For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிட இனத்தை வீழ்த்த ஒரு இனம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தில்லு முல்லு செய்து திமுக ஆட்சியையும், திராவிட இனத்தையும் வீழ்த்த ஒரு இனம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

திமுக பொதுக் குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் பேசிய கருணாநிதி,

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், பொறுத்துக் கொள்ள இயலாதவர்கள், எரிச்சல் கணைகளை நம்மீது அன்றாடம் வீசிக்கொண்டிருப்பவர்கள், ஏதாவது கிடைக்காதா? அதை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை ஒழித்துவிட முடியாதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

நம்மை இருட்டடிப்பு செய்தோ, திசை திருப்பியோ மக்களிடத்திலே நம்மைப்பற்றிய பொய்ப் பிரச்சாரம் செய்தோ, அவதூறு கூறியோ, அக்கிரமச் செய்திகளை வெளியிட்டோ, அழித்துவிட வேண்டும் என்று கருதுகிறார்கள் என்றால் அது இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிட இனத்தை வீழ்த்துவதற்கு, இந்த இனத்திற்காக கொடி தூக்கியிருக்கின்ற எந்த இனத்தையும் ஒழிப்பதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். புராணக் கதை போலத்தான் தெரியும். ஆனால், ஒரு வரலாறு, நம்முடைய பக்கத்து மாநிலம் கேரளத்தில் நடைபெறுகின்ற ஓணம் பண்டிகையைப் பற்றிய ஒரு வரலாறு.

மாவலிச் சக்கரவர்த்தி பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொடுமை புரிகிற அரக்கர்களைத்தான், மக்களை கொலை செய்கிற, மக்களிடம் கொள்ளையடிக்கிற, இம்சைப்படுத்துகிற அரக்கர்களைத்தான் தேவர்கள் அழிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஓணம் என்பது, மாவலிச் சக்கரவர்த்தி என்று ஒருவர் கேரளத்தை ஆண்டார் என்றும், அவருடைய ஆட்சி எல்லா மக்களாலும் விரும்பப்பட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்று அந்த மக்கள் எல்லாம் வாழ்த்துகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் ஒரு நிலை ஏற்பட்டபோது, அங்கிருந்த உயர் ஜாதி மக்கள் இப்படியே இந்த ஆட்சியை விட்டுக் கொண்டு போனால் உயர் ஜாதி மக்களாகிய நாம் என்றைக்கு ஆட்சி பீடத்திலே அமர்வது என்பதற்காக சூழ்ச்சி செய்து மகாவிஷ்ணுவிடத்திலே சென்று கேட்டார்களாம்.

இதை ஏற்று, யாகங்களைச் செய்து, யாசகம் கேட்டு, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு, அவன் மூன்றடி மண்ணுக்கு விருப்பம் தெரிவித்து வழங்கியபோது இரண்டடி அளந்து பார்த்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று கேட்டு வேறு வழியில்லாமல் மாவலி மன்னனுடைய தலையிலேயே காலை வைத்து, அப்படி காலை வைத்த நேரத்தில் பலம் கொண்ட வரையில் அழுத்தி அவனை அழித்தார், ஒழித்தார்!

ஆனால், நல்லவனாக இருந்தும், மக்களிடம் அன்பு பெற்றவனாக இருந்தும், அவர்தான் மன்னனாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பிய நிலையிலும், அந்த மன்னனை அழிக்கிறார் ஆண்டவன். அந்த நல்லவனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவனால் முன்னேறிய மக்களைப் பார்வையிட அவனுக்கு ஆண்டுக்கு ஒருநாள் அனுமதி வழங்குகிறார். அதுதான் ஓணம் பண்டிகை என்று கூறுகிறார்கள்.

அதுபோலத் தான் தமிழ்நாட்டிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சி நான் மாவலி அல்ல, அவ்வளவு வலிமை பொருந்தியவன் அல்ல, மாவலி மரபின் ஆட்சி அவ்வளவு தான், மாவலி மன்னனுடைய மரபு ஆட்சி. அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்றால் என் தலைமையிலே இருக்கின்ற இந்த ஆட்சியை வீழ்த்த, ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் உண்டோ, திருகுதாளங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக்கின்றது.

என் தலைமையிலேயே இருக்கிற இந்த ஆட்சியை வீழ்த்த அத்தனை வழிகளிலும் முயற்சி நடைபெறுகிறது. ஏனென்றால் அவர்கள் கையை விட்டு ஆட்சி போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் கொண்டுவருவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கிடைத்துள்ள சாதனமாக இருப்பது பத்திரிகைகள்.

பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தே, இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்துவிடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே, அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே, இதனுடைய விளைவுகளையும் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

எண்ணிலடங்கா சாதனைகளை, குறிப்பாக இந்த 4, 5 ஆண்டுகளில் நாம் நடத்திக் காண்பித்திருக்கிறோம். அதிலே உச்சக்கட்ட சாதனைதான், தமிழ்நாட்டில் இனிமேல் குடிசைகளே இருக்கக்கூடாது, கிராமங்களில் குடிசைகளே இருக்கக் கூடாது என்ற ஒரு திட்டம். கிராமங்களில் குடிசைகள் இருக்கக் கூடாது, நகரங்களில் குடிசைப் பகுதிகளே இருக்கக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டத்தை அறிவித்து, அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிப்பதற்காக, அதற்கான பணத்தையும் ஒதுக்கி, வேலை வேக வேமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்கள்.

சில பேர் கேட்டார்கள். கருணாநிதி சொல்கிறார், அன்பழகன் சொல்கிறார், ஸ்டாலின் சொல்கிறார், இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள், "நாங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருவோம்'' என்று சொல்கிறார்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகு இவர்கள் வருவார்களா, என்ன ஆகும் இந்தத் திட்டம்? என்றெல்லாம்கூடக் கேட்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிற பதில், இந்தத் திட்டம் தொடரும். ஏனென்றால், திட்டத்தைக் கொண்டு வந்த நாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வருவோம். நாங்கள் ஆட்சியில் தொடருகிற காரணத்தால், இந்தத் திட்டமும் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மிக முக்கியமாக, இன்றைக்கு நம்முடைய உள்ளங்களில் எல்லாம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி, அதுகுறித்த தீர்மானம், இன்று பொதுக் குழுவிலே இடம்பெற்று, அதனையும், அதுபற்றியும் இங்கே பேசிய நண்பர்கள், பேராசிரியர் உள்ளிட்டோர்கள் ஒன்றிரண்டு குறிப்புகளை இங்கே தந்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அது தீர்மானம் 14ஆக இடம் பெற்றிருக்கிறது.

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சனை எழுந்த போதே செய்தியாளர்கள் கருணாநிதியிடம் அதுகுறித்து கேட்டபோது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால், ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை தி.மு.க. ஒரு திறந்த புத்தகமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, இதனைப் பெரிதுபடுத்தி எப்படியாவது கழகத்தின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது'' என்ற இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றியிருப்பது, தெளிவான, நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான்.

ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால், ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை, இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள், சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை, நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும், போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு, அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை, காதிலே இந்தத் தொலைபேசி, அதிலே "மோர் வாங்கலியோ, மோர்'' என்ற கூச்சலுக்குப் பதிலாக, "ஹலோ, ஹலோ'' என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு, மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை, கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை, டெல்லியிலே கைதாகியிருக்கின்ற ராஜாவுக்கு உண்டு.

நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டெல்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன், வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஏழை மக்கள், எளிய மக்கள், அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் ராஜா. அவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால், வேறு ஒன்றுமில்லை.

கேரளத்து மாவலி சக்கரவர்த்தியினுடைய கதை போன்றதுதான் இதுவும். அப்படித்தான் நடைபெற்றிருக்கிறது இந்தக் கதை.

எனவே, நம்மவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இந்தக் கொடுமைகளை அனுபவித்தால்தான், நாம் இந்த இனத்திற்காக, சமுதாயத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டோம் என்ற அந்தப் பெருமையை நாம் பெற முடியும். நமக்காக இங்கே இருக்கின்ற ஏடுகளோ அல்லது உயர்ச் சாதிக்காரர்களோ பரிந்து பேசமாட்டர்கள். நம்மைப் பாராட்ட மாட்டார்கள்.

நான் கேட்கிறேன், சென்னையிலே உலகத் தரம் வாய்ந்த, ஆசிய கண்டத்திலேயே இல்லாத அளவிற்கு அண்ணாவின் பெயரால் லட்சக்கணக்கான புத்தகங்கள் அடங்கிய ஒரு நூலகத்தை அமைத்திருக்கிறோமே, எந்தவொரு பத்திரிகைகாரர்களாவது இதுவரையிலே பாராட்டி எழுதியிருக்கிறார்களா?.

கர்நாடகத்திலே கட்டப்பட்ட விதான் சவுதாவிற்கு ஈடாக, இன்னும் டெல்லிப் பட்டணத்திலே இருக்கின்ற கட்டடங்களுக்கு ஈடாக அமைத்திருக்கிறோமே, ஜெர்மனிய நாட்டினுடைய நிபுணர்களைக் கொண்டு, ஒரு அருமையான மாளிகை, அந்த மாளிகைக்கு, அது இருக்கின்ற இடத்திற்கு, எல்லோராலும் மறந்து விடப்பட்ட பழைய முதல்-அமைச்சர் ஓமந்தூரார் "ஓ.பி. ராமசாமி ரெட்டியார்'' பெயரை வைத்து, அந்த வளாகத்திலே அவ்வளவு பெரிய மாளிகையை எழுப்பியிருக்கிறோமே, அந்த மாளிகையைத் திறந்து வைக்க சோனியாகாந்தி முன்னிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து அவ்வளவு பிரமாதமாக விழாவை நடத்தினோமே, எந்தப் பத்திரிக்கைக்காரர் அதைப் பாராட்டி எழுதினார்? ஒன்றிரண்டுப் பத்திரிகைகளைத் தவிர.

