For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 புதிய திட்டங்கள்... 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 6 பெரிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் 17000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் 12.2.2011 நடைபெற்ற 52வது அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் விற்பனைப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் காலதாமதத்திற்கான காரணம், நடைமுறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் வழக்குகளை ஆராய்ந்து, ஒதுக்கீடுதாரர்களின் இடர்ப்பாடுகளைக் களைவதற்காக நீதியரசர் பாஸ்கரன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவின் பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்பட்டன.

அதனையொட்டி, மாதத் தவணைக்காக தண்ட வட்டி செலுத்துவதை முழுவதுமாக தள்ளுபடி செய்யவும்; வட்டி முதலாக்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்முதல் முழுத்தொகை செலுத்தும் நாள் வரை அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியினை முழுமையாக தள்ளுபடி செய்யவும்; நிலத்திற்கான இறுதி விலையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் முதல் முழுத்தொகை செலுத்தப்பட வேண்டிய நாள் வரையிலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஐந்து மாத அளவில் வட்டி தள்ளுபடி செய்யவும்; அரசு ஊழியர்கள் செலுத்தவேண்டிய முன்வைப்புத் தொகையின் மீதான வட்டி வசூலிப்பில் தற்போது உள்ள நடைமுறையினை மாற்றி, மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு முன்வைப்புத் தொகையின் மீது மட்டும் வட்டி வசூலிப்பது என்று மாற்றியமைத்து சலுகை அளித்திடவும் முடிவு செய்யப்பட்டது.

ஒருமுறை மட்டும் சிறப்பு நிகழ்வாக வழங்கப்படும் மேற்கண்ட சலுகைகளின் மூலம் 81 ஆயிரத்து 947 ஒதுக்கீடுதாரர்களுக்கு, 284 கோடியே 53 இலட்சம் ரூபாய் அளவிற்குப் பயன் கிடைக்கும். இச்சலுகைகள் இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் முழுத்தொகையும் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

காவல் துறையினருக்கு கேன்டீன்:

இராணுவத்தில் பணிபுரிவோருக்கு உள்ளது போல், தமிழக காவல் துறையினர் குறைந்த விலையில் பொருள்களைப் பெறுவதற்கு வசதியாக கேன்டீன் வசதி செய்து தரப்படும் என்றும், தமிழகக் காவல் துறையினருக்கும் மற்றும் மத்திய காவல்படையினருக்கும் கேன்டீன்கள் மூலம் விற்கப்படும் பொருள்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், 4 ஆயிரத்து 320 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை எண்ணூருக்கருகில், மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் இணைந்து கூட்டு முயற்சியில் அமைக்க உள்ள எரிவாயு இறக்குமதி முனையம்,

2 ஆயிரத்து 262 கோடி ரூபாய் முதலீட்டில், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா, திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா, நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு மற்றும் சிவகங்கை மாவட்டம் சூரவாண்டி ஆகிய இடங்களில், சுந்தரேஷ்வரர் அலாய் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழு நிறுவனங்கள் அமைக்க உள்ள தொழிற்சாலைகள்,

1042 கோடி ரூபாய் முதலீட்டில் அரியலூரில் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை, விருதுநகர் இராமசாமிராஜா நகரில் சிமெண்ட் தொழிற்சாலை விரிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்புதூர் மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆகிய இடங்களில் சிமெண்ட் அரவை ஆலைகள் அமைக்க உள்ள மெட்ராஸ் சிமெண்ட் நிறுவனத்தின் திட்டங்கள்,

700 கோடி ரூபாய் முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்க்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் உருக்கு கயிறுகள், மணிக் கம்பிகள், நீள்குழாய்களை வலிவூட்டும் கம்பிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான பெக்கார்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திட்டம்,

திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் தற்போதுள்ள தொழிற் சாலையில் கூடுதலாக 350 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ள சாம்சங் நிறுவனத்தின் திட்டம்,

322 கோடி ரூபாய் முதலீட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டாம் பாளயத்தில் கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் நூற்பாலை விரிவாக்கத் திட்டம்ஆக மொத்தம் 8 ஆயிரத்து 996 கோடி ரூபாய் முதலீட்டில் 6 பெரிய தொழில் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

இத்திட்டங்களுக்கு அமைப்பு முறையிலான தொகுப்புச் சலுகை அளிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் சுமார் 6 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 11 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

வன்னிய கிறிஸ்தவர்கள்...

வன்னியர் கிறித்துவர்களை மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிப்பது குறித்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் கோரிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையின் மீது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையினை விரைவில் பெற்று பரிசீலிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

-இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The state cabinet meeting was held at secretariat on Saturday. Chief Minister M Karunanidhi presided over the meeting and the cabinet approves 6 important plans worth Rs 8,996 cr.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X