For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் கருணாநிதி-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்பொழுது தான், சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாகக் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை, எளிய மக்கள் இருக்கின்ற வரை இலவசங்கள் தொடரும் என்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறார். இதை வலியுறுத்தியதன் மூலம் ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தனக்கு உள்ள அக்கறையை கருணாநிதி வெளிப்படுத்தவில்லை.

மாறாக பணக்காரன் ஏழை என்ற பாகுபாட்டை வெளிப்படையாக வலுப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி. வறுமையை ஒழிப்பதற்கு தன்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் கருணாநிதி விரும்புகிறார். அப்பொழுது தான், சலுகைகளையும், இலவசங்களையும் லஞ்சமாகக் கொடுத்து, ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கிறார் கருணாநிதி.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீனாவை அடிபணிய வைப்பதற்காகவும், அந்த நாட்டு மக்களை பிரிட்டனின் அடிமைகளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும், சீனர்களுக்கு போதை மருந்தை பிரிட்டிஷார் ஊட்டினர். இதன் விளைவாக பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சீனர்கள் விடுதலை பெற நூறாண்டுகள் ஆகியது. இது போன்ற மேலாதிக்கம் இந்த மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் மீது நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரூ 1க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கின்ற அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 90. இது தான் இன்றைய நிலைமை. அனைத்துக் காய்கறிகளும் ஒரு கிலோ ரூ 50க்கு மேல் தான் விற்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பல மணி நேர மின்வெட்டு மூலம், உத்தேச பயனாளிகளுக்கு இந்தச் சலுகை பயனளிப்பதில்லை.

தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் கேபிள் இணைப்புகளுக்கு அதிக செலவு ஆகிறது.

இலவசங்கள், பணம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை சார்ந்து வாழும் தமிழக மக்களை வைத்து இந்த நாட்டை சுரண்டலாம் என்பது கருணாநிதியின் தந்திரம்.

தமிழக மக்கள் நிரந்தரமாக ஏழைகளாக இருக்க வேண்டும் என்பது தான் கருணாநிதியின் குறிக்கோள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாள், பதில் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட இன்னொரு அறிக்கை:

2011 - 2012-ம் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தேன்.

நுழைவுத் தேர்வு குறித்து எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார்.

நுழைவுத் தேர்வின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.11.2010 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் கருத்து அனுப்பப்பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டார்.

வரும் 2011-2012 கல்வியாண்டில் இப்போது உள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றும் எனக்கு பதிலளிக்கும் விதத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.

மேலும், எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார். புரிந்து கொண்டு யார் பேசியது புரியாமல் யார் பேசியது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அது இந்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. இதே முறைதான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை. இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு பாதிக்கப்படும். மேலும், தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த மாணவரையும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க அனுமதி இல்லை என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயமும் ஏழை, எளிய மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே அல்லது என்னுடைய அறிக்கை வெளிவந்த பிறகாவது, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தச் சட்டம் வருவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை. இதன் விளைவாக தமிழக மாணவர்களுக்கு இப்போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போகிறாரா?

இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்ற செயலாகும். இதன் மூலம் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை கருணாநிதி செய்துள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடனடியாக மத்திய அரசிடம் மன்றாடி, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் துரோகச் செயலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
ADMK Chief Jayalalitha has slammed CM Karunanidhi for his stand in CET for MBBS issue. In a statement she said that, I was insisitng Karunanidhi to take appropriate action to stall the CET. But he never worried about it. Now MCI has announced the introduction of CET from this year. Karunanidhi has to take some action atleast for now or else to leave CM post, she added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X