For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1635 கோடி நிவாரண நிதி வழங்கிட மத்திய குழுவிடம் ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

Stalin
சென்னை: தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ. 1635 கோடி நிதியளிக்க வேண்டும் என்று மத்திய குழுவிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 23 மாவட்டங்களிலும் கடுமையான சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் எல்.விசுவநாதன் தலைமையிலான குழுவினர், தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்தனர்.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குழுவினரிடம் துணை முதல்-அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக 29.10.2010 அன்று தொடங்கியது. எனினும் கடந்த 4-5 மாதமாக தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இப்பருவமழைக் காலத்தில் 06.12.2010 வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 420.2 மி.மீ ஆகும். ஆனால் தற்போது 47 சதவீதம் கூடுதலாக, அதாவது 615.9 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.

இப்பருவமழை தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட "ஜல்'' புயல் மற்றும் கனமழையின் காரணமாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் சேதத்திற்குள்ளாயின. மேலும், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்பட்ட எட்டு காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, மாநிலத்தின் 23 மாவட்டங்களில் உயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம், குடிசைகள் சேதம் மற்றும் பயிர்கள் கடுமையாக சேதத்திற்குள்ளாயின.

இதுவரையில் 203 நபர்கள் இறந்துள்ளனர். இறந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சமும், ஆக மொத்தம் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மழையினால் இறந்துள்ள 5 ஆயிரத்து 68 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உச்ச வரம்பினை தளர்த்தி, கறவை மற்றும் உழவு மாடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், கன்றுகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ஆயிரம் ரூபாயும், கோழிகளுக்கு தலா முப்பது ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாநிலத்தில் இதுவரை 8 ஆயிரத்து 702 குடிசைகள் முழுவதுமாகவும், 41 ஆயிரத்து 663 குடிசைகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படுகிறது. மேலும், வெள்ள நீர் பெருகிய காரணத்தால் பாதிக்கப்பட்ட குடிசைகள் அல்லாத 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு நிவாரணமாக தலா ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக, 5.04 லட்சம் எக்டேர் பரப்பளவிலான நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளதாக அறிக்கை வரப்பெற்றுள்ளது. இவற்றில், 50 சதவீதத்துக்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, ஒரு எக்டேருக்கு ரூ.8 ஆயிரம் வீதமும், பிற பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும், நிவாரணம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் படகு சேதமடைந்தால் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 11 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 2,924 சிறு மற்றும் குறு பாலங்களும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறு, ஏரி மற்றும் குளங்களின் கரைகளில் 4 ஆயிரத்து 559 இடங்களில் உடைப்பும் ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 240 பொதுக் கட்டிடங்கள் மழை காரணமாக சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண உதவித்தொகை மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளின் தற்காலிக சீரமைப்புக்கு முதற்கட்டமாக, கடந்த 01.12.2010 அன்று 100 கோடி ரூபாயும், மேலும் கடந்த 08.12.2010 அன்று கூடுதலாக 100 கோடி ரூபாயினையும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 08.12.2010 முதல் 10.12.2010 வரை பெய்த தொடர் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு, பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. ஏறத்தாழ 140 கோடி ரூபாய்க்கான சேத மதிப்பீட்டு அறிக்கையும் வரப்பெற்றுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை தற்காலிகமாக சீரமைத்திட கடந்த 07.12.2010 அன்று முதல்-அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் அவசர கூட்டத்தின் முடிவில் கூடுதலாக 300 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட சேதங்களை உடனடியாக சீரமைக்கும் பொருட்டு, ஆயிரத்து 635 கோடி ரூபாய் நிவாரணம் கோரி, மத்திய அரசுக்கு 09.12.2010 அன்று கோரிக்கை மனுவும் தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக துணை முதல்-அமைச்சர் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக பார்வையிட்டு தமிழக அரசின் சார்பில் கோரியுள்ள நிவாரண தொகையினை விரைந்து வழங்கிட ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக அரசின் தலைமைச்செயலர் எஸ்.மாலதி, முதன்மைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ந.சுந்தரதேவன், வருவாய்த்துறை செயலர் வி.கே.ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் துறைவாரியான செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் விரிவான ஆலோசனையும் மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில், துறைச் செயலர்கள் கே.அசோக் வர்தன் ஷெட்டி (நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்), கே.அலாவுதீன் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்) க.தனவேல் (பொதுப்பணித்துறை), எம்.பி.நிர்மலா (கால்நடை பராமரிப்பு), ஜி.சந்தானம் (நெடுஞ்சாலைகள்), டாக்டர் பி.ராமமோகன்ராவ் (வேளாண்மை), மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சி.பி.சிங், தோட்டக்கலைத் துறை ஆணையர் டாக்டர் பி.சந்திரமோகன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் டி.உதயசந்திரன், சுனாமி திட்ட இயக்குநர் ஏ.கார்த்திக், இணை ஆணையர் கே.நாகராஜன் (பேரிடர் மேலாண்மை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய குழுவில், மத்திய வேளாண்மை துறை இயக்குனர் கே.மனோகரன், மத்திய திட்டக்குழு மூத்த ஆராய்ச்சி அதிகாரி முரளிதரன், மத்திய நிதி மற்றும் செலவீனத்துறை உதவி நிர்வாக அதிகாரி ஜிஜேந்திரகுமார், மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் ஆர்.தங்கமணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் இன்று முதல் 3 நாட்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி சேதத்தை மதிப்பீடு செய்யவுள்ளனர்.

இன்று கடலூர், நெல்லை மாவட்டங்களை பார்வையிடுகிறார்கள்.

18-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களிலும், 19-ம் தேதி தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு நடக்கிறது.

இரு பிரிவாக பிரிந்து சென்று ஆய்வு நடைபெறும். அதன் பின்னர் அனைவரும் 20ம் தேதி சென்னை திரும்பி பின்னர் டெல்லி கிளம்புகிறார்கள்.

English summary
7 member Central team has arrived in TN to visit flood affected areas. The team led by Viswanathan reached Chennai yesterday and met Deputy CM Stalin at St George Fort. Stalin explained the situation and seeked Rs. 1635 cr for rain related relief works. Central team will start their visit from today for 3 days. They will tour Cuddalore, Nellai, Thiruvarur, Tuticorin, Tanjore, Trichy and Kanniyakumari and stuy the flood damage. They will return to Chennai on Dec 20 and discuss with TN officials then leave for Delhi. After the team submitting the report, Central govt will announce the relief package.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X