For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்மோகனை சந்தித்தார் வைகோ- தமிழக மீனவர் பிரச்சினை குறித்து உணர்ச்சிகரமான விவாதம்!

Google Oneindia Tamil News

Manmohan Singh with Vaiko
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஈழப் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரமதருடன், உணர்வுப்பூர்வமான வாதத்தில் ஈடுபட்டார் வைகோ. வைகோவின் கொள்கைப் பிடிப்பை இந்த சந்திப்பின்போது பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை (22.1.2011) காலை, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்தார்.

பத்து மணிக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், 9.55 மணிக்கே அங்கு வந்த பிரதமர், வருகின்ற வழியில் வாயிலில் நின்று, வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

'நீங்கள் சொன்ன தமிழ்ப்பெண் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விட்டார்" என்று பிரதமர் கூறினார். 'அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும், நேற்று, நீங்கள் உடனடியாகத் தொலைபேசியில் பேச நேரம் ஒதுக்கியதற்கும், இன்று காலையில் நேரில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவிக்கிறேன்" என்றார் வைகோ.

'உங்கள் தாயார், குடும்பத்தினர் எல்லோரும் நலமா? உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் நான் உங்கள் தாயாரைப் பார்த்தேனே?" என்றார் பிரதமர்.

"அவர்கள் நலமாக இருக்கிறார்கள். நான் ஒரு சாதாரண ஆள். நாடாளுமன்ற உறுப்பினரும் அல்ல. என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு கொண்டு இருப்பதற்கு நன்றி" என்றார் வைகோ.

'நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழும் தலைவர்" என்றார் பிரதமர்.

பிரதமரை விமர்சிக்கிறேன்- மன்மோகனை நேசிக்கிறேன்

'நான் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரைத்தான் நான் கடுமையாக விமர்சிக்கிறேன்', என்றார் வைகோ.

'உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்"என்றார் பிரதமர்.

பாரக் ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார்.

'அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா வெற்றி பெறுவார் என்பதை முதலிலேயே கூறியதுடன், கருப்பர்களின் துயர் மிகுந்த போராட்ட வரலாறையும் இந்த நூலில் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகத்தை, டெல்லி கபூர்தலா இல்லத்தில் வெளியிட பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தாம் ஏற்பாடு செய்தார். உங்கள் அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லாதான் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்" என்றார் வைகோ.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கேடு வரும்...

இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள அரசு கொன்று குவித்து விட்டது. இப்போது, செஞ்சீனம்அங்கே வலுவாகக் கால் பதித்து விட்டது.

எதிர்காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக் கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும். ஆபத்து, தெற்கே இருந்துதான் வரப்போகிறது. அப்போது, இந்த சிங்கள அரசு, இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படப் போகிறது. அப்போதுதான் இந்திய அரசு இதை உணரும். ஈழத்தமிழர்கள் அங்கு வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களோடு இரத்த பந்த உறவு உள்ளதால், இந்தியாவுக்குத்தான் பக்கபலமாக இருப்பார்கள். இப்போது, தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை வந்து சுடுவதும், கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது" என்றார் வைகோ.

'தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்று விடுகிறார்களே?" என்றார் பிரதமர்.

'குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே சென்று விடுகிறார்கள்" என்றார் வைகோ.

'அவர்களையும்தான் கைது செய்கிறார்கள்" என்றார் பிரதமர்.

'ஆமாம். ஆனால், ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடித்தது உண்டா? தாக்கியது உண்டா? துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா? ஒரு உயிரையாவது பறித்தது உண்டா? கிடையாது.

ஆனால், 1980 முதல், இதுவரை ஆயிரம் தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 பேர்கள் வரையிலும் கொன்று விட்டனர். 97 ஆம் ஆண்டு, ஆறுகாட்டுத்துறை என்கிற இடத்தில், நம் கடல் எல்லைக்கு உள்ளே மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையின் இலங்கு ஊர்தி ஒன்று தாழப் பறந்து வந்து குண்டு வீசியதில், ஆறு மீனவர்கள் துண்டுதுண்டாகச் சிதறிப் போனார்கள்.

இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இது தொடர்பான புகாரைக் கூட வாங்கவில்லை. நான், பிரதமர் குஜ்ரால் அவர்களை தில்லியில் சந்தித்து, இந்தியக் கடற்படையையும், இந்திய அரசையும் கண்டித்தேன். இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல்படையோ, இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுக்கவோ, தமிழக மீனவர்களைக் காக்கவோ, ஒருதடவையாவது முயற்சித்தது உண்டா? கிடையாது. எனவே, தமிழக இளைஞர்கள் உள்ளத்தில், நாம் இந்தியாவின் குடிமக்கள்தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்தியக் கடற்படை, நமது கடற்படையா? என்ற எண்ணமும் எழுகிறது என்றார் வைகோ.

இலங்கை மறுப்பதாக கூறிய மேனன்!

அப்போது அங்கே இருந்த சிவசங்கர மேனன், 'இப்போது கடைசியாக நடந்த துப்பாக்கிச் சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?" என்றார்.

'என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவதுதான் போடுகிறார்கள். சுடுவது அவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், அவர்கள் இப்படித் திமிரோடு பொய் சொல்லுகிறார்கள்" என்றார் வைகோ.

மேலும், பிரதமர் அவர்களே, 'நீங்கள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். இனி, தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

'கடுமையான பிரச்சினைதான்'

'இதை ஒரு கடுமையான பிரச்சினையாகக் கருதி, நாங்கள் இலங்கை அரசோடு பேசுவோம்" என்றார் பிரதமர்.

அடுத்து, "தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு ஏற்படும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க, கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது. அது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், லண்டன் பொறியாளர் பென்னி குக் கட்டிய வலுவான அணை. ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி தண்ணீர் உரிமை உண்டு. உச்சநீதிமன்றமும் அவ்வாறே தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், கேரளத்தின் அச்சுதானந்தன் அரசு, பொய்யான தகவல்களைச் சொல்லி, அணையை உடைக்க முயற்சிக்கிறது.

இதோ, சிவசங்கர மேனன் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். தமிழகத்தில், மலையாளிகளும் வாழ்கிறார்கள். கேரளத்தில் தமிழர்களும் வாழ்கிறார்கள். இன அடிப்படையில், நாங்கள் ஒரே குடும்பம்தான். தமிழ்நாட்டில் இருந்து, அரிசி, பருப்பு, பால், காய்கறி அனைத்தும் தருகிறோம்.

கேரளத்துக்கு கேடு

கேரளத்தில் சாகுபடிக்கு ஏற்ற நிலம் இல்லை. உணவு விளைச்சலைப் பெருக்க முடியாது. ஆனால், ஏராளமான நல்ல தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைப் பகிர்ந்து கொண்டால், இரண்டு மாநிலங்களும் வளமாக இருக்கலாம். முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது தமிழகத்துக்கும் கேடு; கேரளத்துக்கும் கேடு. பகையும் ஏற்படும். எனவே, மத்திய அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று, வைகோ தெரிவித்த கருத்துகளைப் பிரதமர் கனிவுடன் கேட்டார்.

வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். வைகோவும், புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், 'நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?" என்று கேட்டனர்.

'இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அண்ணா தி.மு.க. அணி வெல்லும். அண்ணா தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை" என்றார் வைகோ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
India should "seriously" take up with Sri Lanka the frequent attacks by its navy on Tamil Nadu fishermen and give it a stern warning, MDMK leader Vaiko said today. During a meeting with Prime Minister Manmohan Singh, the MDMK leader voiced serious concern over such attacks and alleged that the Indian Navy and Coast Guard remained "idle spectators" and have made no attempt to protect the fishermen from the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X