For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்க ஒபாமா ஆதரவு

Google Oneindia Tamil News

Obama at Parliament
டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க ஆதரவு தருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று காலை ராஷ்டிரபதி பவனில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்புக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்திய மக்கள் அளித்த சிறப்பான விருந்தோம்பல் மிகவும் அசாதாரணமானது. இதற்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நானும், எனது மனைவியும் அமெரிக்க மக்களின் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறோம்.

உலக அமைதிக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படும். இரு நாடுகளுக்காக மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

இரு நாடுகளும் மிகவும் அசாதாரணமான மக்கள் தொடர்பை பேணி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின்போது வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச பொருளாதாரத்தில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாதத்திற்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிப்பேன்.

இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்கனவே வலுவான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்த நான் உறுதியாக உள்ளேன். 21வது நூற்றாண்டின் இணையற்ற பங்குதாரர்களாக இந்த இரு நாடுகளும் விளங்க வகை செய்வேன் என்றார் ஒபாமா.

அதன் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஒபாமா.

இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார் ஒபாமா. 20 நிமிடங்கள் வரை மட்டுமே ஒபாமா பேசுவார் என முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால் 45 நிமிடங்கள் பேசினார் ஒபாமா. தனது பேச்சு முழுவதும் இந்தியாவையும், இந்திய மக்களையும், மகாத்மா காந்தியையும், இந்தியாவின் சிறப்புகளையும் வெகுவாகப் பாராட்டினார் ஒபாமா.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வந்த ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோல்டன் புக் எனப்படும் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார் ஒபாமா.

இதையடுத்து மைய மண்டபத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், பிரதமர் மன்மோகன் சிங், எம்.பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டின் நட்பை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.நானும், எனது மனைவி மிஷலும் இந்தியாவன் விருந்தோம்பலால் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்தியாவின் பன்முகத்தையும், அழகையும் கண்டு வியந்து போயுள்ளோம். பஹூத் தன்யவாத் (மிகுந்த நன்றி)

இந்தியா வளர்ந்து வரும் நாடு இல்லை. ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு. எனது முதல் ஆசிய பயணத்தில் முதலில் இந்தியாவுக்கு வருவது தற்செயலானது அல்ல. திட்டமிட்டுதான் நான் இந்தியாவுக்கு வந்துள்ளேன். ஆசியாவிலும், உலக அரங்கிலும் இந்தியா வளர்ந்து விட்ட சக்தி மிக்க நாடு.

நான் அமெரிக்க அதிபராக உயர்ந்ததற்கு மகாத்மா காந்தியின் சிந்தனைகளும், அவரது தத்துவங்களுமே காரணம். இதை நான் மனதில் கொண்டுள்ளேன். உலகத்திற்கு அவர் போதித்தவை அனைத்தையும் நான் மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

அறிவியலிலும், கண்டுபிடிப்பிலும் மிகவும் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு இந்தியா. மனித வளத்தில் அடிப்படை நம்பிக்கைக் கொண்ட நாடு இந்தியா. அங்கு தொடங்கிய அடிப்படையில்தான் நள்ளிரவில் சுதந்திரம் பெறும் வரை இந்தியா வலுவானதாக உயர்ந்து நின்றது. சுதந்திர இந்தியாவாக மலர்ந்தது.

இது ஏழை நாடு, இங்கு மக்கள் கூட்டம் அதிகம், இது வளர்ச்சி பெறுவது கடினம் என்று ஏளனங்கள் செய்யப்பட்டபோதிலும், அதைத் தாண்டி இந்தியா வெற்றி பெற்றிருப்பதற்கு இந்தியாவின் ஜனநாயகமே காரணம். ஜனநாயகத்தால்தான் இன்று இந்தியா வெற்றிகரமான நாடாக திகழ்கிறது.

உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது இந்தியா. பட்டினியில் மூழ்கிப் போய் விடாமல் பசுமைப் புரட்சியை நிகழ்த்திய நாடு இந்தியா. கோடானு கோடி மக்களுக்கு உணவைக் கொடுத்தது இந்தியா.

இந்தியா மாறியிருப்பதைப் போல இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளும் மாறியுள்ளன. சுதந்திரம் பெற்ற பின்னர் சில ஆண்டுகளுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் எதிரெதிர் அணிகளில் இருக்க நேரிட்டது. அந்த நாட்கள் முடிந்து விட்டன.

கடந்த இரண்டு இந்திய அரசாங்கங்களும் அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த உறவு இயற்கையானது, தேவையானது என்பதை அவை உணர்த்தியுள்ளன. அதேபோல அமெரிக்காவிலும் எனக்கு முன்பு இருந்தவர்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக அரங்கில் இந்தியா வளர்ந்துள்ளதைப் போல ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், ஐ.நா. சபையிலும் மறுமலர்ச்சி ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகிறது. மறு சீரமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவும் இடம் பெறுவதை வரவேற்கிறது.

இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளிலும் செயல்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் பலன்கள் கிடைக்கும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு முக்கியத் துறை பாதுகாப்பு. மும்பையில், காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். இன்று நான் நிற்கும் நாடாளுமன்றமும் கூட தாக்குலுக்குள்ளானதை நான் நினைவு கூர்கிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் மரணத்தை நாம் கெளரவிக்க வேண்டும்.

மும்பை சம்பவத்தில் இந்தியர்களைப் போல அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் அந்த சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இது வெளிக்காட்டுகிறது.

மும்பை சம்பவத்திற்குக் காரணமான அத்தனை குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நான் பாகிஸ்தான் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தப் போகிறேன். பாகிஸ்தான் எல்லைக்குள் தீவிரவாதிகள் முகாமிடுவதை ஏற்க முடியாது. மும்பை தாக்குதலுக்குக் காரணமான யாரும் தப்பக் கூடாது.

அதேபோல ஆப்கானிஸ்தானிலும், நிலையான பாகிஸ்தானை உருவாக்குவதிலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பேசுவது பிராந்திய பாதுகாப்புக்கு நல்லது. எனவே இதை நாங்கள் எப்போதும் வரவேற்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை நீங்கள் இருவருமே இணைந்து தீர்க்க முயல வேண்டும்.

உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற முறையில், நாம் பெற்ற சுதந்திரத்தை கட்டிக் காப்பதில் இரு நாடுகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இரு நாடுகளுமே மறந்து விடக் கூடாது.

இந்தியர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தரும் போராட்டத்தைத் தொடங்கும் முன், தென் ஆப்பிரிக்க மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடியவர் காந்தியடிகள். அதேபோல ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை சுதந்திரக் காற்று வீசுவதற்காக போராடியவர் காந்தியடிகள்.

இந்திய மக்கள் பல்வேறு தடைகளைத் தகர்த்து வளர்ந்தவர்கள். குறைந்த வாய்ப்புகளே இருந்தபோதிலும் அதைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது இந்தியா. சில பல வருடங்களலேயே இந்த சாதனையை செய்ய முடிந்துள்ளது பாராட்டுக்குரியது.

உலகின் சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா வளர்ந்து நிற்கிறது. இது உங்களது பாட்டன்மார்களின் கனவு. அதை நீங்கள் இன்று நிறைவேற்றியுள்ளீர்கள். இதை நாளை உங்களது பேரப்பிள்ளைகள் நினைத்துப் பார்ப்பார்கள். ஆனால் இன்றைய இந்தியர்கள் இந்த பலத்தை மேலும் வலுவாக்க தொடர்ந்து முயல வேண்டும். உழைக்க வேண்டும். தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய, அமெரிக்க கூட்டுறவு நீண்ட காலம் வாழ்க என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த் என்று கூறி முடித்தார் ஒபாமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X