• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எனது 87 ஆண்டு கால வாழ்க்கையில் நான் பார்க்காத எதிர்ப்பா, ஏச்சுப் பேச்சா?-கருணாநிதி

|

Karunanidhi
சென்னை: எத்தனையோ நிகழ்ச்சிகள், எத்தனையோ எதிர்ப்புகள், எத்தனையோ ஏச்சு, பேச்சு, இழிவு இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக் காலத்தில் வந்தால் 90 என்கின்ற அளவிற்கு 87 ஆண்டுக் காலமாக தமிழகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு சாதி ஒழிந்து கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு இவைகள் மலர்ந்திட வேண்டும் என்பதற்காக பெரியார் வழியில், அண்ணா வழியில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழ் மையத்தின் 5வது சென்னை சங்கமம் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. தீவுத்திடலில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக ராஜ்யசபா உறுப்பினரும், தமிழ் மையத்துடன் இணைந்து சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருபவருமான கனிமொழி அறிமுக உரையாற்றினார். விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக வானம் வசப்படும் என்ற இசை நாடகம் நடைபெற்றது.

அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி பேசினார். கருணாநிதி பேசியதாவது:

வானம் வசப்படும் என்ற தலைப்பில் ஒரு அருமையான நடனக் காட்சியைக் கண்டோம். வாக்குகள் வசப்படுமா? என்று அரசியல்வாதிகள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேரத்தில், இங்கே அது வசப்பட்டாலும், வசப்படாவிட்டாலும், நமக்கு வசப்பட வேண்டியது மானம்.

அந்த மானத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுவது நம்முடைய தலையாய கடமை என்ற நிலையில், திராவிட இயக்கம் எடுத்துச் சொல்லி வருகின்ற கலை, நாகரிகம், பண்பாடு, பழந்தமிழர் வாழ்க்கை முறை, பன்னெடுங்காலத்து பழந்தமிழர் காலத்தில், பசும்புற்தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடு இல்லை அது காலத்தால் அழிவதுமில்லை என்று வாழ்ந்த தமிழினத்தை, திராவிட இனத்தை மேலும் ஒளியூட்டி, உற்சாகப்படுத்தி, உயிர்விக்க வேண்டிய பெரும் கடமையினை ஆற்றி வருகின்ற நாம் அந்தக் கடமையை ஆற்றுவதற்குத் துணையாக இன்றைக்கு வகுத்துக் கொண்டிருக்கின்ற பல்வேறு முறைகளில், வழிகளில் அதற்காக நாம் பயன்படுத்துகின்ற கருவிகளில் ஒன்றாக இந்த நடனம் அமைந்திருப்பதாகவே நான் நம்புகிறேன்.

இந்த நடனத்தை ஆக்கித் தந்துள்ள பிரசன்னா இராமசாமி அவர்கள் மிகுந்த திறமையோடு, அற்புதமான கருத்து அமைந்த காட்சிகளோடு இதனை உருவாக்கியிருக்கிறார்கள். மேடை நாங்கள் வரும்போது இருந்ததற்கும், ஒவ்வொரு காட்சியும் மாறி மாறி வரும்போது, மேடைக்குப் பின்னாலிருந்த திரையிலே ஓவியங்கள் மாறி மாறித் தென்பட்டதற்கும், எவ்வளவு அற்புதமான கலை ஞானத்தோடு, கலை நுணுக்கத்தோடு இந்த நடனத்தை அமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

கனிமொழி இந்த நாட்டுப்புறக் கலையை வளர்க்க வேண்டும் அதனுடைய வலிவை மேலும் உயர்த்த வேண்டுமென்பதற்காக நீண்ட காலமாகப் பணியாற்றி வரக்கூடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். அதற்கு நல்லதோர் வெற்றியைத் தருகின்ற வகையிலே இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கின்றது.

முதலில் இந்த விழாவைத் தொடங்கி வைக்கத்தான் என்னை அழைத்தார்கள். வந்தபிறகு பார்த்தால், வானம் வசப்படும் என்றார்கள். வானம் வசப்படும் என்றாலே அதற்குப் பொருள், அந்த அளவிற்கு மனிதனுடைய அறிவு, வானத்தை விட விரிந்து பரந்திருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.

