For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரம்பியது மேட்டூர் அணை-மதுராந்தகம் ஏரியும் நிரம்பியது

By Chakra
Google Oneindia Tamil News

Mettur Dam
சென்னை & மேட்டூர்: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 3 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக நேற்று மாலை நிரம்பியது.

1934ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலம் தமிழகத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகம் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வருவதாலும் பெரும்பாலும் அந்தத் தேதியில் போதிய நீர் மேட்டூரில் இருப்பது இல்லை. இதனால் குறிப்பிட்ட அந்த நாளில் அணை திறக்கப்படுவதும் இல்லை.

இந் நிலையில் அணை கட்டப்பட்ட 76 ஆண்டுகளில் இப்போது 37வது முறையாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

நேற்று மாலை 5.15 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. அணையில் 124 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றாலும், பாதுகாப்பு கருதி 120 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்படுவதில்லை.

இதற்கு முன் கடைசியாக 12.8.2007ம் தேதி தான் அணையின் நீர்மட்டம் 122.68 அடியை எட்டியது. அதன்பிறகு இப்போது தான் 120 அடியை எட்டியுள்ளது.

இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதன்மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் செல்வதோடு அணையின் மின் நிலையம் மற்றும் கதவணையின் மின் நிலையம் ஆகியவற்றில் 210 மெகாவாட் அளவுக்கு மின்சாரமும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதகுகளில் சைரன்கள்:

இந் நிலையி்ல் அணையிலிருந்து நீர் வெளியேற்ற 16 கண் மதகு ஷட்டர்களை இயக்கும்போது, அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க ஒவ்வொரு மதகிலும் சைரன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த 2007ம் ஆண்டு மின் கசிவு காரணமாக ஒரு ஷட்டர் தானாகவே திறந்து கொண்டதால் வினாடிக்கு 20,000 கனஅடி நீர் காவிரியில் வெறியேறியது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் ஷட்டர் மூடப்பட்டு பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதையடுத்து நீர் வெளியேறும்போது மக்களை எச்சரிக்க சைரன் பொறுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி நிரம்பியது-24 கிராமங்களுக்கு அபாயம்:

இந் நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நேற்றிரவு நிரம்பியது.

உத்திரமேரூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடலமங்கலம் ஏரி நிரம்பி அதில் உடைப்பு ஏற்பட்டது. அந்தத் தண்ணீர் முழுவதும் மதுராந்தகம் ஏரிக்கு வருவதால் நேற்றிரவு ஏரி அதன் முழு கொள்ளளவான 23.5 அடியை எட்டியது.

இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 2,400 கன அடி திறந்து விடப்பட்டு அந்தத் தண்ணீர் பாலாற்றில் வெள்ளமாக ஓடுகிறது.

இதனால் பாலாற்றின் கரையோரப் பகுதியில் உள்ள 24 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் கிளியாறு தரைப்பாலம் மூழ்கியது. இதனால் உத்திரமேரூர்-மதுராந்தகம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மதுராந்தகம் செல்ல சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் மதுராந்தகம் அருகே ஜமீன்புதூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

திருச்செந்தூர் சிவன் கோவிலில் தண்ணீர் புகுந்தது:

இதற்கிடையே தொடர் மழை காரணமாக திருச்செந்தூர் சிவன் கோவிலில் தண்ணீ்ர் புகுந்தது. மேலும், இப்பகுதிகளில் பல வீடுகள் இடிந்துள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியின் தென்பகுதியில் கன மழை பெய்கிறது. திருச்செந்தூரில் நேற்றிரவு மழை தொடர்ந்து பெய்தததால் அங்குள்ள சிவன் கோவிலில் தண்ணீர் புகுந்தது. திருச்செந்தூரில் பல இடங்களில் ரோடு மற்றும் குட்டைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அங்குள்ள முருகன்குறிச்சி ரோட்டில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று ஆர்டிஓ பாக்கியதேவகிருபை, தாசில்தார் சந்திரன், வருவாய் அலுவலர் கோபால், விஏஓ சாமிநாதன் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பெய்த மழையால் மேலும் சில வீடுகள் இடிந்துள்ளன. என்முத்தையாபுரத்தில் முத்து, சிதம்பரம் ஆகியோர் வீடுகளும், சோனகன்விளை அருகே உள்ள கூரந்தான்விளையில் சேகர் டானியேல் என்பவரது வீடும் இடிந்துவிட்டது. இப்பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X