For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம்: முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி பெருமை

Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, மாநிலம் அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் மாநிலங்களில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் சீரிய அணுகுமுறைகளால், 2010ம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாட்டின் பல பகுதிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படும் வகையில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்கியுள்ள பின்னணியிலும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத அடிப்படைவாதக் குழுக்கள் ஈடுபட்டுள்ள நிலையிலும் இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது மிகவும் அவசியமென்றே நான் கருதுகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது என்பதை இந்த அவையில் குறிப்பிடுவதில் பேருவுவகை அடைகிறேன். மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப் பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள்ளது என்பது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அவ்வமைப்புகளின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் ஆதரவோடு கடலோரப் பாதுகாப்பைத் தமிழகம் பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையும், கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து ஒத்திகைப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. 2006ல் எங்கள் அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடலோர காவலுக்கென 24 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இப்படகுகள் பெருங்குறைபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். மத்திய அரசு இதன்மீது உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்புக்கெனத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் நான் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன். 2006ம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்றது முதல் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், காவல்துறையில் சுமார் 24,000 காவலர்களும், 2,000 உதவி ஆய்வாளர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக இரண்டு காவல் மாவட்டங்கள், ஒரு காவல் ஆணையரகம், 19 காவல் நிலையங்கள், 11 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், 47 புறக்காவல் நிலையங்களையும் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தியுள்ளோம்.

2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு காவல்துறைக்கென ரூ. 3000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒரு நவீன காவல் உயர் பயிற்சியகம் அமைக்கப்பட்டு அது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் மத்திய காவலர் பயிற்சிப் பள்ளி ஒன்றை உருவாக்க உள்ளோம்.

தற்போது தமிழகத்தில் 17 அதிவிரைவுப் படைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் முக்கிய அமைப்புகள் மற்றும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கான விரிவான பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களையும் திறமையுடன் எதிர்கொள்ளும் வகையில், 300 கமாண்டோ படைவீரர்களை எப்போதும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகிறோம்.

புதிதாக 600 பதவிகளை ஏற்படுத்தி, உளவுப் பிரிவை வலுப்படுத்தியுள்ளோம்.

கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுக்க, தமிழகக் காவல்துறை தொடர்புடைய மத்திய அரசின் அமைப்புகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றோடு ஒருங்கிணைந்து செயல்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் வெகுச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரவிருக்கும் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதக்கீட்டை மத்திய அரசு உயர்த்தி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

மேலும், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள நமது எல்லைகள் பாதுகாக்கப்படுவது போல் தென் பகுதியில் உள்ள கடல் எல்லையைப் பாதுகாப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்குக் கடல் வழியில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் பற்றி ஏற்கனவே நாம் அறிவோம். எனவே, அதிக படகுகள், காவல் நிலையங்கள் மற்றும் வான்வழிக் கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக எங்களது கோரிக்ககளைச் சாதகமாகப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அவலத்தையும் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன்.

அண்மையில் கூட, அதாவது 12.01.2011 அன்று, தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 22.01.2011 அன்றும் மேலும் ஒரு மீனவரும் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.

இந்திய மீனவர்கள் மீது இனித் துப்பாக்கிச்சூடு உட்பட எந்தவிதத்திலும் தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று டெல்லியில், 26.10.2008 அன்று வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி இலங்கை அரசு நடந்து கொள்ளவேண்டும்.

சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் மீனவர்கள் வழி தவறி அண்டை நாட்டின் எல்லைக்குள் நுழைய நேர்ந்தால் மேலை நாடுகளோ அல்லது கீழை நாடுகளோ அவர்களைக் கைது செய்வதைத் தவிர உடல் அளவில் அவர்களுக்கு எந்தவிதத்திலும் தீங்கிழைப்பதில்லை. ஆனால் இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இலங்கைக் கடற்பகுதிக்குள் சென்றால் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைத் தாக்குவதுடன், அவர்களைக் கொல்லும் கொடுமைகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தால் நமது நாடு அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் போல இலங்கை அரசும் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மேல் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்திய மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் குறித்துப் பேச மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவை உடனடியாக இலங்கைக்கு உடனடியாக அனுப்பியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

உள்நாட்டுப் பாதுகாப்பைச் செம்மையாகப் பராமரிக்கவும், நிலைமைகளைத் தொடர்ந்து சீரிய முறையில் கண்காணிக்கவும் தமிழக அரசு எப்போதும் செயலாற்றும் என்று உறுதியளிக்கிறேன். நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என்றும், மத நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்றும் தமிழக அரசின் சார்பில் உறுதியளிக்கிறேன் என்றார்.

முன்னதாக மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இடதுசாரி தீவிரவாதம், எல்லை தாண்டிய தீவிரவாதம், மத அடிப்படைவாதம், சமூக வன்முறைகள் உள்ளிட்டவை நாட்டுக்குப் பெரும் சவால்களாக உள்ளன. இவை தொடர்ந்து வருவது கவலைக்குரியதாகும். இவற்றை சமாளித்து நாம் வெற்றி பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சிக்குரியது. வட கிழக்கிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது. 2010ம் ஆண்டு இங்கு பெருமளவில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருந்தன.

அதேசமயம், நாட்டைத் துண்டாடத் துடிக்கும் பழைய தீவிரவாத அமைப்புகளுடன் தற்போது சில புதிய குழுக்களும் தலையெடுத்துள்ளன. அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

English summary
Serious challenges and threats from left wing extremism, cross-border terrorism, religious fundamentalism and ethnic violence still persist, says Prime Minister Manmohan Singh. He was speaking in the Chief Ministers conference which began this morning in Dehli. While speaking in the conference Home Minister P.Chidambaram said, Significant improvement in the situation in Jammu and Kashmir in recent months.Dramatic change in situation in North-east. 2010 witnessed lowest level of violence in many years. But at the same time, new terror groups have emerged in the country, he added. CM karunanidhi is participating in the conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X