For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரசுக்கு 1980 'கதையை' நினைவூட்டிய திமுக!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi and Sonia
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 சீட்களே தர முடியும் என திமுக கூறியதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரசுக்கு குறைந்தபட்சம் 80 சீட்கள் தர வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும்-பங்கு தருவதாக தேர்தலுக்கு முன்பே அறிவிக்க வேண்டும், கூட்டணி ஆட்சி நடத்தும் வகையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்-அதை தேர்தல் அறிக்கையோடு சேர்த்து வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தனது நிபந்தனைகளை திமுகவிடம் விதித்தது.

தமிழக அரசியல் குறித்தோ- தமிழ்நாட்டில் காங்கிரசின் பலம் குறித்து ஏபிசிடி கூட தெரியாத அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி டெல்லியில் கோல்ப் விளையாடிய நேரம் போக, மி்ச்ச நேரத்தில் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, லேப்-டாப்பில் போட்டுத் தந்த இந்த 80 சீட் கணக்கை அப்படியே திமுகவிடம் வந்து தந்தது காங்கிரஸ் குழு. இந்த சீட் கணக்கு கூட திமுகவை எரிச்சலாக்கவில்லை. அதையொட்டி வைக்கப்பட்ட ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் ஆகியவை தான் கடும் கோபத்தைத் தந்தன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையையும் சிபிஐயையும் கையில் வைத்துக் கொண்டு காங்கிரஸ் நடத்தும் இந்த நெருக்கடி நாடகத்துக்கு இனியும் பணிவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக, ஒரு விஷயத்துக்காக காத்திருந்தது.

அது.. அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாவதற்காக. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் நம்மை விட்டால் காங்கிரசுக்கு வேறு நாதி இருக்காது என்பதால்.. அதுவரை பொறுமை காத்தது திமுக.

இரு தினங்களுக்கு முன் ஜெயலலிதா-விஜய்காந்த் கூட்டணி உறுதியாகிவிட்டதை உளவுப் பிரிவு மூலம் உறுதி செய்து கொண்ட திமுக, காங்கிரசுக்கு தனது பதிலை அனுப்பியது.

அதில், கடந்த முறை பாமகவுக்கு 31 சீட் தந்தோம், இப்போதும் அதையே தந்திருக்கிறோம். அதே போல கடந்த முறை உங்களுக்கு 48 சீட்கள் தந்தோம். இந்த முறையும் அதே அளவு சீட்களைத் தான் தர வேண்டும் என எங்கள் கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். கடந்த முறை எங்கள் கூட்டணியில் இருந்த இடதுசாரிகளுக்கு 23 இடங்கள் தரப்பட்டன. இப்போது அவர்கள் இல்லை. ஆனால்ஸ விடுதலை சிறுத்தைகள் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்துள்ளன. அவர்களுக்குத் தந்தது போக 23ல் எவ்வளவு மிச்சம் உள்ளதோ அதை வேண்டுமானால் காங்கிரசுக்குக் கூடுதலாகத் தர முடியும். (இந்த அடிப்படையில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 இடங்கள் கிடைக்கலாம்)

மற்றபடி நாங்கள் கடந்த முறை போட்டியிட் 132 தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும். எனவே உங்களுக்கு எங்கிருந்து 80 சீட் தருவது என்ற கேள்வியோடு தனது கருத்தை காங்கிரசுக்கு திமுக அனுப்பியது.

மேலும் கடந்த 1980ம் ஆண்டு தேர்தலில் இப்படித்தான் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று சொல்லி திமுகவும் காங்கிரசும் தலா 110 இடங்களில் போட்டியிட்டோம். ஆனால், அந்தக் கூட்டணியை மக்கள் நிராகரித்தனர். கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் தமிழக மக்களால் ஏற்கப்படாது என்பதையும் காங்கிரசுக்கு திமுக தரப்பு நினைவூட்டியது. (இந்தக் 'கதையே' ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.)

ஆனால், இதைக் கேட்டு காங்கிரஸ் கொதித்துப் போனது. பாமகவே வேண்டாம் என்று சொன்னோம்.. ஆனால், அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டதோடு எங்களிடமும் கேட்காமல் ஏன் 31 சீட்களை அவசர அவசரமாக ஒதுக்கித் தந்துவிட்டீர்கள். அவர்களுக்கு சீட்டைக் குறைத்திருக்கலாம். எங்களை சிக்கலில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாமகவுடன் அதிவேக கூட்டணி அமைத்தீர்கள். 31 இடங்களை ஒதுக்குவது என்பது 12% வாக்குகளுக்கு சமம். அவ்வளவு பலம் பாமகவுக்கு உள்ளதா என தனது கோபத்தை காங்கிரசும் கேள்வியாகவே திமுகவுக்கு அனுப்பியது.

ஆனால், காங்கிரஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் இனியும் போக வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட திமுக மாற்று செயல் திட்டம் குறித்தும் யோசிக்க ஆரம்பித்தது.

நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக உயர் மட்டத் தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். அதில் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல பொறுப்பாளருமான அழகிரியும் கலந்து கொண்டார். அதில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், காங்கிரஸ் மிரட்டலுக்கு இனியும் நாம் பணிவது தேவையில்லை என்ற கருத்தையே தெரிவித்தனர்.

குறிப்பாக பிகார் தேர்தலில் காங்கிரசுக்கு மாபெரும் தோல்வியைத் தேடி தந்த ராகுல் காந்தி பார்முலாவைத் தான் இங்கும் டெஸ்ட் செய்ய நினைக்கிறது காங்கிரஸ். இது அவர்களை மட்டுமல்ல, அவர்களோடு சேர்த்து நம்மையும் மண்ணைக் கவ்வ வைத்துவிடும் என்றும் திமுக தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

காங்கிரசுக்கு அதிக இடங்கள் தருவது என்பது அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வெற்றியை நாமே தாம்பாளத்தில் வைத்துத் தருவதற்குச் சமம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இதில் அவசரம் காட்டினால் நல்லதல்ல என்று முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சமாதானம் கூறியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர்கள் தனித்து நின்று ஒரு இடத்தில் வென்றாலும் அது அவர்களுக்கு வெற்றி தான். நமக்கு அப்படியல்ல. அதிமுக கூட்டணி வலுவாகிவிட்ட நிலையில் நாம் கொஞ்சம் விட்டுத் தருவதே நல்லது என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.

மேலும் நாம் கழற்றிவிட்டால் அதிமுகவுடன் அரைகுறை மனதுடன் போய் சேர்ந்திருக்கும் தேமுதிக கூட வெளியே வந்து காங்கிரஸ் கூட்டணியில் போய் ஒட்டிக் கொள்ளவும் வாய்ப்புள்ளதாக உளவுப் பிரிவினர் கூறியுள்ள தகவல்களையும் முதல்வர் திமுகவினருடன் பகிர்ந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் யாருக்கும் சாதகமில்லாமல் வந்தால் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைக்கவும் சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸை இப்போதைக்கு நாமாக கழற்றிவிடக் கூடாது, அவர்களும் நம்மை கை கழுவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கே திமுக மீண்டும் வந்துள்ளது.

இந் நிலையில் தான் இன்று இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் சந்தித்துப் பேசுவது என முடிவானது.

English summary
Tamil Nadu will have a coalition government if the DMK-led alliance is re-elected. Congress leaders on Tuesday indicated that DMK may give up its reluctance to share power with allies in the state. Congress managers, negotiating a seat sharing formula with DMK, said the southern ally will not insist on running a single party government in the next term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X