For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் அந்த 31 பாமக வேட்பாளர்கள்?- புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Ramdoss
சென்னை: திமுகவிடமிருந்து ஒரு வழியாக 31 தொகுதிகளைப் பெற்றுள்ள பாமக, தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. சென்னையிலும் போட்டியிட விரும்பும் அக்கட்சி, புதுமுகங்கள் பலரையும் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாம்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் 31 தொகுதிகளில்தான் பாமக போட்டியிட்டது. தற்போதும் அதே எண்ணிக்கையில்தான் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகளில் செங்கல்பட்டு, ஆற்காடு, பெரணமல்லூர், தாரமங்கலம், காஞ்சிபுரம், முகையூர், எடப்பாடி, மேல் மலையனூர், ஓமலூர், கபிலமலை, பூம்புகார், மேட்டூர், திருப்போரூர், காவேரிப்பட்டினம், பவானி, திருப்பத்தூர், தருமபுரி, பண்ருட்டி ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதிகளை மீண்டும் கேட்க பாமக திட்டமிட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் மட்டும் 4 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாம் பாமக. அதில் சைதாப்பேட்டையும் அடக்கம் என்று தெரிகிறது. ஆனால் இத்தொகுதியில் திமுக சார்பில் மேயர் மா.சுப்பிரமணியன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை சைதாப்பேட்டை கிடைக்காவிட்டால், பல்லாவரம் தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது.

அதேபோல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளச்சேரி, திருவிக நகர் (தனி) மற்றும் அண்ணாநகர், மயிலாப்பூர் தொகுதிகளையும் குறி வைத்துள்ளதாம் பாமக.

இதேபோல சென்னைக்கு வெளியே, சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளையும் விருப்பப் பட்டியலில் சேர்த்துள்ளது பாமக. அம்பத்தூர் நகராட்சி தற்போது பாமக வசம் உள்ளது. இதை மனதில் கொண்டே அந்தத் தொகுதியை கேட்க விரும்புகின்றனராம் பாமகவினர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த பலருக்கும் மீண்டும் சீட் தருவதில்லை என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், நிறைய புதுமுகங்களை களம் இறக்கப் போகிறார்களாம். மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் உள்ள, வன்னியர் சமுதாயத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர்களை வேட்பாளர்களாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் அரசியல் சாயம் அதிகம் இல்லாத, அதாவது, புதுச்சேரியில் முன்பு பேராசிரியர் ராமதாஸை நிறுத்தியது போல, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாம்.

தர்மபுரி திமுகவில் அதிருப்தி

இப்படி ஒருபக்கம் எந்தெந்த சீட், யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணக்கில் பாமக இருந்து வரும் நிலையில், மறுபக்கம் ஆங்காங்கு திமுகவினர் மத்தியில், பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு அதிருப்தியும் கிளம்பியுள்ளதாம்.

குறிப்பாக தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வரையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தபோது பாமகவுக்கு எதிராக சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் கடும் கோபத்துடன் இருந்தனர். சேலத்தில் இந்த மோதல் வெளிப்படையாகவே இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்த்துள்ளதை இந்த பகுதி திமுகவினர் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில், பாமகவுடன் இணைந்து செல்வதை திமுகவினர் விரும்பவில்லையாம்.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக தொகுதிகளைக் கேட்க பாமக திட்டமிட்டு வருவதும் திமுகவினரை எரிச்சல்படுத்தியுள்ளதாம்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதில் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் தர்மபுரி, பாலக்கோட்டில் பாமக போட்டியிட்டிருந்தது. பென்னாகரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் கடுமையாக போராடி 2வது இடத்தைப் பிடித்து அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே இந்த மூன்று தொகுதிகளையும் கேட்க அது திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், தர்மபுரி தொகுதியில் திமுக போட்டியிடும் என ஏற்கனவே கருணாநிதி தெரிவித்துள்ளதால் அந்தத் தொகுதி பாமகவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தர்மபுரியில் ஜி.கே.மணியை போட்டியிட வைக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதியைப் பெற கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணியின் மகனான தமிழ்க்குமரன் மேட்டூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல பென்னாகரம் தொகுதியையும் திமுக தராது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடுமையான சூழலில் வென்ற தொகுதி இது என்பதால் அதை விட்டுத் தர திமுக முன்வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி முக்கிய தொகுதிகளை, ஜஸ்ட் லைக் தட் கூட்டணிக்குள் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டுள்ள பாமக குறி வைத்திருப்பதால் தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் கட்சித் தலைமையும், பாமக தலைமையும், இவர்களை எப்படியாவது சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.

மாபெரும் வெற்றிக் கூட்டணி-அன்புமணி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை, டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் வீட்டில் சந்தித்து தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

அப்போது பாமக எம்.எல்.ஏ வேல்முருகன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், அன்புமணியின் மனைவி செளமியா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன். காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள திமுக கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் இணைந்து பணியாற்றுவது குறித்து, திமுக கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

English summary
PMK is busy in selecting candidates for TN Assembly polls. PMK has got 31 seats from DMK. It is aiming major constituencies from DMK. The party has decided to field more new faces in the election. But there are some dissent in DMK camp, particularly in Dharmapuri. The DMK men from Dharmapuri oppose to allocate vital seats to the PMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X