For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு-வெள்ள நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சென்னைக்கு நேற்று இரவு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்காதது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இன்று காலை பிரதமரை சந்தித்தார் முதல்வர்.

இன்று சென்னை அருகே மறைமலைநகரில் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு தொடங்குகிறது. இதை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் முதல்வர் கருணாநிதி வரவில்லை.

பிரதமர் எந்த ஒரு மாநிலத்திற்குச் சென்றாலும் அவரை வரவேற்க முதல்வர் செல்ல வேண்டியது மரபாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்ட பிரதமர் அங்கிருந்து கார் மூலம் கிண்டி ராஜ்பவன் சென்றார்.

அங்கு ஆளுநர் பர்னாலா பிரதமருக்காக விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார் என்றும், பிரதமரை சந்தித்துப் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா பதவி பறி போன பின்னர் இருவரும் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது.

ஏராளமான பத்திரிக்கையாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு குவிந்திருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் முதல்வர் வரவில்லை. சற்று நேரத்தில் முதல்வர் வர மாட்டார் என்று தகவல் வந்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சந்திப்பு நடைபெறாததால் பரபரப்பும், பல்வேறு கேள்விகளும் எழுந்தன.

பிரதமரை சந்திக்க வராத முதல்வர், அதற்குப் பதிலாக கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிழ்ச்சியின் போது முதல்வருக்கு தொண்டை வலியும், தலைசுற்றலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் புதிய தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முதல்வர் சென்றார். அங்கு அவரது மருத்துவர்கள் வந்து பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

நேற்று இரவு பிரதமரை சந்திக்காத முதல்வர் இன்று காலை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாகத்தான் சந்திக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல்வர் கருணாநிதி ராஜ்பவன் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.

காலை எட்டரை மணியளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற கருணாநிதி பிரதமருடன் பேச்சு நடத்தினார்.

சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றிப் பேசினோம். மீண்டும் மழை வரக் கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று பிரதமரைக் கேட்டுக் கொண்டேன்.

நேற்றைய தினம் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதிலே பல பேர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன்.

பிரதமர் அடையார் பூங்காவைத் திறந்து வைக்காததால், வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது என்றார் முதல்வர்.

திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு வலுவாக உள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி கோரி ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன்படி நிபுணர் குழுவும் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளது. அந்த நிதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார் கருணாநிதி.

English summary
Amid signs of a strain in the relationship between the DMK and the Congress, Chief minister M Karunanidhi on Sunday chose to skip an appointment with Prime Minister Manmohan Singh in Chennai, preferring to spend the evening in the company of Poet Vairamuthu. The scheduled meeting between the PM and Karunanidhi at Raj Bhavan, where Singh is staying for the night, was cancelled at the last minute. Sources said a meeting had eventually been scheduled between the two leaders for 8.30 am on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X