For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமருடன் சோனியா ஆலோசனை-டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி?

Google Oneindia Tamil News

T R Balu
டெல்லி: இந்த வார இறுதியில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடந்த இச் சந்திப்பின்போது சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் உடனிருந்தார்.

முன்னதாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை நேற்று மாலை சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் பேசியதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவிக்கவில்லை என்ற போதிலும், இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம் நடைபெறவுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசிய பின் குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த சந்திப்பு முக்கால் மணி நேரம் நடந்தது. தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் பேசப்பட்டது.

விலைவாசி உயர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்தும் பேசப்பட்டது என்றார்.

இருப்பினும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பேசப்பட்டதாகவே தெரிகிறது. இந்த வார இறுதிக்குள், அதாவது ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம் பெறும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் நீக்கப்படவுள்ளனர். அவர்களது செயல்பாடுகள் குறித்து பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் திருப்தி இல்லை. எனவே அவர்கள் நீக்கப்படுகின்றனர். அமைச்சரவையில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம், பட்ஜெட் கூட்டத் தொடர் வரவுள்ளதாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விடாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளதால், மிகுந்த கவனத்துடன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். அதேசமயம், சிலமுக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்:

- கபில் சிபல் வசம் தற்போது பல துறைகள் உள்ளன. அவரிடம் உள்ள தொலைத் தொடர்புத்துறையை மட்டும் விட்டு விட்டு, பிற துறைகள் வேறு அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும்.

- சசி தரூர் ராஜினாமா செய்ததால் காலியாகவுள்ள வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியில் புதியவர் நியமிக்கப்படலாம்.

- எஸ்.எம்.கிருஷ்ணா துறை மாற்றப்படலாம் என்று முன்பு கூறப்பட்டது. இருப்பினும் அது இருக்காது என்று தெரிகிறது. அதேபோல பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோரும் தற்போதைய துறைகளிலேயே தொடருவார்கள்.

- பெரும் குடைச்சலைக் கொடுத்து வரும் திரினமூல் காங்கிரஸ் மேலும் ஒரு அமைச்சர் பதவியை கேட்டு வருகிறது. அது கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

- தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்து விலகிய ராசாவுக்குப் பதில் இன்னொருவருக்கு பதவி தர வேண்டும் என்று திமுக கோரி வருகிறது. இந்த வகையில் டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது. அவருக்கு கட்டமைப்புத்துறையில் பதவி கோருகிறது திமுக. ஆனால் எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு தொலைத் தொடர்புத்துறை கிடைக்காது என்றே தெரிகிறது.

- சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக உள்ள பிரபுல் படேலை கேபினட் அமைச்சராக்க கோரி வருகிறது தேசியவாத காங்கிரஸ். அது நிறைவேற்றப்படலாம்.

-மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் அடையாறு பூங்கா விவகாரத்திலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்-அறிவிப்புகள் மூலம் திமுகவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளார். அதே போல வேறு சில விவகாரங்களிலும் காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடுத்த சோனியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர வேறு சர்பிரைஸான மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை.

English summary
Amid speculation of a rejig in the Union Council of Ministers, Prime Minister Manmohan Singh met President Pratibha Patil and discussed the upcoming budget session of Parliament and pressing issues like price rise and internal security. A Rashtrapati Bhavan spokesperson said the meeting lasted 45 minutes during which the two leaders discussed the current economic situation and various other issues of national and international importance. The timing of the meeting taking place ahead of the Parliament session has led to speculation of a reshuffle in the Union Council of Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X