For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய அரசியலைக் கலக்கும் நீரா ராடியாவும், அரசியல் தொடர்புகளும்

By Chakra
Google Oneindia Tamil News

Nira Radia
டெல்லி: இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

ஆனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியாக ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார் நீரா. ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனந்த்குமாருடன் நெருக்கமாக இருந்தபோதும் அது முடியாமல் போனது. இதேசமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம் அனுமதி பெறாமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா.

2001ல் டாடா குழுமம் பெரும் நிதி சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும்,டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.

2004ல் பாஜக ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஏ.ராஜாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராஜாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு ராஜாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராஜாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே நீரா ராடியாவுக்கு மிகப் பெரிய மிக நீண்ட சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X