For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது விசாரிக்கப்பட வேண்டும்-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் என்பது பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தகுதி இல்லாத லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியது, மேற்படி லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்தது போன்றவற்றை எல்லாம் பொதுக் கணக்குக் குழுவினால் விசாரிக்க முடியாது. அதனால்தான் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்துகின்றன என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தியிராத அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராசா மூலம் கருணாநிதி ஊழல் புரிந்து இருக்கிறார்.

இந்த ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்குப் பதிலாக பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தினால் போதும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

பொதுக் கணக்குக் குழு என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பதாலும், கணக்கு வழக்குகளில் இருக்கும் முரண்பாடுகளை பரிசீலித்து, அதற்கான பரிந்துரையை மட்டுமே பொதுக் கணக்குக் குழுவினால் செய்ய இயலும் என்பதாலும், பொதுக் கணக்குக் குழு என்பது ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படக் கூடியது என்பதாலும் தான் மத்திய அரசின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வருகின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் என்பது பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தகுதி இல்லாத லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியது, விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை முன் தேதியிட்டு மாற்றி அமைத்தது, ஒரு மணி நேரத்திற்குள் ஸ்பெக்ட்ரம் அனுமதி பெறுவதற்கான வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது, மேற்படி லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்தது போன்றவற்றை எல்லாம் பொதுக் கணக்குக் குழுவினால் விசாரிக்க முடியாது. அதனால்தான் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்துகின்றன.

ஆனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டால் தனக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால், கருணாநிதி இதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதைக் கண்டித்தும், 2ஜி ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் 11.1.2011 செவ்வாய்க்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாமித்தோப்பில் ஜெ. சொன்ன கதைகள்

முன்னதாக நேற்று குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற விழாவில் பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (9ம் தேதி) சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு கோசாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இரு கதைகளை ஜெயலலிதா சொன்னார். அந்தக் கதைகள்

முதல் கதை

ஒரு ராஜாவின் அரண்மனையில் இருந்த சிலம்பு காணாமல் போனது. இதனால், ராஜா கடும் கோபமடைந்தார். அதை ஒரு மாதத்தில் கண்டுபிடித்துத் தருவோருக்கு பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். ஒரு மாதத்துக்குப் பின்பு கண்டுபிடித்தால் மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு வந்த புதிய துறவிக்கு அச் சிலம்பு கிடைத்தது. சிலம்பு குறித்த விவரங்களை மக்களிடம் துறவி கேட்டறிந்தார். அரசனின் உத்தரவு குறித்து அவரிடம் மக்கள் தெரிவித்தனர். துறவி ஒரு மாதம் கழித்து அரசனிடம் சிலம்பைக் கொண்டு சென்றார்.

அப்போது அவருக்கு மரண தண்டனை வழங்குவதாக அரசன் தெரிவித்தான். அவனுக்குத் துறவி பதில் தெரிவித்தார். பரிசுக்கு ஆசைப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்னரே சிலம்பைக் கொண்டுவந்து கொடுத்திருந்தால், பரிசுக்கு ஆசைப்பட்டவன் என ஆகிவிடுவேன்.

மரண தண்டனை கிடைக்கும் என அஞ்சி ஒருமாதத்துக்கு முன்பே கொடுத்திருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகிவிடுவேன். சிலம்பைக் கொடுக்காமல் அப்படியே மறைத்து வைத்திருந்தால் பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டவன் ஆகிவிடுவேன். அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரமில்லை என துறவி தெரிவித்தார். அரசன் துறவியை தலைவணங்கி அனுப்பிவைத்தார்.

2வது கதை

பசுவை மட்டும் மக்கள் போற்றுகிறார்களே, நம்மைப் போற்றவில்லையே என்று பன்றி நியாயம் கேட்டது. உடனே பன்றிக்கு பசு பதில் சொன்னது. உயிருடன் இருக்கும்போதே பால், வெண்ணெய், தயிர் ஆகியவற்றை நான் மக்களுக்குக் கொடுக்கிறேன்.

ஆனால், இறந்த பிறகுதான் இறைச்சியாக மக்களுக்கு நீ பயன்படுகிறாய். எனவே, மக்கள் என்னைப் போற்றுகின்றனர் என்றது பசு. எனவே, செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

நிகழ்ச்சியின்போது ஜெயலலிதா பேசுகையில்,

இறைவழிபாட்டில் புதிய மார்க்கத்தை, எழுச்சியை ஏற்படுத்தியவர் வைகுண்டர். அவரது பொன்மொழிகளைக் கேட்ட மக்கள் மூடநம்பிக்கையை முற்றிலும் வெறுத்தனர். தீண்டாமை என்னும் தீய சக்தியை வேரோடு ஒழிக்க முற்பட்டனர்.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற உண்மையை உணர்ந்தனர். தீண்டாமையை ஒழிக்க அந்தக்காலத்திலேயே சமபந்தி போஜனத்துக்கு ஏற்பாடு செய்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர்; சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்டவர்; சுரண்டலுக்கு எதிராகப் போராடியவர்; கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.

ஜாதியற்ற சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே வைகுண்டரின் நோக்கம். தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக இப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கவை. சமூகச் சீர்திருத்தவாதியாக, பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் வல்லுநராக, மனிதாபிமானியாக அய்யா வைகுண்டசாமி ஆற்றிய பணிகளை தமிழ்ச் சமூகம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஒவ்வொரு யுகத்திலும் தர்மம் வீழ்ந்து அதர்மம் தலைதூக்கும்போது, அதர்மத்தை அழிக்க ஓர் அவதார புருஷராக இறைவன் அவதரிப்பார். கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வைகுண்டர் அவதரித்தார். தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான வழிகளில் செல்வது. தர்மம் என்றால் அறம் என்று பொருள். அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரமில்லை.

வாழும்போதே பிறருக்கு உதவ வேண்டும். செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும் போதே செய்ய வேண்டும். ஆனால், மக்களைச் சுரண்டி சேர்த்த சொத்தில் ஒரு பகுதியைக்கூட மக்களுக்குத் தராமல் எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கொலை, கொள்ளை, சுரண்டல், வஞ்சகம், சூழ்ச்சி, கற்பழிப்பு உள்ளிட்ட அதர்மங்கள் அதிகரித்து, பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். எனவே, தர்மத்தை நிலைநாட்ட எனக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்.

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான யுத்தம். இது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையிலான தேர்தல் அல்ல; நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையே நடக்கும் யுத்தம். நல்லாட்சிக்கும் தீய ஆட்சிக்கும் இடையிலான யுத்தம். வைகுண்டர் அருளால் நல்லாட்சி, அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். அய்யா வழியில் நடக்கும் பாலபிரஜாபதி அடிகளாரின் பணிகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது என்னால் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அவர் எடுத்துரைக்காத கோரிக்கைகளும் வைகுண்டர் அருளால் நல்லாட்சி, அதிமுக ஆட்சி அமைந்தால் நிறைவேற்றப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய வைகுண்டர் தலைமைப் பதி தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில், நாடார் சமுதாயத்திற்கு மீண்டும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கிடைக்க ஜெயலலிதாதான் காரணம். அவருக்கு தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் வருகிற தேர்தலில் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வர வைக்கும் என்றார்.

English summary
ADMK to stage demonstration in Salem tomorrow urging JPC probe in Spectrum scam. Party chief Jayalalitha has said in a statement that, Many letter pad companies have been allotted spectrum. This has to be investigated. Only JPC can find out these frauds. So a JPC probe is must, she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X