For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியாக போட்டியிடப் போவதாக பவார் அறிவிப்பு-மமதா போராட்ட அறிவிப்பு

Google Oneindia Tamil News

Sharad Pawar and Mamata Banerjee
டெல்லி : ராகுல் காந்தியின் பேச்சால் கடும் அதிருப்தி அடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் மீது அதிருப்தியுடன் உள்ள மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளது.

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூன்று முக்கிய கட்சிகள் திரினமூல் காங்கிரஸ், திமுக மற்றும் பவாரின் தேசியவாத காங்கிரஸ். இந்த மூன்று கட்சிகளிலும் மிகவும் சமர்த்தான கட்சி (அவ்வப்போது சில கோரிக்கைளை சற்று கண்டிப்புடன் வைத்தாலும் கூட) என்ற பெயர் தற்போதைக்கு திமுகவுக்குத்தான். காரணம், ஆட்சி அமைந்தது முதல் இப்போது வரை காங்கிரஸுக்குப் பெரிய அளவில் நெருக்கடிகளைத் தந்ததில்லை கருணாநிதி. ராசா தொடர்பாக மிகப் பெரிய நெருக்கடி வந்தபோதும் கூட காங்கிரஸை நெருக்கவில்லை. மாறாக காங்கிரஸ்தான் சமீப காலமாக தொடர்ந்து திமுகவை நெருக்கி வருகிறது.

ஆனால் ஆரம்பம் முதல் இப்போது வரை சமயம் கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுத்து வருவது பவார் மற்றும் மமதா பானர்ஜி. அதிலும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை எழும்போதெல்லாம் காங்கிரஸ் மீது பழியைத் தள்ளி விட்டு தான் தப்பித்துக் கொள்ள பார்ப்பார் உணவுத்துறை அமைச்சரான பவார். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எரிச்சல், கோபம் வரும்போதெல்லாம் அதை காங்கிரஸ் மீது காட்டுவார் மமதா.

விலைவாசி உயர்வுப் பிரச்சினையை தன் மீது சுமத்தப் பார்க்கிறது காங்கிரஸ் என்ற எரிச்சல் பவாருக்கு. அதேபோல, மேற்கு வங்க ஆட்சியைக் கலைக்க மாட்டேன் என்கிறதே காங்கிரஸ் என்ற மகா கடுப்பு. சமீபத்தில் கூட்டணி அரசியலால்தான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று வித்தியாசமான ஒரு குற்றச்சாட்டை வைத்தார் ராகுல் காந்தி. இது பவார் கட்சியை கடுப்பாக்கி விட்டது.

இரு கட்சிகளுக்கும் இடையே உறவு கசக்க ஆரம்பித்துள்ளது. இதை அதிகரிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சீண்டும் வகையில் முதல்வர் பிருத்விராஜ் சவான் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், நாம் மத்தியிலும் மாநிலத்திலும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். ஆனாலும் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும். இதற்காக கட்சியை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்தி நாம் பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றார் சவான்.

இந்தப் பேச்சால் பவார் கட்சியினர் கடுப்பாகியுள்ளனர். இதை எதிரொலிக்கும் வகையில், விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தநித்துப் போட்டியிடத் தயாராக உள்ளதாக சரத் பவாரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருக்கிறது. கூட்டணியில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம் என்றார்.

மறுபக்கம், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக திரினமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர்கள் பர்தா சட்டர்ஜி, சுதிப் பந்தோபத்தியா எம்.பி. ஆகியோர் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசுகையில்,

பெட்ரோல் விலை உயர்வு பற்றி முன்னதாகவே, எங்கள் கட்சி தலைவர்களுடன் மத்திய அரசு கலந்து பேசி இருக்க வேண்டும். எங்கள் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த 15-ந்தேதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வு பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கூட்டணிகட்சிகளுடன் காங்கிரஸ் கலந்து பேச வேண்டும். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராட முடிவு செய்து இருக்கிறோம்.

இதன்படி, பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, 17 மற்றும் 18-ந்தேதிகள் மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என்றனர்.

English summary
Friction between Sharad Pawar's NCP and Congress has been increased. Recently Rahul Gandhi blamed coalition politics is the reason for price rise in the country. This has irked NCP. They shot back and slammed Rahul Gandhi. Now, Pawars has said that he is ready to go alone in Maharashtra municipal polls. Meanwhile Mamata's Trinamool Congress has announced 2 days agitation against petrol price hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X