For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா-மன்மோகன் மீது தாக்குதல்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு மேலிடம் நோட்டீஸ்!

Google Oneindia Tamil News

Jaganmohan Reddy
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தாக்கி காங்கிரஸ் எம்பி ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் சாக்ஷி தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை காங்கிரஸின் செய்திப் பிரிவு தலைவர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார்.

ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமானது சாக்ஷி டி.வி. மற்றும் செய்தித் தாள்.

கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் சோனியா காந்தியை விமர்சிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

இதில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சாற்றல் அற்ற தலைவர். அவருக்கு ஒரு தலைவருக்குரிய திறமை கிடையாது. அவரது செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சோனியா காந்தி, இந்தியாவின் குடியரசுத் தலைவரோ, பிரதமரோ இல்லை. எனினும் அவர்தான் நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறார்" என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி முழுக்க காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும் குறிவைத்து தாக்கும் விதத்தில் அமைந்திருந்தது. இடையிடையில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் விட்டு வைக்கவில்லை. மன்மோகன் சிங் ஒரு ரப்பர் ஸ்டாம்ப். அவருக்கு பிரதமருக்குரிய எந்த அதிகாரமும் கிடையாது என்றும் அதில் கூறப்பட்டது.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை மட்டுமல்லாது ஆந்திர காங்கிரஸôரையும் கடும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியது.

இதை புரிந்து கொண்ட சாக்ஷி டி.வி. நிர்வாகம் அதே நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒளிபரப்பியது. ஆனால் இந்த முறை சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு எதிரான விமர்சனங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டது.

இருப்பினும் காங்கிரஸாரின் கோபம் குறையவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவரின் டி.வி.யே சோனியாவை இப்படி தாக்கி நிகழ்ச்சியை ஒளிபரப்பலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயம் ஜகன்மோகன் ரெட்டியின் ஏற்பாட்டின் பேரில்தான் ஒளிபரப்பப்பட்டிருக்கும் என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜகன்மோகன் ரெட்டி தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த டி.வி. நிகழ்ச்சிக்கு, ராஜசேகர ரெட்டியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களும் இப்போதைய சுகாதார நல்வாழ்வு அமைச்சருமான தனம் நாகேந்தர், தகவல்தொழில்நுட்ப அமைச்சர் கோமதி ரெட்டி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பஞ்சகுடாவில் உள்ள ராஜசேகர ரெட்டியின் சிலை முன்பு அமர்ந்து ஜகன்மோகன் ரெட்டிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாக்ஷி டி.வி. தலைமை அலுவலகம் முன்பும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களின் போது ஜகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி தெலுங்கு செய்தித்தாள் பிரதிகளையும் தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதேபோல கரீம்நகர், சிராலா, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாக்ஷி டி.வி.யின் அலுவலகங்கள் முன்பும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஜகன்மோகனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் ஜகன்மோகன் ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் மேலிடம் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுத்துவிடாது என்றே கூறப்படுகிறது.

ஏன் இந்த வெறுப்பு?

ராஜசேகர ரெட்டி மறைந்தவுடன் தானே அடுத்த முதல்வர் என்று அவரது மகன் ஜகன்மோகன் ரெட்டி நினைத்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கட்சி அவரை முதல்வராக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜகன்மோகன் ரெட்டி கட்சித் தலைமைக்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார் என்று அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேசவ் ராவ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ள ஜகன்மோகன் ரெட்டி தனக்கு எதிராக கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் மூலம் மக்களின் அனுதாபத்தை பெற்று பெரிய தலைவராகி முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.

தன்னை நீக்க, காங்கிரஸைத் தூண்டவே இப்படி ஒரு நிகழ்ச்சியை ஜகன்மோகன் திட்டமிட்டு ஒளிபரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அது புரிந்ததால் மேலிடம் அமைதி காக்கிறதாம்.

ஆனாலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சிக்குள் அதிருப்தி வலுக்கும் என்பதால், இப்போது விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X