For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணமாச்ச்சாரிக்கு ஒரு நீதி, 'தலித்' ராஜாவுக்கு ஒரு நீதியா?-கருணாநிதி சாடல்

Google Oneindia Tamil News

Karunanidhi
வேலூர்: ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று இரவு நடந்த பிரமாண்ட திமுக பொதுக் கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதல்வரின் பேச்சு:

இன்றைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வந்தேன். வழிநெடுகிலும் கூடியிருந்த மக்கள் என்னை பார்த்து ஆண்டவன் செல்கிறார் என்று கூறியதாக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறினார். அப்படி கருதக்கூடாது என்றுதான் பெரியார், அண்ணா போராடினார்கள். அதனை நானும் மறுக்கிறேன்.

மனிதனை ஆண்டவனாக நம்பி ஏமாறுவதால்தான் அப்படி கருதக்கூடாது என்று பெரியார் கூறினார். அவருடைய குருகுலத்தில் பயின்றவன் நான். இங்கு என்னை ஆண்டவன் என்று கூறாமல் ஆள்பவன் போகிறான் என்று கூறியிருக்க வேண்டும். ஆண்டவனாக இருந்தால் லாபம் தான். மக்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு அப்படியே இருக்கலாம். தூங்கலாம். ஆனால் ஆள்பவனாகவே பணியாற்ற விரும்புகிறேன். ஆண்டவன் என்று கூறி மக்களை ஏமாற்றும் கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தை வீழ்த்துவது நமது கடமை.

ஆண்டவன் பெயராலும், மதத்தின் பெயராலும் ஏமாற்றமாட்டேன், ஏமாற்றவும் விடமாட்டேன். எழுச்சியுடன் இருக்கும் இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை உருவாக்க பெரியார், அண்ணா வழியில் வீறுநடை போடவேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் அவர்களாக ஒதுங்கி விட்டார்கள். எதற்காக பிரிந்தார்கள். என்ன தவறு செய்தோம். சோனியாகாந்தியுடன் கூட்டணி வைத்ததை தவிர வேறு எதை சொல்ல முடியும். அது தவறா?. நீங்களும், நாங்களும் சேர்ந்துதான் வெற்றிபெற்றோம்.

காங்கிரஸ் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சோனியாகாந்தி, பிரணாப்முகர்ஜி, மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசினோம். எனது வீடு, கட்சி அலுவலகத்திற்கு வந்து கம்யூனிஸ்டு கட்சியின் பிரகாஷ்கரத் காரத், ராஜா ஆகியோர் பேசினர். பேச்சு நடந்து கொண்டிருந்த போதே வெளியேறி விட்டார்கள். இது தொழிலாளர்களுக்கு எதிரான அரசு என அறிக்கை வெளியிட்டார்கள். என்னை பற்றியும், எனது குடும்பம் பற்றியும், கட்சி பற்றியும் பேசும் உச்சக்கட்டத்துக்கு சென்றார்கள்.

அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் காங்கிரசுடன் கைகோர்த்ததுதான். அது நீங்களும் சேர்ந்து ஏற்படுத்திய ஒப்பந்தம்தானே. தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் ஒன்றாக இருந்த கூட்டணி முறிந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட நிறுவனம். அதை பிளவு படுத்தியதால் கம்யூனிஸ்டு வெற்றிபெற முடியாமல் போனது. அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை. கம்யூனிஸ்டு வெற்றி பெறாதது வருத்தம்தான்.

கம்யூனிஸ்டுகளை கேட்கிறேன், இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்.

தி.மு.க. இன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசும், தமிழக அரசுக்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. அதை சில காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவது பிடிக்கவில்லை. சில விஷமிகள் தூண்டிவிட்டு உறவை கெடுக்க நினைக்கிறார்கள். உறவை யார் துண்டித்தாலும், துண்டிப்பவர்களுக்குதான் நஷ்டம்.

மேலே இருப்பவர்களுக்கு இனியும் இப்படி பேசாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு உள்ளது. நான் இதைவிட பெரிய பெரிய கூட்டங்களையும், மாநாடுகளையும் பார்த்தவன். அடக்கத்தோடு இருக்கிறேன்.

நாம் இரு சக்திகளாக இருந்து மதவாத சக்தியை தமிழ்நாட்டில், இந்தியாவில் அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் மதவாதம் புகுந்துவிடும். ஆகவே மதவாதத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தி.மு.க. அதை காங்கிரஸ் வலுப்படுத்தும் என்பதை அறிவுரையாக கூறுகிறேன். நாம் கைகோர்த்தால் மதவாதத்தை அழிக்க முடியும்.

இப்போது சட்டம் வென்றது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ராசா பற்றி பாராளுமன்றத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கூச்சல் போடுவற்கு பாராளுமன்றம் சந்தை அல்ல. அது கூடி பேசும் இடம்.

ராசா ராஜினாமா செய்தால் பாராளுமன்றம் அமைதியாக நடக்கும் என்றதால் ஜனநாயக முறையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு குழு விசாரணை வேண்டும் என்றார்கள். முந்த்ரா ஊழலில் மத்திய மந்திரி கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அறிவுரையை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். அதோடு கூச்சல்-குழப்பம் நின்று விட்டது. விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் எழுத கைஓடவில்லை.

ராசா விவகாரத்தில் அவர் ராஜினாமா செய்தபிறகும் ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுவதற்கு ராஜா தலித். ஆச்சாரிக்கு ஒரு நியாயம்?, தலித்துக்கு ஒரு நியாயமா?, இது சமதர்மமா?.

எனது அரசில் உமாசங்கர் மீது புகார் வந்ததும் விளக்கம் கேட்டோம். கம்யூனிஸ்டும், அ.தி.மு.க.வும் சேர்ந்து உமாசங்கர் தலித் என்ற காரணத்தால் அவரை கருணாநிதி ஒழிக்க பார்க்கிறார் என்றார்கள். அவரை ஒழிக்கவில்லை. விலக்கி வைத்தோம். பின்னர் அவருக்கு மீண்டும் பணி வழங்கியது கருணாநிதிதான்.

இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா?. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை முடிவில் அதற்கு ஏற்ப தி.மு.க. முடிவு செய்யும். இந்த அளவுக்கு வெறியாட்டம் போடுகிறார்கள். இதில் எத்தனை லட்சம் கோடி ஊழல் என்பதை நிரூபிக்க முடியுமா.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 10 ஆண்டுகளாக நடக்கிறது. இன்னும் தீர்ப்பு கூறப்படவில்லை. இன்னும் எத்தனை வாய்தா வாங்குவார்களோ தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்தும் அதை வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார்கள்.

1972-ம் ஆண்டு பெரியார் சொன்னார், இப்போது நடப்பது ஆரிய, திராவிட யுத்தம் என்றார். இப்போது அரசியல் ரீதியாக இந்த போராட்டம் நடக்கிறது. அதை சமாளிக்கும் பொறுப்பு நமது தோளுக்கு இருக்கிறது. திராவிட ஆட்சியில், அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க, எதிர்கால சமுதாயத்தை காக்க, நாம் வைத்திருப்பது ஒட்டு மீசை இல்லை என்பதை நிரூபிக்க, தமிழ்நாட்டில் இன்னும் ஓரணியில் திரள தி.மு.க. கை உயர்த்தி உள்ளது. அதில் நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கைகோர்த்து எழுச்சிபெற்று ஆரிய சூழ்ச்சியை ஒழிப்போம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X