For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது மனு தர்மம் Vs மனித தர்ம போராட்டத்தின் முக்கிய கட்டம்: வீரமணி

Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா ஊழல் செய்தார் என்று சிஏஜி குற்றம் சாட்டவில்லை. அவருக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கையில் சில மீடியாக்கள் தொடர்ந்து ராஜாவை குற்றவாளி போல சித்தரித்து வருவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார் தி.க. தலைவர் கி.வீரமணி.

'ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்' என்ற பெயரில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் கருஞ்சட்டை தமிழர் ஆசிரியர் சுப.வீரபாண்டியன், மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதி்ல் பேசிய வீரமணி, எந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்ச்சி மக்களிடையே எரிமலையாக இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் என்பதெல்லாம் ஒரு புறத்தோற்றம். உண்மையிலேயே நடக்கின்ற போராட்டம் மனு தர்மத்திற்கும்- மனித தர்மத்திற்குமிடையே நடக்கின்ற போராட்டத்தின் முக்கிய கட்டம்.

இது வெறும் ராசா என்ற தனி நபரைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது ஆரிய- திராவிட போராட்டத்தின் முக்கியமான காலகட்டம். ஆதிக்கவர்க்கத்தால் பின்னப்பட்ட சதிவலை, கருணாநிதி சூத்திரர் ஆட்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருகின்றார். வரக்கூடிய தேர்தலிலே மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் பின்னப்பட்ட ஒரு சதிவலை.

ஊடகங்கள் சூத்திரர் ஆட்சிக்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றன. ராமாயண காலத்திலிருந்தே இதற்கு உதாரணம் இருக்கிறது. நம்மை சிந்திக்கவிடாமல் நமது மூளைக்கு விலங்கு போட்டார்கள்.

ராசா பதவி விலகிய நிகழ்ச்சி மிகப் பெரிய போராட்டத்தின் தொடர்ச்சி. மண்டல் கமிஷன் ஆணையை பிரதமராக இருந்த வி.பி.சிங் நடைமுறைப்படுத்தினார். அப்போது ஊடகங்கள் என்ன செய்தன தெரியுமா?. இடஒதுக்கீட்டை தொடர விட்டுவிடக் கூடாது என்று நினைத்த பார்ப்பன ஊடகத்தினர் அப்பாவி மாணவர்களைப் பிடித்து நீங்கள் தீக்குளிப்பதுபோல நாடகமாடுங்கள்.

உங்களுடைய முகம் தொலைக்காட்சியில் தெரிய வரும். உங்களுடைய முகங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளிலே வரும் என்று சொல்லி அவர்களை ஏமாற்றி உண்மையிலேயே தீக்குளிக்க வைத்து எரித்துக் கொன்றனர். பிறகு ஊடகத்துறையினரே அதை ஒப்புக்கொண்ட ஆதாரங்கள் இதோ எங்களிடம் உள்ளன.

எப்படி உயர்ஜாதிக்காரர்கள் தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வரும் என்று கருதியபோது எப்படி நாடகமாடினார்களோ அதே போன்ற நாடகத்தை ராசா விஷயத்திலும் பிரச்சனையாக ஆக்கியிருக்கிறார்கள். ராசா மீது சில ஊடகங்கள் வேட்டை ஆடுவது ஏன்?.

காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை ஊடகங்கள் அவர்களுடைய கையிலே தான் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சகோதரன் பெரிய பதவியில் இருப்பதா?. ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரன் முன்னேறி அமைச்சராகப் பெரிய பதவியில் இருப்பதா?. அவரை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள்.

ராசா மீது எங்கும், எந்த இடத்திலும் குற்றம் சாற்றப்படவில்லை. அதற்குரிய ஆதாரம் எங்குமே இல்லை. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் எங்கே போனது என்று கேட்கிறார்கள். வடமாநில ஆங்கில ஊடகத்தைப் பார்ப்பவர்கள் வெறும் 00.1 சதவிகிதம் என்று சொன்னார்கள்.

முதல்வர் கருணாநிதி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர். ராசா வீழ்ச்சி தற்காலிகமானதுதான். திமுக ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.

நீங்கள் எங்களிடம் வாதாட எந்த அரங்கத்திற்கு வந்தாலும் உங்களை சட்டரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அரசியல் சட்டம் 151வது சட்டப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறபடி மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முதலில் குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். உடனே நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை.

இது சட்டப்படி நடந்ததா? நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஊடகத்துறைக்கு இந்த அறிக்கை எப்படிக் கசிந்தது? எப்படி வெளியே வந்தது?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று எப்படிச் சொன்னார்கள்?. எனவே, இதைப்பற்றி ஒரு பெரிய விசாரணை கமிஷன் வைத்தால்தான் உண்மைகள் வெளியே வரும்.

