• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திமுக அரசு நடவடிக்கைகள் காகிதத்தில் மட்டுமே : ஜெ

By Chakra
|

சென்னை: திமுக அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் செயல் வடிவம் பெறாமல் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு நிர்வாகத் திறனில்லாத, செயலற்ற அரசு என்பதை சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள சாய, சலவை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்தக் கோரி நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைத்து சாய, சலவை ஆலைகளும் 31.7.2007-க்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து “ஜீரோ டிஸ்சார்ஜ்" சான்றிதழ் பெற வேண்டும், மேலும் இந்த காலக்கட்டத்தில் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் அபராதம் செலுத்த வேண்டும் என்று 22.10.2006 அன்று உத்தரவிட்டது.

இது தவிர அனைத்து சாய, சலவை ஆலைகளில் கூடுதலாக உள்ள இயந்திரங்களை அகற்றுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 28.4.2008 அன்று ஓர் இடைக்கால உத்தரவினை பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்துமாறு 6.10.2009 அன்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'ஜீரோ டிஸ்சார்ஜ்" சான்றிதழ் பெறாத அனைத்து ஆலைகளையும், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து திருப்பூரில் உள்ள சுமார் 750 ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்றும், இதனால் அங்குள்ள எந்திரங்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்று உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. இந்த மின் துண்டிப்பால் ஒரு நாளைக்கு ரூ. 50 லட்சம் அளவுக்கு தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு நாளைக்கு ரூ. 5 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டதற்கு திமுக அரசின் அலட்சிய போக்கு தான் காரணம். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தூங்குகிறது என்பது அவர்களின் மனுவில் இருந்தே தெரிகிறது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சாய, சலவை ஆலைகளின் நிரவாத்தினரையும், நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத்தினரையும் அழைத்துப் பேசி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்" கழிவு நீரை ஆலைகள் வெளியேற்றும் அளவுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஓர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டே இருக்காது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 95 கோடி அளவுக்கு அபராதத் தொகை செலுத்தியுள்ளதாக சாய, சலவை ஆலைகள் தெரிவிக்கின்றன. எனினும் ஆலைகளை மூட வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக 19.3.2010 அன்று தி.மு.க. அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த மைனாரிட்டி திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்று தான் திமுக அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் காகித வடிவில் மட்டுமே இருக்கின்றன. திருப்பூர் ஆலைகள் பிரச்சனையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் செயல் கண்டனத்திற்குரியது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

English summary
ADMK chief Jeyalalitha accused that DMK government's schemes are in paper only and it will not be implemented. She condemned the government for its inaction in Tirupur factories case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X