For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரா ராடியா-ராஜாவின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ ரெய்ட்-காரணம் ராஜாவின் டைரி!!

Google Oneindia Tamil News

Nira Radia and Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு,அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.

அதிரடி சோதனைக்குள்ளான வீடுகளில் ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயினும் ஒருவர். ராஜாவின் வீடுகளில் கடந்த வாரம் நடந்த அதிரடி சோதனையின்போது ராஜாவின் முக்கிய டைரி ஒன்று கிடைத்தது. அதில் இடம் பெற்றிருந்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது 2வது ரெய்டை சிபிஐ மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின.

இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

டிராய் முன்னாள் தலைவர் வீட்டிலும் ரெய்டு

இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.

நீரா ராடியா ஒரு என்ஆர்ஐ. கடந்த 9 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளார். அவரது நிறுவனத்தின் முதலீடு ரூ. 300 கோடி என்கிறார்கள். இந்த பிசினஸுக்குத் தேவையான இவ்வளவு பெரிய முதலீடு எப்படி கிடைத்தது என்பது பெரும் புதிராக உள்ளது. எங்கிருந்து இந்தப் பணத்தை அவர் பெற்றார் என்பதும் மர்மமாக உள்ளது.

காட்டிக் கொடுத்த ராஜா டைரி

கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் ‌போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ. வளையத்துக்குள் வந்திருக்கிறார் மகேஷ் ஜெயின் என்கிற ஹவாலா புரோக்கர். இவரது பெயரும் ராஜாவின் டைரியில் இடம் பெற்றுள்ளதாம்.

இந்த டைரியிலிருந்து கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையிலேயே இன்றைய ரெய்டு தீவிரமாக நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ராடியா, பைஜாலிடம் விசாரணை

சோதனையின் ஒரு கட்டமாக நீரா ராடியா, பிரதீப் பைஜால் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.

பைஜாலிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவரால் விளக்கம் தர முடியவில்லையாம்.

ராஜாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டிலும்

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரான ரத்தினம் என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.

சமீபத்தில் ராஜாத்தி அம்மாள், ரத்தினத்தின் துணையுடன், நீரா ராடியாவுடன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. இதையடுத்தே ரத்தினத்தின் வீட்டிலும் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது.

அமலாக்கப் பிரிவும் சோதனை

சிபிஐ ஒருபக்கம் சோதனை நடத்தி வந்த நிலையில் அவர்களுடன் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கொண்டதால் பரபரப்பு மேலும் கூடியது.

குறிப்பாக ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயினின் இருப்பிடத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுடன் அமலாக்கப் பிரிவினரும் இணைந்து கொண்டனர்.

இதனால் மகேஷ் ஜெயின் வீடு உள்ள டெல்லி நியூ பிரண்ட்ஸ்காலனி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

சிபிஐ இன்று எங்கெல்லாம் சோதனை போட்டதோ அங்கெல்லாம் தங்களது குழுவினரும் போயுள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மகேஷ் ஜெயினின் தம்பிகளில் ஒருவரான தவுலத் ஜெயின் என்பவரின் சென்னை வீட்டிலும் கூட சோதனை நடந்துள்ளது.

English summary
The CBI is conducting raids at residence and offices of corporate lobbyist Niira Radia in connection with the 2G scam case. Niira Radia is the chairman of Vaishnavi Communications. CBI sleuths are also conducting a raid at the residence of former Trai chief Pradeep Baijal. Baijal was Trai chief from 2004-2008. He joined Niira Radia"s office in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X