டெல்லியில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி விட்டுச் செல்லும் பொழுது பிரதமர் மன்மோகன் சிங் அங்கே நின்று கொண்டிருந்த ராசா முதுகை தட்டிக் கொடுத்ததை தொலைக்காட்சியினர் திரும்பத் திரும்பக் காட்டினர்கள். ராசா நீ குற்றமற்றவன் என்பதை நானே உணருகிறேன்'' என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே.

பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும். இதுதானே உங்களுடைய மனு தர்மச் சட்டம். சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.

இந்தப் புகாரை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லுகின்ற வீரர்களை கேட்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் 60,000 கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது என்று சந்தேகப்படுகிறோம் என்று சொல்லுகிறார்களே! அப்படியானால் யார் வாங்கினார்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். இதற்காக உங்கள் மீது விரைவிலேயே ஒரு வழக்கு வரும்.

ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தது வெறும் அறிக்கைதானே! இதில் இவ்வளவு பரபரப்பு ஏன் காட்டப்பட வேண்டும்?.

ராசாவை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவைப் புரிந்து கொள்ளுங்கள். ராசா குற்றம் செய்தார் பணம் வாங்கினார் என்று எந்த இடத்திலாவது இருக்கிறதா?ஆதாரம் எங்கே என்று அட்டர்னி ஜெனரல் அந்தியார்ஜுனா கேள்வி கேட்டாரே. உச்சநீதிமன்றத்தில் இதற்கு என்ன பதில்?.

ராசா தனி மனிதரல்ல, திராவிட இனத்தின் தலை சிறந்த தளபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற கொள்கை பரப்புச் செயலாளர். மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராஜா ராஜா தான். தேர்தல் வரப்போகிறது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான ஊடகத்தை புறக்கணியுங்கள்.

சிலர் தமிழர் ஆட்சியை, திராவிடர் ஆட்சியை வீழ்த்த இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள். இது ஒரு போதும் அது நடக்காது. தமிழர்களே விழிப்பாக இருக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் அவரது ஆட்சியை மலரச்செய்வது ஒன்றுதான் நம் கடமை என்றார் வீரமணி.

ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் உள்ள செய்திகளை என்னிடம் வைத்துள்ளேன். இது 2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை உள்ள அறிக்கை. ஆனால் 2008ம் ஆண்டை மட்டும் இந்த அறிக்கை பெரிதுபடுத்திச் சொல்கிறது. மற்ற ஆண்டுகளைப் பற்றி இந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய தணிக்கை அதிகாரி எதை வேண்டுமானாலும் சொல்ல வேண்டும், நாங்கள் அதை நம்பவேண்டுமா?.

சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்த அதிகாரி, எனக்குத் தோன்றியதை நான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதாவது எதையும் படிக்காமல், எந்த ஆதாரத்தையும் வைக்காமல், எந்த புள்ளிவிவரத்தையும் படிக்காமல் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

அதாவது தான் தோன்றித்தனமாக இந்திய கணக்கு தலைமை அதிகாரி ஓர் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் மொத்த முதலீடே ரூ. 2 லட்சம் கோடி. அதில் எப்படி ரூ.1,76,000 கோடி ஊழல் நடந்திருக்கும்?.

தொலை தொடர்புத்துறை 2002ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகத்தில் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன், சுக்ராம் ஆகியோர் எல்லாம் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்லாமல் ராசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குவது ஏன்?.

இந்தத் துறையில் டிராய், மத்திய அமைச்சரவை எடுத்துதான் எல்லா முடிவுமே செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.

சுப.வீரபாண்டியன் பேசுகையி்ல், இங்கே ஜெகத் கஸ்பார் பேசுகையில் இரண்டு காரணங்களுக்காக ராசாவை எனக்குப் பிடித்திருக்கிறது என்றார். அதே இரண்டு காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அவரை வெறுக்கின்றன.

திமுகவை அழித்த கறுப்பு அடையாளம் என்று சொல்லி தாக்கினார்கள். கறுப்பு அடையாளம் பெரியார் கொடுத்தது. எனவே அது உங்களுக்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்.

சுப்பிரமணிய சாமி சொல்லுகிறார். ராசா உயிருக்கு ஆபத்து- யாரோ கொல்லப் போகிறார்கள் என்று சொல்லுகிறார். அப்படியானால் ராசாவை யாரோ கொலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே முதலில் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X