For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழைச்சேதம், நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: மழைச் சேதம், நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 9 மாவட்டங்களில் மழை சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாள்களாக அடைமழை பெய்து, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு குறித்து தினசரி அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நிவாரணத் தொகை குறித்து முடிவு செய்யப்படவுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடிசைகள், வீடுகள் இடிந்து உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்த மழைக்காலத்தில் இதுவரை மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 28 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேரும், கடலூர் மாவட்டத்தில் 22 பேரும், மதுரை மாவட்டத்தில் 10 பேரும் மழைக்கு உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 167 கால்நடைகள் மழையால் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 885, திருவாரூர் மாவட்டத்தில் 508 கால்நடைகளும் பலியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 29 ஆயிரத்து 155 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், 24 ஆயிரத்து 970 வீடுகள் பகுதியாகவும், 4 ஆயிரத்து 185 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்து இருக்கின்றன. ரூ.780 கோடி அளவுக்கு நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ள சேதங்களை மதிப்பிட 8 அதிகாரிகளை முதல்வர் கருணாநிதி நியமித்திருந்தாதர். அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தி வந்துள்ளனர்.

கடலூரில் ககந்தீப் சிங் பேடி, நாகையில் சிவ்தாஸ் மீனா, தஞ்சையில் வி.கே.சுப்புராஜ், திருவாரூரில் ஜி.சந்தானம், விழுப்புரத்தில் எஸ்.எஸ்.ஜவஹர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சுர்ஜித் சவுத்ரி, புதுக்கோட்டையில் டேவிதார், ராமநாதபுரத்தில் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

இன்று இவர்கள் தங்களது ஆய்வறிக்கையை முதல்வரிடம் அளக்கின்றனர். இதுவும் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் மழை வெள்ள நிவாரண நிதியாக வீட்டுக்கு ரூ.2000 அளிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால் இந்த முறை அதை விட கூடுதலான நிதியுதவி அளிக்கப்படும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X