For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’தாக்கி’ பேசியவர்கள் தாங்கி’ பேசியிருக்கிறார்கள்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: காவலர்களை தாக்கி" பேசும் கம்யூனிஸ்டுகள் இன்றைக்குத் தாங்கி" பேசியிருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:

எம். அன்பழகன்: பழனி நகரில் காவலர்களுக்கு அடுக்குமாடிக்குடியிருப்புகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?
முதல்வர் கருணாநிதி: 2008-2009ம் ஆண்டில் பழனி நகரில் பணிபுரியும் காவலர்களுக்கு 32 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அரசாணை 18-11-2008ல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இவற்றில் இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை கற்காரை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு பிரிவுகளில் முதல் தள கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுமானப் பணிகள் வருகிற மார்ச் 2011ல் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மு. அப்பாவு: தமிழ்நாட்டில் இதுவரை காவலர்களுக்காக எத்தனை குடியிருப்புகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல்வர் கருணாநிதி: தமிழகத்தில் இருக்கின்ற மொத்தம் உள்ள காவல் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 783 ஆகும். தற்போது மொத்தம் 45 ஆயிரத்து 847 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, அந்தப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜி.கே. மணி: சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மேட்டூர் நகரில் காவலர்களுக்கு குடியிருப்பு இல்லை என்ற கோரிக்கை இருக்கிறது. மேட்டூர் காவல் நிலையம் பழமையான காவல் நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஓட்டுக் கட்டடமாகும். அது குறுகிய இடத்தில் இயங்கி வருகின்றது. இதுகுறித்து நான் ஏற்கெனவே சட்ட மன்றத்தில் பேசியபோது, முதல்வர் அவர்கள் அங்கே காவல் நிலையம் புதிதாகக் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். அது இன்னும் தொடங்கப்படவில்லை. ஆகவே, நடப்பாண்டில் மேட்டூர் வட்டக் காவல் நிலையம் கட்டப்படுமா?

மேலும் மேட்டூர் அணைதான் தமிழ்நாட்டின் வாழ்வா தாரத்தைக் கொடுக்கிற, தஞ்சைத் தரணியை உருவாக்குகிற உயிர்நாடி அணையாக இருக்கிறது. அதற்கு நிரந்தரமாகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில், காவலர்கள் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆகவே, ஒரு அணி மேட்டூர் அணையின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுமா?

முதல்வர் கருணாநிதி: மேட்டூர் அணையைப் பாதுகாப்பது என்பது காவலர்களால் மாத்திரம் முடிகின்ற காரியமல்ல; அதற்குரிய விதிமுறைகள், சட்டங்கள், அணுகுமுறைகள் - இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் மேட்டூர் அணையானாலும் அல்லது எந்த அணையானாலும்- அவற்றைப் பாதுகாக்க முடியும். மேட்டூர் அணைப் பகுதியிலே எந்தவிதமான கலவரமும் கிடையாது. ஆகவே, அங்கே காவலர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அணையைப் பாதுகாக்க- அணையினுடைய பயன்பாட்டை யாரும் பாழ்படுத்தி விடாமல் தடுத்து நிறுத்த காவலர்கள் தேவையே தவிர, மேட்டூர் அணையைப் பாதுகாப்பதற்கு காவலர்களால் முடியாது. நாட்டை ஆளுகின்றவர்களால்தான் முடியும்-நம்மால் முடியும்.

வை. சிவபுண்ணியம்: முதல்வர் அவர்கள் தமிழகத்தில் எத்தனை காவலர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கைச் சொன்னார்கள். தமிழகத்தில் மேலும் கூடுதலாகக் காவலர்கள் தேவைப்படுவதாக நான் அறிகிறேன். பல காவல் நிலையங்களிலே போதுமான காவலர்கள் இருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குப் பணிச் சுமை ஏற்படுகிறது. ஆகவே, கூடுதலாகக் காவலர்களைத் தேர்வு செய்வதற்கும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்வதற்கு அரசிடம் உத்தேசம் இருக்கிறதா?

அவர்களுக்கு விடுமுறை என்பதே இல்லாத நிலை இருக்கிறது. ஆகவே, வாரம் ஒரு நாள் அல்லது அரை நாளாவது அவர்களுக்கு விடுமுறை விடுவதன் மூலமாக- அவர்களின் மனநிலையைச் சரிசெய்து கொள்வதற்கு- அவர்களின் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களின் மன நிலையில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, அதன்மூலமாக நாட்டிற்கு நற்பலனை ஏற்படுத்து வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த முயற்சியைச் செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

முதல்வர் கருணாநிதி: காவலர்களை எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் தாக்கிப் பேசுவார்களோ; அந்தளவிற்கு இன்றைக்குத் “தாங்கி" பேசியிருக்கின்றார்கள். அவர்களுடைய வசதி, வாய்ப்பு, எண்ணிக்கைப் பெருக்கம்- இவைகளைப் பற்றியெல்லாம் அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. வெகு விரைவிலே காவலர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அந்தக் காவலர்களுக்கான வசதிகள் சீர்படுத்தப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X