சில நேரங்களில் உலகில் ராக்கெட்டுகள் வானில் வசப்படாமல் வீழ்ந்து விட்டால்கூட, வசப்படுகின்ற அளவிற்கு விஞ்ஞானத்தை வளர்க்கின்ற அந்த தன்மை, அந்த ஆற்றல் எப்போதோ ஒரு நாள், என்றோ ஒரு நாள் கிடைக்கத்தான் போகிறது வரத்தான் போகிறது. அப்படி வரும்போது, வானத்தை மாத்திரமல்ல இந்த வானமும் அடங்கியிருக்கின்ற வையத்தையே தமிழன் வசப்படுத்தினான் என்ற ஒரு நாள் நிச்சயமாக வரும்.

ராஜராஜ சோழன் கடலை வசப்படுத்தினான் ராஜேந்திர சோழன் அதையும் தாண்டி அங்கே சோழ சாம்ராஜ்யத்தினுடைய சின்னத்தைப் பொறித்து வந்தான் என்றெல்லாம் வரலாறு படிக்கிறோம். அந்த வரலாறு மீண்டும் வரவேண்டும் திரும்ப வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம், திராவிட இயக்கம் திராவிட இயக்கம் என்பது ஒரு பெயர் அல்ல.

அந்தப் பெயரை வைக்காமல், யாரும் இன்றைக்கு தமிழ்நாட்டிலே கட்சியே தொடங்க முடியாது. திராவிட என்று தான் புதுக் கட்சிகளே கூட இன்றைக்குத் தொடங்கப் படுகின்றன. ஆனால் திராவிட என்ற இயக்கத்தைத் தொடங்கிய போது இதைக் கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நான் அனுபவத்திலே உணர்ந்தவன்.

விழுப்புரத்தில் சாந்தா அல்லது பழனியப்பன் என்ற ஒரு நாடகத்தை இயக்கப் பிரச்சாரத்திற்காக பெரியார் அவர்களுடைய தலைமையில், அண்ணா அவர்களுடைய முன்னிலையில் நாங்கள் நடத்தி தொடர்ந்து விழுப்புரத்தில் அந்த நாடகத்தை ஒரு மாத காலம் நடத்தினோம். எப்பொழுது? சுமார் 50 ஆண்டுக் காலத்திற்கு முன்பு. அப்போதெல்லாம் பொன்முடி பிறந்திருக்க முடியாது, பிறந்திருந்தாலும் அப்படியொரு நாடகம் நடந்திருப்பதை அறிந்திருக்க முடியாது.

ஏன் பொன்முடியைச் சொல்கிறேன் என்றால், அவருடைய சொந்தத் தொகுதியான விழுப்புரத்திலே நடைபெற்ற நாடகம் என்பதால் சொல்கிறேன். அந்த நாடகத்தில் நடித்த நாங்கள், பகல் நேரங்களில் நாடகம் நடைபெறாத நேரங்களில் குளிப்பதற்கு உண்பதற்கு கடைத் தெருவிற்குச் சென்று வருவோம். அப்படிச் செல்லும்போது எங்கள் காதுகளிலே விழுந்த வார்த்தை இங்கே சொன்னால் மன்னிக்க வேண்டும் தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது. அப்போது நாடு இருந்த நிலைமை; தமிழகம் இருந்த நிலைமை; சமுதாயம் இருந்த நிலைமை; திராவிட இயக்கம் பரவிடாத காலத்தில் இருந்த நிலைமை வளராத காலத்தில் இருந்த நிலைமை பேசிக் கொள்வார்கள்

நாகப்பட்டினத்திலிருந்து (எங்கள் குழுவிற்குப் பெயர், நாகை திராவிட நடிகர் கழகம்) முப்பது, நாற்பது பசங்க வந்திருக்காங்க சாதிப் பெயரைச் சொல்லி ஆனால் ஆட்களையெல்லாம் பார்த்தா சிகப்பாகவும், அழகாகவும் இருக்காங்க அவுங்க நாடகம் நடத்துறாங்கப்பா என்று பேசிக் கொள்வார்கள்.

