For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை படையினரால் மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: தொடரும் அட்டூழியம்

By Chakra
Google Oneindia Tamil News

கொழும்பு: 112 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று அத்துமீறி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் 24 பேரை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் தமிழக மீனவர்களையும், அவர்களது 7 படகுகளையும் யாழ்பாணம் பகுதியில் உள்ள இலவாலை போலீசில் ஒப்படைத்தனர்.

நேற்று முன்தினம் தான் நாகை மீனவர்கள் 112 பேர் அத்துமீறி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை மீனவர்கள் அவர்களை கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை நேற்று யாழ்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக மீனவர்களை வரும் 28ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி கைதானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சிறை பிடித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 200 பேர் படகுகளில் நேற்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சிங்கள கடற்படையினர் விசை படகுகளில் வந்து அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதனால் படகுகள் தீப்பிடித்ததால் பலர் கடலில் குதித்து மற்ற படகுகளில் ஏறித் தப்பினர். 24 மீனவர்களை 7 படகுகளுடன் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்றனர். சிங்கள கடற்படையினர் சென்றதும் மற்ற மீனவர்கள் தமிழகத்துக்கு திரும்பினர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மீனவர் ராஜாமுகமது உடல் கருகி படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 2 பேரை கொன்றனர். அந்த வேதனை தீருவதற்குள் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்களிடையேயும், தமிழக மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி தமிழக மீனவர்களை தாக்கக்கூடாது என்று உத்தரவாதம் பெறுவதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அன்மையில் கொழும்பு சென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய சில நாட்களிலேயே இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இந் நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இலங்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தூதரகம் முற்றுகை-பொன்.ராதாகிருஷ்ணன் கைது:

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறியச் செயலைக் கண்டித்தும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 106 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் போராட்டம் நடத்துவது அவமானம்-பாஜக:

தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிராக திமுக நேற்று போராட்டம் நடத்தியதற்கும், காங்கிரசும் போராட்டம் நடத்துவதையும் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

அவர் கூறுகையில், இலங்கை கடற்படையால் துயரத்துக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசின் கையில் உள்ளது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே ரோட்டுக்கு வந்து போராடுவது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இதைவிட வேறு அவமானம் இல்லை. இதுவரை நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்காக குரல் எழுப்பாத காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் நெருங்குவதால் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்பட்டதும் கண்டன அறிக்கை வெளியிடுவதோடு விட்டு விடுவார்கள். இதுதான் அவர்கள் எடுத்த நடவடிக்கை. மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

ஆர்ப்பாட்டம்-திருமாவளவன்:

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் மீண்டும் திடீரென கடந்த 15.02.2011 அன்று 18 இழுவைப் படகுகளுடன் 112 தமிழக மீனவர்களை சிங்கள வெறியர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அத்துடன், மறுநாளே (16.02.2011) 27 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கடத்தப்பட்டு, அனைவரும் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக நாடு தழுவிய அளவில் உடனடிப் போராட்டத்தில் குதித்த நிலையிலும், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்ன நிலையிலும் இவற்றையெல்லாம் ஒருபொருட்டாக மதிக்காமல் அனைவரையும் சிறைப்படுத்தியுள்ளது சிங்கள இனவெறி அரசு. தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உறுதிமிக்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசு எத்தகைய முனைப்பும் காட்டவில்லை என்கிற நிலையே இதற்குக் காரணமாக உள்ளது.

கடந்த 1983லிருந்து இதுநாள் வரையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடத்தப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இந்திய அரசின் மெத்தனப் போக்கும், தமிழின விரோத நிலைப்பாடுமே சிங்கள இனவெறியர்கள் இத்தகைய செயல்களில் தொடர்ந்து ஈடுபட ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளன. எனவே இந்திய அரசு தமது தமிழின விரோதப் போக்கைக் கைவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கும் இத்தகைய போக்குகள் தொடராமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வற்புறுத்துகிறோம்.

தமிழர்களுக்கு எதிராகக் தமிழர்களைத் திருப்பிவிடும் சதி முயற்சியில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபடுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து வருகின்றனர் என்கிற தவல்களை உறுதிப்படுத்தப்படுவதாகவும் தற்போதைய நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. சிங்கள இனவெறியர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு இடங்கொடுக்காமல் தமிழினம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதை தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் உணர்ந்திட வேண்டும் என இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நாளை (18.02.2011) காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி..

மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும் விதமாக கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. அந்த தைரியத்தில்தான் இலங்கை ராணுவம் 106 தமிழக மீனவர்களை கைது செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களது உடைமைகளை சேதமின்றி திருப்பிக் கொடுக்கவும், மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொங்குநாடு முன்னேற்ற கழகம்..

கொங்குநாடு முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அத்து மீறிய செயல். 106 அமெரிக்கர்களையோ, ஐரோப்பியர்களையோ கைது செய்ய முடியுமா? இப்படி ஒன்று நடந்திருந்தால் அந்த நாடுகளுடைய செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும் எந்த வேகத்தை நமது அரசு காண்பித்திருக்க வேண்டும், ஏன் அமைதி காக்கிறோம் என்று புரியவில்லை? என்று கூறியுள்ளார்.

English summary
Sri Lankan fishermen have abducted 24 more TN fishermen yesterday. This incident has happened a day after 112 TN fishermen were abducted and jailed in Sri Lanka. The abducted 24 are kept in Lankan prison. Lankan navy killed 2 TN fishermen last month. Now Lankan fishermen have abducted TN fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X