For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீரா ராடியா டேப் குறித்து விசாரிக்காதது ஏன்? - ஜெ. கேள்வி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சர்ச்சைக்குரிய அரசியல் - வர்த்தகத் தரகர் நீரா ராடியாவின் பேச்சுக்கள் மற்றும் அவருடன் நெருக்கமான தொடர்புள்ள அனைவரையும் சிபிஐ விசாரிக்காதது ஏன்? என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நம்பிக்கை, நாணயம் என்றால் அதற்கு மறுபெயர் டாடா என்றுதான் தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் கருதி வந்தனர். டாடா நிறுவனத்தினர் லஞ்சம் கொடுக்க மாட்டார்கள் என்பதும், டாடா நிறுவனத்தினர் அரசியலுக்கு இடமளிக்க மாட்டார்கள் என்பதும்தான் இந்திய தொழில் துறையினர் மத்தியில் நிலவி வந்த கருத்து.

துரதிர்ஷ்டவசமாக, இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அரசியல் வணிகத்தில் இன்று டாடாவும் விதிவிலக்கல்ல என்ற தர்மசங்கடமான கருத்து தற்போது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தொழில் நிறுவனமான டாடா குழுமத்திற்கு இந்த அவப்பெயரை பெற்றுத் தந்த பெருமை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களையும், தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியையுமே சாரும்.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கு சற்றுமுன், திடீரென உயர் பதவி பெற்ற கருணாநிதியின் பேரனும், அப்போதைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், டாடாவின் ஸ்டார் டி.டி.எச். நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை சன் டி.வி. குழுமத்திற்கு சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அளிக்குமாறு டாடாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தயாநிதி மாறனால் ஊக்குவிக்கப்பட்ட, தயாநிதி மாறனின் உடன்பிறந்த சகோதரர் கலாநிதி மாறன் தலைமை செயல் அலுவலராக உள்ள சன் டி.வி. குழுமத்திற்கு டாடா ஸ்டார் டி.டி.எச்.ன் பங்குகள் கொடுக்கப்படவில்லையெனில், டாடாவின் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கான அனுமதிக்கு ஆபத்து ஏற்படும் என்று தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையை அடுத்து, தயாநிதி மாறன் ஓரங்கட்டப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தவர் ரத்தன் டாடா தான்.

தயாநிதி மாறனுக்கு பிறகு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆ. ராசாவை புகழ்ந்து, பாராட்டி தன் கைப்பட எழுதிய தனிப்பட்ட ஒரு கடிதத்தை கருணாநிதிக்கு 13.11.2007 அன்று நீரா ராடியா மூலம் அனுப்பியிருக்கிறார் ரத்தன் டாடா.

தயாநிதி மாறன் தலைமையிலான தொலைத்தொடர்புத் துறையை தெளிவாக விமர்சிக்கின்ற இந்தக் கடிதம், சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவால் கருணாநிதியிடம் நேரடியாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் மூலம் இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக ராசாவை சிபிஐ தீவிரமாக விசாரித்துக் கொண்டு இருக்கிறது. ரத்தன் டாடாவால் நல்லவர் என்று கூறப்பட்ட ராசாவே இந்த அளவுக்கு ஊழல் புரிந்து இருக்கிறார் என்றால், அவருக்கு முன்பு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரும், அவருக்கு வேண்டியவர்களும் எந்த அளவிற்கு ஊழல் புரிந்து இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

ரத்தன் டாடா கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து, நீரா ராடியா கருணாநிதிக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது நன்கு தெளிவாகிறது. ரத்தன் டாடா தன்னுடைய கடிதத்தில் நீரா ராடியாவை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்தக் கடிதத்தின் மூலம், நீரா ராடியா கருணாநிதியின் பல்வேறு குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக நடத்திய உரையாடல்களை எளிதில் தள்ளுபடி செய்துவிட முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்காக 600 கோடி ரூபாய் பணத்தை தயாநிதி மாறன் தயாளுவிற்கு கொடுத்ததாக கூறப்படுவது; தொலைத்தொடர்புத் துறை ராசாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் கனிமொழி அதிக ஆர்வம் காட்டியது; தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை அளிக்கப்படாமல் கவனித்துக் கொண்டதற்கு கைமாறாக கனிமொழியின் தாயார் ராசாத்திக்கு சென்னையில் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று டாடாவிடம் ராசாத்தி கோரிக்கை வைத்தது ஆகிய அனைத்தும் மிகவும் ஆழமாக, கூர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

அமைச்சர்களை நியமனம் செய்யும் பிரதமரின் தனிப்பட்ட உரிமையை வெளி நபர்கள் பறித்துக் கொண்டது குறித்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டுமானால், கருணாநிதி, கனிமொழி, ராசாத்தி உட்பட நீரா ராடியாவுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இது உடனடியாக செய்யப்பட வேண்டும். இதைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ள இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் உரிமை இருக்கிறது."

-இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
The AIADMK supremo Jayalalitha demanded a thorough inquiry of CBI on power broker Nira Radia and her links with officials involved in 2 G spectrum scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X