For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை-புறநகர்ப் பகுதிகளில் நிலைமை மோசம்!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த அடை மழையால் சென்னை நகரமே தண்ணீரில் மூழ்கியுள்ளதைப் போல காணப்படுகிறது. தற்போது சற்று மழை ஓய்ந்திருந்தாலும் இன்னும் மழை நீர் வடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக புறநகர்ப்பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தாழ்வுநிலை அப்படியே ஆந்திராவுக்குப் போய் விடும் என முதலில் கருதப்பட்டது. ஆனால் அது சென்னை அருகே நெருங்கி வந்ததால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து விட்டது.

இந்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான். மழையால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அது தங்களை முடக்கிப் போட்டதால் பெரும் அவதியடைந்தனர்.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கோயம்பேடு, வடபழனி, கிண்டி பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து சென்றன. பெரும்பாலான இடங்களில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். வெள்ளப்பெருக்கால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன.

வழக்கமாக மழை பெய்தால் தீவுகளாக மாறி விடும் வேளச்சேரி, திருவொற்றியூர், வியாசர்பாடி, கணேசபுரம், புளியந்தோப்பு, ஓட்டேரி, உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

வேளச்சேரி காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியவற்றுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், சட்டக்கல்லூரி மாணவர் விடுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் புகுந்தது.

ஏற்கனவே குண்டும், குழியுமாக இருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் மழைநீரில் மிதந்தது. இதனால் நோயாளிகளும், அவர்களை கவனித்துக் கொள்வதற்காக வந்தவர்களும் பெரிதும் அவதிப்பட்டார்கள்.

கீழ்ப்பாக்கம் போலீஸ், உதவி கமிஷனர் அலுவலகம், கீழ்ப்பாக்கம் காவல்நிலையம், மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் புகுந்தது. 2 அடி உயரம் வரை மழைநீர் தேங்கியிருந்ததால் போலீசாரால் பணிகளை செய்ய முடியவில்லை. வடபழனி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் கீழ் உள்ள சாலை, வெள்ள நீரில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நேற்று மதியம் அங்கு படகுடன் வந்த தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் படகில் ஏற்றி மறுபக்கத்தில் கொண்டு போய் விட்டனர். வாகனங்களில் வந்தவர்கள், பேசின்பிரிட்ஜ் வழியாகவும், பெரம்பூர் மேம்பாலம் வழியாகவும் சுற்றி சென்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருந்தது. கடலும், கரையும் ஒன்றானது போல காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு யாரும் வரால் வெறிச்சோடிப் போயிருந்தது.

புறநகர்களில் நிலைமை மோசம்

சென்னை நகரில் நிலைமை இப்படி என்றால், சென்னை நகரை விட அதிக மக்கள் தொகை கொண்ட புறநகர்ப் பகுதிகளில் அதை விட மோசமான நிலை காணப்படுகிறது.

நல்ல சாலைகளே இல்லாமல்தான் பெரும்பாலான புறநகர்கள் உள்ளன. குண்டும், குழியுமான, சேறாகிப் போகியிருந்த சாலைகளை இந்த கன மழை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளி விட்டது.

ஏரிகள் பல ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருப்பதால் அங்கிருந்து ஏராளமான நீர் தானாகவோ அல்லது கரைகளை ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்ததாலும், வெளியறி வீடுகளுக்குள் புகுந்து மக்களை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது.

சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள தாங்கல் ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் கரையை வலுப்படுத்தும்பணி நடந்தது. அந்த இடத்தில் நேற்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அதனால், அபிராமபுரம், திருத்தணிநகர், வ.உ.சி.நகர், வைரவன் காலனி, இந்தியன் வங்கி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தொடர்மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ரெயில்கள் தாமதமாக வந்தன.

பீர்க்கன்கரணை சக்திநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சக்தி நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.

மேற்கு தாம்பரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட மழைநீர் முடிச்சூர் சாலையில் தேங்கியதால் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மழை நீரில் செல்ல முடியாமல் தவித்தனர்.

தாம்பரம் முடிச்சூர் சாலை-பைபாஸ் சாலை சந்திப்பில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சி.டி.ஓ காலனி, கிருஷ்ணாநகர் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

பல்லாவரம் நகராட்சி பாரிநகர், திருமுருகன் நகர், கீழ்க்கட்டளை பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மடிப்பாக்கம் பகுதியும், ராம் நகர் பகுதியும் வழக்கம் போல நீரில் மிதக்கிறது.

தொடர் மழையால் பழவந்தாங்கல், கிண்டி பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து எழும்பூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

தென் பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மெயின் லைனில் செல்லாமல் தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தன.

பெரும்பாலான புறநகர்ப்பகுதிகளில் மழை நீர் தெருக்களில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் எக்கச்சக்கம்.

வீடுகளைச்சுற்றிலும் தண்ணீர் நிற்பதால் மக்கள் வெளியில் வர முடியவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் வெளியேறவே அஞ்சும் நிலை காணப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X