For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல்

Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு) தொலைப்பேசியில் பேசிடும் வாய்ப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்ததாகும்.

60 விழுக்காடு அலைக்கற்றைகள் இராணுவத்தால் பயன்படுத்தப்படாமல் இருந்தது அறிந்து, அவைகளைப் பெற்று வெகுஜனப் பயன்பாட்டிற்குப் பயன்படும்படிச் செய்தார்.

3ஜி ஏலத்தின் மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவுக்கு வருவாய் தேடிக் கொடுத்தார். இப்படிப்பட்டவர் பல பழிகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் கொள்கை முடிவினை அமல்படுத்தியதால், அனுமானம் - கற்பனையான கணக்காக சொல்லப்பட்ட இழப்புதான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று இன்றைய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராலும், பல தரப்பாலும் சொல்லப்பட்ட பிறகும், குற்றத்தைச் சுமந்தவராக்கப்பட்டுள்ள விசித்திரத்தை நாடு பார்க்கிறது.

செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது.

தேர்தல் கால அரசியல் மூலதனம் தேடி ஆதாயம் காணும் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றி என்றாலும், அது நிரந்தரமல்ல. இறுதி வெற்றி உண்மைக்குத்தான். அது உறுதி.

நெருக்கடிக் காலத்து சோதனைகளையும், வேதனைகளையும் வடுக்களாக, விழுப்புண்களாகப் பெற்ற கட்சி திமுகவும், அதன் தலைமையும். தனது உறுதிமிக்க லட்சிய உணர்வாலும், ஏழை, எளிய சாமானிய மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள உண்மைச் சாதனைகளாலும், வருகின்ற தேர்தலில் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழித்தெறிந்து, புதுப்பொலிவுடன் வெற்றி வாகையை 1971ஆம் ஆண்டு தேர்தல் முடிவினைப் போலவே 2011ஆம் ஆண்டிலும் பெறும் என்பது உறுதி. இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளால் கரைந்துவிட திமுக ஒன்றும் மெழுகு பொம்மை அல்ல. தக்கக்கட்டி போன்றது.

நெருப்பில் போடப்போட அது தகத்தகாய ஒளியோடு மெருகேறி நிற்கும். காரணம், அதன் ஆற்றல்மிகு தலைவர் கலைஞர், அய்யா - அண்ணா வழியில் வந்த வைர நெஞ்சம் பாய்ந்தவர். அதன் தொண்டர்கள் கொள்கை உணர்வைக் கட்டுப்பாட்டோடு காக்கும் தோழர்கள். அது இனி விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் உறுதி. அண்ணா நினைவு நாளில் அது உறுதி என்று கூறியுள்ளார் வீரமணி.

English summary
Dravida Kazhagam Leader K.Veeramani has extended his support to former Minister A.Raja. He said that, Madurai punished innocent Kovalan. Now Tamil Nadu sees innocent Raja as accused. But DMK will overcome this crisis. It has a massive cadre who are the followers of Periyar and Anna, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X