அதாவது அந்த நாடகத்திலே நடித்த நடிகர்கள் அத்தனை பேரும் ஆதி திராவிடர்கள் என்று எண்ணிக் கொண்டு அந்தச் சொல்லத் தகாத சொல்லக் கூடாத கீழான வார்த்தையைச் சொல்லி இழிவுபடுத்திப் பேசுவார்கள். அது ஒரு காலம். ஏறத்தாழ 50 ஆண்டுக் காலத்திற்கு முன்பு நடைபெற்றது. ஏயப்பா! அவ்வளவு காலத்தை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு சொல்கிறாயே என்று யாரும் கருதக் கூடாது. அவ்வளவு காலமாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ எதிர்ப்புகள் எத்தனையோ ஏச்சு, பேச்சு, இழிவு இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக் காலத்தில் வந்தால் 90 என்கின்ற அளவிற்கு 87 ஆண்டுக் காலமாக தமிழகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்ந்து கொண்டிருப்பது மாத்திரமல்ல; தமிழ்நாட்டு மக்களுக்கு சாதி ஒழிந்து கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு இவைகள் மலர்ந்திட வேண்டும் என்பதற்காக பெரியார் வழியில், அண்ணா வழியில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அன்று; அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாகப்பட்டினத்திலிருந்து பத்து, பதினைந்து பறப்பசங்க வந்திருக்காங்க நாடகம் போட்டு நடிக்கிறாங்க என்று இழிவாகப் பேசப்பட்ட காலம் விழுப்புரத்திலே ஐம்பதாண்டு காலத்திற்கு முன்பு இருந்தது.

இன்றைக்கு இந்த நாடகத்தை, இந்த நிகழ்ச்சியை விழுப்புரத்திலே அல்லது பக்கத்திலே உள்ள திண்டிவனத்திலோ, வேலூரிலோ அல்லது காட்பாடியிலோ அங்கெல்லாம் நடத்தினால் இது நாட்டுப்புறக் கலை என்கின்ற அளவிற்கு ஒரு நளினமான பெயரைப் பெற்றிருக்கின்றது.

நாட்டுப்புறக் கலை என்ற நளினமான பெயரைப் பெற்றதற்குக் காரணம் நம்முடைய இயக்கம் என்பதை மறந்து விடக் கூடாது. இழிவு துடைத்து, ஏற்றம் உடைத்து இந்தக் கலை என்பதை நாட்டுக்கு விளக்குகின்ற வகையில், நாட்டுப்புறக் கலையிலே இந்த சங்கமம் இடம் பெற்று சென்னை மாநகரத்திலே வீதிக்கு வீதி, தெருவுக்குத் தெரு எங்கெங்கே பூங்காக்கள் இருக்கிறதோ, அந்தப் பூங்காக்களில் எல்லாம் காலை எழுந்தால் ஒலி முழக்கம், பேரிகை முழக்கம், தம்பட்ட முழக்கம், பறை முழக்கம் என்ற அளவிற்கு, இந்த முழக்கங்களை நாம் கேட்கின்ற ஒரு வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த வாய்ப்பை சங்கமம் என்கிற பெயரால் இங்கே நாம் பெற்றிருக்கிறோம். இதில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் என்னுடைய அன்பான நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

கருணாநிதி ரூ. 1 கோடி நிதியுதவி:

நிகழ்ச்சியில் தமிழ் மையத்தின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் பேசுகையில், இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 1 கோடி நிதியை தனது அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

English summary
CM Karunanidhi inagurated Chennai Sangamam cultural fest in Isand grounds yesterday. He hailed the lives of Tamils and their rich culture. He also slammed his opponents in his style. Karunanidhi also recalled his harrowing experiances he and his associates faced 5 decades ago in Villupuram. CM also patted daughter Kanimozhi in nurturing folk arts through Chennai Sangamam. The eye catchin festival will last till Jan 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X