For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழீழம் அமைக்க உலக நாடுகள் உதவ வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மான விவரம்:

- அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 இலிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும், அற வழியிலும் ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன் கொடுமைகளை எதிர்த்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

- உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர்,

தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது.

எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப்போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

- 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத்தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க தவறிவிட்டன.

வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு, உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்பது அய்.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை, உறுப்பு நாடுகளாக அய்.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்தியஅரசுகளுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.

- தமிழீழ மக்களின் பூர்வீகத்தாயகமான இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில், நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும், படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும், ஊர்கள், நகரங்கள், வீதிகள், என யாவற்றின் தமிழ்ப்பெயர்களையும் அகற்றி சிங்களப்பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சிங்கள இன வெறியர்கள்!

தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

- நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப்போர்களாக இருந்தாலும், அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக்கிடையே சில வரையறைகள் உள்ளன.

பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும், பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும், உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளுவதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும்.

ஆனால், அத்தகைய போர்மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் இலட்சக்கணக்கானத் தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்சேவையும் இராஜபக்சேவின் சகோதரர்களையும், இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதிமன்றத்தின் போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

- தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற அய்யத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அரசப்பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி, இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும், போர்க்கைதிகளுக்கான மனித உரிமைகளைப்பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

- முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும் கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன், உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்ததனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான" பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

- தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை, கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக்குரியதாகவுள்ளது. தங்குமிடம், குடிநீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான ஐ.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும். எனவே, இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன், அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

- ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால், அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

போர்மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து, அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

- ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இசுலாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

அத்துடன், எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானங்கள் கூறுகின்றன.

English summary
VCK"s Tamilar Irayanmai conference held in Maraimalai nagar yesterday. The conference asked the world countries to support for the formation of Tamil Eelam. It also urged the world countries to probe war crimes committed by Sri Lankan govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X