For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டதாலும், உடல் நிலை ஒத்துக் கொள்ளாததாலுமே என்னால் கோவைக்குப் போக முடியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று கோவையில், காந்திபுரத்தில் ரூ.148 கோடியில் புதிய மேம்பாலம், கோவை சிறை வளாகத்தில் ரூ.20 கோடியில் செம்மொழி பூங்கா, ரூ.50 கோடியில் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம், ரூ.28 கோடியில் ஆவின் நிறுவன மேம்பாட்டு திட்டம், ரூ.66 கோடியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கட்டிடம் கட்டும் திட்டம், ரூ.185 கோடியில் காண்டூர் கால்வாய் சீரமைப்பு திட்டப்பணிகள், ரூ.25 கோடியில் மத்திய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கட்டும் திட்டப்பணிகள் உள்பட ரூ.543 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

அதேபோல மாலையில் கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவை நகரின் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி லீ ராயல் மெரிடியன் ஹோட்டலையும் முதல்வர் இன்று மாலை தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆனால் முதல்வரின் கோவைப் பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது. முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்தார் முதல்வர்.

லி மெரிடியன் ஹோட்டலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்து முதல்வர் பேசுகையில், சில அசம்பாவிதங்கள் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவுமே நான் கோவைக்கு வர முடியவில்லை என்று குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அவர்கள் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து நட்சத்திரத் தகுதியில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலை கோவை மாநகருக்கு உருவாக்கித் தந்துள்ளார்.

சென்னை லி ராயல் மெரிடியன் ஓட்டல் அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில், கோவை மாநகரில் லி மெரிடியன் ஓட்டல் கோயம்புத்தூர் என இந்த அருமையான ஓட்டல் கட்டப்பட்டு, இன்று (12.12.2010) திறந்து வைக்கப்படுகிறது.

இந்த திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று இருந்தாலுங்கூட, சில அசம்பாவிதங்களாலும், என் உடல் நிலை திடீரென்று பயணத்திற்கு ஒத்து வராத நிலை ஏற்பட்டதாலும் வர இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன் - வர முடியாமைக்கு வருத்தம் அடைகிறேன்.

கோவை மாநகரம், சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிகுந்த மாநகரமாகத் திகழ்கிறது. கோவை மாநகரின் தட்பவெட்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. எனவே, இந்நகருக்கு வருகை தரக்கூடிய தொழில் முகவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டல் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்க்கரை ஆலைகள், கட்டுமானத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளின் பயனாக, ஏறத்தாழ மூன்றாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ள பி.ஜி.பி. தொழில் குழுமத்தையும், அதன் நிறுவனர் பழனி ஜி. பெரியசாமி அவர்களையும், அவருக்குத் துணையாக இருக்கும் தோழர்கள், உழைப்பாளிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார் முதல்வர்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்டாலின் மனைவி பூஜை

இந்த நிலையில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திடீரென ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். ரங்கநாதர் கோவிலுக்கு வந்த அவர் மனமுருக, பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சிறப்புப் பூஜைகளை செய்தார்.

நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த அவர் சங்கம் ஹோட்டலில் தங்கினார். பின்னர் நேற்று மாலை ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி என அனைத்து சன்னதிகளிலும் சிறப்புப் பூஜை செய்தார். பின்னர் பெருமாள் புறப்பாடைப் பார்த்து வழிபட்டார். அதன்பின்னர் மீண்டும் ஹோட்டலுக்குக் கிளம்பிச் சென்றார்.

English summary
CM Karunanidhi inagurated Hotel Le Meridien, Coimbatore through video conferencing yesterday. Earlier CM planned to visit Coimbatore but at the last moment his visit was cancelled due to his ill health. Hotel Le Meridien, first ever 5 star hotel in Coimbatore has been built at a cost of Rs. 200 cr by PGP group headed by Palani G. Periyasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X