For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

By Chakra
Google Oneindia Tamil News

Scams
ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

English summary
According to media survey, the total amount of money involved in various scams in India over the last 12 years alone, since 1992, is estimated to be over Rs 80 lakh crore (Rs 80 trillion) or $1.80 trillion!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X