் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்க சென்னையில் குவிந்துள்ளனர் மக்கள். குறிப்பாக தியாகராய நகரில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஜவுளிக் கடைகளுக்கு வந்ததால் போக்குவரத்து திணறிப் போனது.

ஜவுளி, பாத்திரங்கள், நகைகள் என எல்லாவற்றுக்கும் சென்னையில் மக்கள் நாடும் முதல் இடம் தி நகர்தான்.

சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான ஜவுளிக்கடைகள் இங்குள்ளன. இந்தக் கடைகள் அனைத்திலுமே கூட்டம் திமிலோகப்படுகிறது.

நகை மற்றும் பேன்சி பொருட்கள் கடைகளிலும் அத்தனை சுலபத்தில் உள்ளே நுழைய முடிவதில்லை. தங்கம் சவரனுக்கு ரூ 15000க்கும் மேலே விற்கப்படுகிறது (சேதாரமெல்லாம் சேர்த்து ரூ 16000). ஆனாலும் மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தி.நகருக்கு மட்டும் சுமார் 2,500 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் நெரிசலைக் கருத்தில் கொண்டு தி நகர் பகுதியின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தும் சாலையில் நடக்கக் கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது.

ரங்கநாதன் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். நேற்று மட்டும் ஒரேநாளில் 10 லட்சம் மக்கள் திநகரில் குவிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிலர் சைக்கிள்களை தலையில் தூக்கிக் கொண்டு சாலைகளை கடந்த காட்சியைப் பார்க்க முடிந்தது.

கூட்டத்தை கண்காணிக்க 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பாதுகாப்பு பணிகள் போலீசார் மேற்கொள்கின்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பிக்பாக்கெட், செயின் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருடர்களை பிடிக்க போலீசார் மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், ஒலி பெருக்கி மூலம் "உங்களுடைய குழந்தைகள் பத்திரம்; பொருட்கள் பத்திரம்" என பொதுமக்களை போலீசார் உஷார்படுத்தி வருகின்றனர்.

வாகனங்கள் நிறுத்துவது மக்களுக்குப் பெரும் பாடாக உள்ளது. முன்பு தி நகர் பாலத்தின் அடியில் நிறுத்தி வந்தனர். இப்போது அங்கு நிறுத்தக் கூடாது எனழ அறிவிக்கப்பட்டதால், பள்ளி ஒன்றில் நிறுத்த வேண்டியுள்ளது. தனியார் வாகன நிறுத்துமிடங்களில் மணிக்கு 5 ரூபாய் என வசூலிக்கின்றனர்.

பிரபலமான சில ஜவுளிக் கடைகள் பார்க்கிங் வசதியை அளிக்கின்றன. ஆனால் அந்தக் கடையில் ஏதேனும் பொருள் வாங்காமல் உங்களால் மீண்டும் வாகனங்களை எடுக்க முடியாது. சில கடைகளில் இப்படி பொருள் வாங்காமல் வாகனம் மட்டும் நிறுத்த ரூ 200 வரை செலுத்த வேண்டும் என்கிறார்கள். இந்தத் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவே, பெயருக்கு ஒரு பொருளை வாங்கி பில்லைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துச் செல்கிறார்கள்!

நெல்லை மாவட்டத்தில் தீபாவளி களை கட்டுகிறது

இதேபோல நெல்லை மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது.

தீபாவளி பண்டிக்கை இன்னும் சில நாட்களே உள்ளதால் ஜவுளி கடைகளில் கூட்டம அலைமோதி வருகிறது.

நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களான நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய பெரிய ஜவுளி கடைகள் மட்டுமின்றி சாதாரண ஜவுளி கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

'எந்திரன் ஐஸ்வர்யா'வுக்கு செம கிராக்கி!

மேலும் பெண்கள் மத்தியில் எந்திரன் ஐஸ்வர்யா ராய் மாடல் சேலை விற்பனை ஜோராய் நடக்கிறது. முன் மாதிரி புது துணிகள் டெய்லர் கடைக்கு கொண்டு செல்வது குறைந்து ரெடிமேட் ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் நெல்லை மாவட்டத்தில் ஜவுளி கடைகளில் தீபாவளி விற்பனை வெகு ஜோராய் உள்ளது. ஜவுளி கடைகள், நகை கடைகளிலும் மக்கள் கூட்டத்தை கவரும் வண்ணம் அன்பளிப்பு அறிவிப்புகள், தள்ளுபடி, அறிவிப்புகளூம் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X