நாம் கட்டியதுதானே இந்த மண்டபம், நாம் எழுப்பியதுதானே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை - நாம் உருவாக்கியதுதானே இந்த உப்பரிகை, நாம் நடத்தியதுதானே கோவை செம்மொழித் தமிழ் மாநாடு, நாம் உருவாக்கியதுதானே இந்தப் புத்தக ஆலயம், நாம் உருவாக்கியதுதானே சட்டமன்றத்திற்கான உயர்ந்த கட்டடம்? இவைகளைப் பற்றி இவர்கள் எழுதாமல் இருக்கலாம்.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். நான் இல்லாத காலத்திலேகூட, இன்னும் ஒரு நூறாண்டுக் காலத்திற்குப் பிறகு, "கருணாநிதி என்று ஒருவன் இருந்தான்'' என்று வரலாறு சொன்னாலும், சொல்லாவிட்டாலும், "அவன் எழுப்பிய மாளிகைகள், அவன் உருவாக்கிய கோபுரங்கள், அவன் சித்தரித்த சின்னங்கள்'', இவை எல்லாம் இருந்து என் பெயரைச் சொல்லும்.

ஆனால், இவை என் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் பரவ வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் ஆற்றிய காரியங்கள் தமிழனுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சாதி மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக, நான் ஆற்றிய பணிகள் இவை வரலாற்றில் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் மறுத்து விட முடியாது. யாரும் அழித்து விட முடியாது.

அப்படிப்பட்ட ஒரு வரலாற்றை உருவாக்குகிற தனி மனிதனாக அல்ல, இங்கே இருக்கின்ற நம்முடைய கழகத்தினுடைய காவலர்கள், பொதுச் செயலாளரிலிருந்து, துணைப் பொதுச் செயலாளர்களிலிருந்து மற்றும் கட்சியினர் எங்களை எல்லாம் இன்றைக்கு வாழ்த்திப் பாராட்டி எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்ற எங்களுடைய ரத்தங்களாக, எங்களுடைய உதிரங்களாக எங்களுடைய உயிர் மூச்சுக்களாக என் எதிரே அமர்ந்திருக்கின்ற தமிழ் பெருமக்களாகிய நீங்கள், நீங்கள் நினைத்தால் போதும்.

எனவே, யாருடைய பாராட்டையும் அல்ல, யாருடைய மதிப்பு மரியாதையையும் அல்ல. நான் வேண்டி விரும்புவது நான் என் காலத்தில் ஆற்றிய இந்தப் பணிகளையெல்லாம் பாராட்டுவதற்கு கடல் போல் திரண்டிருக்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள். உங்களை நான் என்றைக்கும் மறக்காமல் இருப்பதற்கு தேவையான எல்லாவற்றையும் தமிழகத்திலே செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். செய்யத் தொடங்கியிருக்கிறேன்.

இந்தத் தொடக்கத்தைத் தொடர்ந்து முற்றாக முடிக்க வேண்டிய கடமை, கண்ணின் மணிகளே, தமிழ்த் தாய் பெற்றெடுத்த தங்கங்களே, திமுகவின் ரத்த ஓட்டமே, திமுகவின் நாடி நரம்புகளே, ஒரு முடிவு எனக்கு ஏற்படுமானால், அப்பொழுது கூட, இந்தப் பொறுப்புகளை எல்லாம் அண்ணா எப்படி என்னிடத்திலே ஒப்படைத்து விட்டுப் போனாரோ அதைப் போல இந்தப் பொறுப்பையெல்லாம் திமுகவினராகிய உங்களிடத்திலே ஒப்படைத்திருப்பதாகக் கருதிக் கொண்டு இந்தக் கழகத்தைக் காப்பாற்றுங்கள், திமுக இயக்கத்தைக் காப்பாற்றுங்கள், திராவிட இனத்தைக் காப்பாற்றுங்கள் என்றார்.

English summary
The 2G spectrum scam is all set to take the election campaign in Tamil Nadu to a new bandwidth. While the opposition is calling it unprecedented corruption, DMK chief Karunanidhi is all set to project Raja as a hero of the people. The DMK chief is firmly backing his blue eyed boy, A Raja, who's now in CBI custody in connection with the 2G spectrum scam.
 
 The DMK says Mr Raja, a massively popular Dalit leader, will remain Propaganda Secretary, a powerful position. "The only wrong Raja committed was making mobile phones affordable to millions of poor people. Raja is in jail, I appreciate him on their behalf," DMK chief M Karunanidhi said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X