• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தமிழக உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்-பெண் வக்கீல் கயல்விழி

|

Ankayarkanni
சென்னை: ஈழத்தில் உள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பிரதமரின் தலையீட்டின் பேரில் மீண்டுள்ள சென்னை பெண் வழக்கறிஞரும், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி.

அங்கயங்கண்ணியும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலையும், இலங்கை சென்றிருந்தார். அப்போது தமிழர் பகுதியில் உள்ள முள்வேலி முகாமுக்கு அவர்கள் சென்றிருந்தபோது சிங்கள ராணுவம் அதிரடியாக அவர்களைக் கைது செய்தது. இது தமிழகத்தில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் போய் முறையிட்டும் கயல்விழி மீட்கப்பட உதவினார்.

இதைத் தொடர்ந்து இருவரும் விடுவிக்கப்பட்டு நேற்று சென்னை திரும்பினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கயல்விழி. அவர் கூறுகையில்,

கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டோம். மறுநாள் காலை கொழும்பு விமான நிலையத்தில் இறங்கினோம். இலங்கையில் போர் தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து வரும் எண்ணத்தில்தான் சென்றோம்.

அங்கு, இலங்கை அரசின் பாதுகாப்பு துறையில் முழுமையான அனுமதி பெற்று, 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வவுனியா, மட்டக்களப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, நவாலி, வல்வெட்டுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களை சந்தித்து பேசினோம்.

அங்குள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைக்கவில்லை. முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ வசதி எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் குழந்தைகளுக்கு அங்கு பள்ளிகளே இல்லை.

அங்குள்ள தமிழர்கள் இந்திய அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அங்கு கை, கால்கள் இழந்த குழந்தைகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என கேட்கிறார்கள்.

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் அகதிகளாக இன்னும் உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை. பெண்களும், குழந்தைகளும் கை, கால்கள் இல்லாத நிலையில், கண்கள் குருடான நிலையில்தான் இருக்கிறார்கள். ஊனமில்லாத குடும்பத்தையே அங்கு பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள். அழித்துக்கொண்டும் இருக்கிறார்கள். முல்லைத்தீவு பகுதிக்கு சென்றோம். அங்கு பஸ் வசதி, மின்சார வசதி எதுவும் இல்லை. இரவு நேரத்தில் இருட்டில் நடந்து சென்றோம். அங்கு ஒவ்வொரு இடத்திலும் சிங்கள ராணுவத்தினர் குழுவாக நின்று கொண்டு விசாரிக்கிறார்கள்.

தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டுத்துறையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வீடு இடிந்து கிடந்ததை பார்த்தோம். அவரது தாயார் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வருவதாக கூறியதும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது. அவரால் பேச முடியவில்லை.

வவுனியா அருகே உள்ள ஓமந்தை என்ற இடத்திற்கு 18-ந் தேதி வந்தபோது, அங்குள்ள சோதனை சாவடியில் எங்களிடம் விசாரித்தனர். பின்னர், உளவுப் பிரிவு போலீசார் எங்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, பயங்கரவாத விசாரணை துறையில் எங்களை அழைத்து சென்று காவலில் வைத்தனர். அதன் பின்னர், நீதிபதியிடம் எங்கள் நிலையை விளக்கியபின் விடுவிக்கப்பட்டோம் என்றார் அவர்.

English summary
Rescued Chennai Lawyer Kayalvizhi alias Ankayarkanni said that, Eelam Tamils never expect Indian govt's help. But they expect the helping hands from Tamil Nadu. She was arrested by Sinhala Army recently. But after Indian govt's intervention she was released. After returning from Sri Lanka Kayalvizhi met reporters in Chennai and said that, Whole Tamil race has been massacred in Eelam. All the Tamils are handicapped by army. No men in the houses, no power, no schools for children. Tamils there expect Tamil Nadu's help, not Indian govt's, she said. Kayalvizhi also met Parvathi Ammal, motehr of LTTE leader Prabhakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X