For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை கார்கில் வீட்டு வசதி ஊழலில் அமைச்சர்கள் ஷிண்டே, விலாஸ் ராவ் தேஷ்முக்குக்கும் தொடர்பு?

Google Oneindia Tamil News

Vilasrao Deshmukh and Shinde
மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவானுக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மத்திய அமைச்சர்களாக உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த இருவரும் மகாராஷ்டிராவில் முதல்வர்களாக இருந்தவர்கள். கோஷ்டிப் பூசல் மற்றும் மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அடுத்தடுத்து இருவரும் பதவி விலகினர். இவர்களைத் தொடர்ந்தே அசோக் சவான் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு எதிராக தற்போது சவானின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சவான் விலகுவதாக இருந்தால் இந்த இருவரும் கூட அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சவான் விலகுவதாக இருந்தால், கூடவே ஷிண்டே, தேஷ்முக்கும் விலக வேண்டும். காரணம், சவானை விட இவர்களுக்குத்தான் ஊழலில் பெரும் பங்கு உள்ளது. இவர்கள் முதல்வர்களாக இருந்தபோதுதான் பெருமளவிலான வீடுகள் ஒதுக்கப்பட்டன என்று கூறுகின்றனர்.

மேலும் ஷிண்டே, தேஷ்முக் முதல்வர்களாக இருந்தபோது யார்யாருக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டன, என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்பது குறித்த பட்டியலையும் அவர்கள் தயாரித்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பவுள்ளனராம்.

இவற்றை அசோக் சவானே நேரடியாக அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியிடம் கொடுப்பார் என்று தெரிகிறது.

இந்த பட்டியலுடன், வீடுவ ஒதுக்கீடு தொடர்பான 11 கடிதங்களையும் சவான் தரப்பு காங்கிரஸ் மேலிடத்தில் கொடுக்கவுள்ஏளது.

இதுகுறித்து சவான் தரப்பு மேலும் கூறுகையில், ஆதர்ஷ் சொசைட்டி கொலாபாவில் நிலம் தரக் கோரி கடந்த 1999ம் ஆண்டு நாராயண் ரானே முதல்வராக இருந்தபோது கடிதம் கொடுத்தது. பின்னர் ராணே பதவிக்காலம் முடிந்த பின்னர் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் 2000மாவது ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் கடிதம் கொடுத்தது.

இந்தக் கடிதத்திற்கு ஒப்புதல் அளித்து உடனடியாக இதைப் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார் தேஷ்முக். மேலும், மும்பை கலெக்டரிடம் அறிக்கையும் கோரியது அப்போதைய தேஷ்முக் அரசு. 2000மாவது ஆண்டு மே 12ம் தேதி கலெக்டர் தனது அறிக்கையை அளித்தார்.

கலெக்டர் தனது அறிக்கையில், ஆதர்ஷ் சொசைட்டி கோரும் இடம் மாநில அரசுக்குச் சொந்தமானது. மேலும், அதன் ஒரு பகுதி சாலையை ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

பின்னர் பாதுகாப்புத் துறையின் எல்லைக்கு அப்பால் உள்ள இடம் என்பதால் அந்த இடத்தை ஆதர்ஷ் சொசைட்டிக்கு ஒதுக்கலாம் என்று கூறி 2000மாவது ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி ஒரு ஆட்சேபனைஇல்லை சான்றிதழை அளித்தது.

பின்னர் இதுதொடர்பான பார்மாலிட்டிக்களை வருவாய்த்துறையினர் முடித்து, 2003ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி நிலத்தை ஒதுக்கீடு செய்து முதல்வர் தேஷ்முக் உத்தரவிட்டார்.

பின்னர் ஷிண்டே முதல்வரானார். அவர் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் எழுதி, இந்த இடத்தில் கட்டடம் கட்ட அனுமதிக்குமாறு கோரினார். மத்திய அமைச்சகம், 2003ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அனுப்பிய பதிலில் இதுதொடர்பான அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது என்று கூறியிருந்தது.

இதையடுத்து அனுமதி தருமாறு கூறி மும்பை மாநகராட்சிக்கு முதல்வர் ஷிண்டே கடிதம் எழுதினார். பின்னர் ஆதர்ஷ் சொசைட்டிக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து 2004ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சிவாஜிராவ் நிலங்கேகர் பாட்டீலும், முதல்வர் ஷி்ண்டேவும் உத்தரவிட்டனர்.

அப்போது 20 பேருக்கான ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மேலும் 51 பேர் கொண்ட பட்டியலுக்கும் முதல்வர் ஒப்புதல் அளித்தார். புதிய உறுப்பினர்களை அங்கீகரிக்குமாறு கூறி மும்பை கலெக்டருக்கு 2004ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அவர் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.

நிலத்தை ஒதுக்கியபோது அது கார்கில் போர் வீரர்களுக்கான அல்லது அவர்களது குடும்பத்தினருக்கான, விதவைகளுக்கான இடம் என்று குறிப்பிடப்படவில்லை. 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் கார்கில் போர் வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இங்கு சில வீடுகளை ஒதுக்கலாம் என கடிதம் அனுப்பப்பட்டது. அதை அரசு அங்கீகரித்தது என்று சவான் தரப்பு கூறுகிறது.

இப்படிக் கூறுவதன் மூலம் பிரச்சினைக்குக் காரணம் தேஷ்முக்கும், ஷிண்டேவும்தான் என்று சவான் தரப்பு பிரச்சினையை அப்படியே அவர்கள் பக்கம் திருப்பி விடப் பார்ப்பதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X