For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு கருணாநிதி, மத்திய அரசு கொடுக்கும் விளக்கம் விசித்திரமாக இருக்கிறது-சிபிஎம்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை அறிக்கையில் தவறிழைத்தவர் பட்டியலில் ஆ.ராசாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு நடந்த பிறகும் இன்னமும் கூட திமுக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்று கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி கூறிவருகின்றனர். மக்களுக்கு மானியம் வழங்குவதால் ஏற்படும் இழப்பு போன்றதுதான் இதுவும் என்று விசித்திரமான முறையில் வியாக்கியானம் செய்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்டது இழப்புதான் ஊழல் அல்ல என்று மாநில முதல்வர் கருணாநிதி பேசியும், எழுதியும் வருகிறார். திமுக தலைவர்களும் இதையே கூறி வருகிறார்கள்.

முதல்வர் டெல்லிக்கு சென்றிருந்த அதே நாளில்தான் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இதே நாளில்தான் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ்பட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபிலிடம் அளித்துள்ளது.

இந்த அறிக்கையில் தவறிழைத்தவர் பட்டியலில் ஆ.ராசாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு நடந்த பிறகும் இன்னமும் கூட திமுக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்று கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி கூறிவருகின்றனர்.

மக்களுக்கு மானியம் வழங்குவதால் ஏற்படும் இழப்பு போன்றதுதான் இதுவும் என்று விசித்திரமான முறையில் வியாக்கியானம் செய்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எத்தனை ஏழை-எளிய மக்கள் பயன்பெற்றார்கள். இல்லையே - பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் அல்லவா கொழுத்த ஆதாயம் அடைந்துள்ளனர்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் நாட்டின் கஜானாவிற்கு வந்திருக்கவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் கூறவில்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளன என்றும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

முந்தைய பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையான முதலில் வருபவருக்கே முன்னுரிமை, என்ற நடைமுறைதான் 2ஜி ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட்டது என்று அப்பாவி போல ஆ. ராசா திரும்ப திரும்ப கூறிவருகிறார்.

ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறை தவறு என்ற நிலையில் திரும்பச் செய்வதன் மூலம் நியாயப்படுத்தி விட முடியாது என்பது ஒருபுறமிருக்க முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற முறைக்கூட 2ஜி ஒதுக்கீட்டு விஷயத்தில் சரியாக பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஏலம் விடும் தேதி குறிப்பிட்ட சில கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையில் பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21 நிறுவனங்கள் 232 மனுக்கள் செய்திருந்த நிலையில் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஏலத்தேதியை மாற்றியமைத்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏலத்தேதியன்று பிற்பகல் 3.30 மணிக்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டுமென்று பிற்பகல் 2.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் மட்டும் 2.45 மணிக்கு முன்பே வரைவோலையை எடுத்து மும்பையில் உள்ள அலுவலகத்தில் செலுத்தியுள்ளன.

இதன் மூலம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அல்ல, சிலர் மட்டுமே முதலில் வரும்வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

சில நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் வகையிலும் மற்ற நிறுவனங்களை தடுக்கும் வகையிலும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிஏஜி தெளிவாகக் கூறியுள்ளது. இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, எவ்வாறு திட்டமிட்டு அந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் சிஏஜி தமது அறிக்கையில் கூறியுள்ளது.

செல்பேசி இணைப்புகள் பெருமளவு அதிகரித்திருந்த நிலையில், தொலை தொடர்பு கட்டமைப்பு பெருமளவு விரிவடைந்திருந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு விலையிலேயே 2008-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.

மக்களின் நலன் கருதியே இவ்வாறு செய்யப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறு அடிமாட்டு விலைக்கு அலைவரிசை ஒதுக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு நயா பைசா கூட தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவில்லை. மாறாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தான் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்துள்ளன.

சரியான விலை நிர்ணயிக்குமாறு பிரதமர் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் பிரதமரின் வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளது. ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பிரதமருடனும் அன்றைய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் பேசிய அடிப்படையிலேயே காரியங்கள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

அவ்வாறு ஆலோசிக்கப்பட்ட விஷயம் என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப்முகர்ஜியோ இதுவரை எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆ.ராசா தலித் என்பதால் தான் இவ்வாறு பழிவாங்கப்படுகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இந்த காரணத்திற்காகத்தான் இந்தியாவின் பெருமுதலாளிகளான டாடாவும், அம்பானியும், அதிகாரத் தரகர் நீராராடியா மூலம் மீண்டும் ஆ.ராசாவை அமைச்சராக்க துடித்தார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தலித் மக்களின் பால் திமுகவின் அணுகுமுறை என்ன என்பதற்கு உத்தப்புரத்தில் ஆலய வழிபாட்டு உரிமையை மறுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்த சம்பவமே சாட்சியம் கூறும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது மத்திய தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த பி.ஜே.தாமசை ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு.

தாமஸ் ஏற்கனவே பாமாயில் இறக்குமதி ஊழலில் சிக்கியவர். அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவரது நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண அறிக்கையில் தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இருப்பது தெரியவே தெரியாது என்று ஓங்கி ஒரே போடாக போட்டது.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாமஸ் மீது குற்றச்சாட்டு இருப்பது தேர்வுக்குழுவுக்கு தெரியும் என்கிறார். ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஊழல் செய்வதிலும் அதை மறைக்க முயல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பதை நிரூபித்து விட்டனர் என்று கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.

English summary
CPM has slammed CM Karunanidhi and centre in 2G spectrum issue. In a statement party state secretary G.Ramakrishnan has asked many questions to Karunanidhi and Centre. He also charged that DMK and Congress have proved that they can only do this kind of massive scams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X