• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஏழைகள், நடுத்தர மக்கள் வாழும் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டுவோம்-கருணாநிதி

|

Karunanidhi
சென்னை: ஏழை - எளிய மக்கள், நடுத்தர மக்கள் வாழும் அளவுக்கு வசதி வாய்ந்த நகரமாக சென்னை நகரை மாற்றிக் காட்டுவோம். தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மாறி வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை பெரம்பூர் லோக்கோ ஒர்க்சில், ரூ.8 கோடியே 41 லட்சம் செலவில் கூடுதல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று மாலை திறந்து வைத்தார்.

இதே விழாவில், சென்னை மாநகராட்சியால் பெரம்பூர் முரசொலிமாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இசை நடன நீருற்று, சின்னாண்டி மடம் மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள பெட்டக வடிவப் பாலங்கள், அடையாறில் கைப்பிடிச்சுவர்கள் பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. பாலம், இந்திராகாந்தி நகரில் புதிய இணைப்பு பாலப்பணிகள் என ரூ.14 கோடியே 36 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 53 வளர்ச்சிப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

நான் சென்னைக்கு குடும்பத்துடன் குடிவந்து கோடம்பாக்கம் அருகே சக்கிரியா காலனி என்ற இடத்தில் வாழ்ந்தேன். அப்போது, எங்கள் வீட்டிற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் வருவார். அவரது காரில் ஏறி ஸ்டூடியோ, பட நிறுவனங்களுக்கு காரில் செல்வது வழக்கம்.

அப்போது, ஸ்டாலின் குழந்தை. ஒருநாள் நான் கலைவாணருடன் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். குழந்தை ஸ்டாலின் ஊக்கை விழுங்கிவிட்டான். அந்த ஊக்கு வேறு திறந்த நிலையில் வயிற்றுக்குள் சென்றுள்ளது.

உடனடியாக, கலைவாணர் காரிலேயே ஸ்டாலினை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம். ஆனால், கோடம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது, ரெயில்வே கேட்டை மூடினார்கள் என்றால், திறப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

இதனால், என்ன செய்வது என்று நாங்கள் கவலை பட்டுக் கொண்டிருந்தபோது, வலி பொறுக்காமல் ஸ்டாலின் அழுதுவிட்டான். அந்த இடத்தில் ஒரு பாலம் இல்லாத காரணத்தினால் கேட் இடையூறாக இருப்பதை உணர்ந்தேன். எத்தனை மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தேன்.

அப்போது, மாநகராட்சியில் சிறிய பொறுப்பில் கூட தி.மு.க. இல்லை. என்னிடம் அதிகாரம் இல்லை, செல்வாக்கு இல்லை. ஆனால், ஆர்வம் மட்டும் இருந்தது. 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, அண்ணா மறைவுக்கு பின், நான் முதல்வராக ஆனதும், தமிழகத்தில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்தேன்.

முதல் காரியமாக சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தியாவில் முதல் பெரிய மேம்பாலம் அதுதான். அதன் பிறகு, சென்னையில் போக்குவரத்து வசதிக்கு நான் செய்த வசதிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பட்டியலிட்டு கூறிவிட்டார்.

ஆனால், மேம்பாலம் கட்டிய எங்களுக்கு அ.தி.மு.க. அரசால் கிடைத்தது ஜெயில்தான். ஊழல் என்று கூறிக்கொண்டு பாலத்தை எல்லாம் தோண்டி பார்த்தார்கள். காலம் எந்த உண்மையையும் விழுங்கிவிடாது. என்றைக்கும் உண்மை வெளியே வந்தே தீரும்.

நான் முதலாவதாக போட்டியிட்ட தொகுதி குளித்தலை. குளித்தலைக்கு அருகே உள்ள பெரிய ஊர் முசிறி. இந்த இரண்டு ஊருக்கும் இடையே கொள்ளிடம் ஆறு ஓடியது. அதனால், இரு ஊருக்கும் இடையே படகில் செல்பவர்கள், அடிக்கடி விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டது. குளித்தலையில் இருந்து முசிறிக்கு திருச்சி வழியாக சுற்றி செல்ல வேண்டும் என்றால் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

நான் குளித்தலையில் போட்டியிட்டபோது, நான் வெற்றி பெற்றால் பாலம் கட்டித் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால், ஜெயித்து எம்.எல்.ஏ.வாக ஆன பிறகும் சில காரணங்களால் பாலம் கட்ட முடியவில்லை.

காலம் மாறும் என்று காத்திருந்தேன். அதன்படி, முதல்வராக நான் பொறுப்பேற்றதும், முதலில் வாக்குறுதி கொடுத்த கொள்ளிடம் பாலத்தை நான் கட்டினேன். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று நாங்கள் சொல்வதற்கு இதுவே அடையாளம்.

சென்னையில் இன்று எத்தனையோ மேம்பாலங்கள், செம்மொழி பூங்கா, தொல்காப்பியர் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சென்னை மாநகரம் சிங்கார சென்னையாக மாறி வருகிறது. ஏழை - எளிய மக்கள், நடுத்தர மக்கள் வாழும் அளவுக்கு வசதி வாய்ந்த நகரமாக சென்னை நகரை மாற்றிக் காட்டுவோம் என்றார் அவர்.

English summary
CM Karunanidhi unveiled Perambur loco works bridge yesterday. He said, We will change the Chennai as Poor and Middle class people friendly city. DMK has built many bridges, Semmozhi Poonka and others to make the city beautiful, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X