For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த 6 ஆண்டுகளுக்கு நானும் இருப்பேன், ஆட்சியும் நீடிக்கும்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இன்னும் 6 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றுவோம். அதுவரை நானும் இருப்பேன், திமுக ஆட்சியும் இருக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சில வாரங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இருந்தாலும் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை விடவில்லை. அப்படியே வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் முறைப்படி திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான சேகர் பாபு ஆரவாளர்களும் வந்திருந்து திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

வேறு மரத்தில் படர்ந்திருந்த கொடி:

அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தோடு, வேதனையோடு இன்றைக்கு இந்த மேடையிலே பல ஆண்டுகளுக்கு பிறகு காணுகிற இந்த மைதானத்தை கண்டு மனம் வெதும்புகிறேன். இன்னும் எத்தனையோ பேர் இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள் இன்று இல்லை. ஆனால் அவர்கள் இட்ட எரு இன்றைக்கு தருவாகி, அந்த தரு நிழலில் நாமெல்லாம் அமர்ந்திருக்கிறோம். அதில் வளர்ந்த செடி கொடிகளில் ஒன்று தான் சேகர்பாபு. இந்த கொடி வேறு ஒரு மரத்திலே படர்ந்திருந்தது.

இன்றைக்கு அங்கிருந்து விடுபட்டு எந்த மரத்தில் படர்ந்தால் மரத்துக்கும், கொடிக்கும் நல்லது என்று அறிந்து இன்று படர்ந்திருக்கிறது. அ.தி.மு.க. கப்பல் ஓட்டையாகிவிட்டது, அதனால் அங்கிருந்து அவர் தப்பி வந்துவிட்டதாக துரைமுருகன் கூறினார்.

கப்பல் நன்றாகத்தான் இருந்தது, பளபளப்பாகத் தான் இருந்தது, ஓட்டை இல்லாமல் வலுவாக இருந்தது, எந்த திசைக்கு வந்து கரை சேரவேண்டுமோ அங்கு செல்லாமல் திசை மாறி சென்றுவிட்டது. சட்டப்பேரவையில் நான் பார்த்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாற்றுக்கட்சி உறுப்பினர்கள்- இன்னும் தெளிவாகச் சொன்னால் அ.தி.மு.க. உறுப்பினர்களில் தெளிவு படைத்தவராகத் தெரிந்தவர் சேகர்பாபு என்பதால், இது என்ன கப்பல் திசை மாறிப் போகிறது, இவருக்கு இது தெரியவில்லையா, அந்த கப்பலில் உட்கார்ந்திருக்கிறாரே என்ற அந்த அர்த்தத்தில்தான் நான் ஸ்டாலினிடத்திலே பல முறை கேட்டிருக்கிறேன்.

அவர் எதையும் அவசரப்பட்டு செய்யமாட்டார். ஆர அமர யோசித்து, இறுதியாகத்தான் முடிவெடுப்பார் என்று ஸ்டாலின் தெளிவுபடுத்தினார். அவர் அப்படி முடிவெடுத்தால் - அந்த முடிவு வலிவான முடிவாக இருக்கும். அந்த முடிவு யாரும் விமர்சிக்கத்தக்க முடிவாக இல்லாமல், பாராட்டத்தக்க முடிவாக இருக்கும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்றைக்கு சேகர்பாபு நம்மிடத்திலே வந்து வீற்றிருக்கின்ற இந்த காட்சி.

தவழ்ந்து வரக் காத்திருந்தேன்:

சேகர்பாபு துடிதுடிப்பாக சட்டப்பேரவையில் பேசக்கூடியவர். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு துடிதுடிப்பாக பேசக்கூடியவர் இங்கல்லவா இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதுண்டு. அதற்காக வலை வீசியது கிடையாது. வரும்போது வரட்டும், அப்படி வருகிற நேரத்தில் நாம் தவழ்ந்து வருகிற குழந்தையை தாய் தாங்கிக்கொள்வதைப் போல தாங்கிக்கொள்ளத் தயாராக இருப்போம் என்றுதான் காத்திருந்தேன். காத்திருந்த என்னுடைய எண்ணம் இன்றைக்கு கைகூடிவிட்டது.

நீங்கள் இருந்த இடம் என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற இடம். அங்கிருந்து நீங்கள் இங்கு வந்துவிட்டதற்கு காரணம் - எம்.ஜி.ஆர். உருவாக்கிய அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். என்ன கருதி அந்த இடத்தை உருவாக்கினாரோ, அதற்கு நேர்மாறாக, அவருக்கே பகையாக, அவருக்கே முதல்-அமைச்சர் வேலை பார்க்கத் தகுதி இல்லை என்று குற்றம் சொல்கிற, குறை சொல்கிற நிலை அங்கே ஏற்பட்டு, அவரை முதல்-அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, தன்னை முதல்-அமைச்சராக ஆக்குங்கள் என்று சொல்லுகின்ற ஒரு அம்மையார் அங்கே தலையெடுத்து விட்ட காரணத்தால், அப்பொழுதே அவர் அந்த அம்மையாரைப் பற்றி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு எடுத்துச்சொன்னார். ஆனால், அது காதில் விழ, சேகர்பாபுவுக்கு இவ்வளவு காலம் ஆயிற்று! இப்போதாவது அது காதில் விழுந்து தானும் தப்பித்துக் கொண்டு, தமிழ்நாட்டையும் தப்ப வைத்திருக்கிறார் என்பதற்காக நான் சேகர் பாபுவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழகத்திலே இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல், இது தேர்தல் நேரம். தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் - இடங்களின் எண்ணிக்கைகள் - இவைகளெல்லாம் தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளால் - கட்சித் தலைவர்களால் கணக்கிடப்படுகின்ற வேளை. உங்களுக்கு எத்தனை இடம் - எங்களுக்கு எத்தனை இடம் என்று பங்கு பிரித்துக்கொள்கிற நேரம்.

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, அந்த இடத்திற்குப் பெயர் என்ன என்று ஒவ்வொருவரும் தொகுதிகளை அடையாளம் காட்டி, அந்தத் தொகுதிகளில் யார் நிற்பது என்று பெயரையும் எடுத்துக் காட்டி, அந்தப் பெயருக்குரியவர் வெற்றி பெறுவதற்காக இருதரப்பிலும் பணியாற்றக் கூடிய காலம் சில நாட்களிலே அல்லது வாரக்கணக்கிலே இருக்கிறது. நாமெல்லாம் தேர்தல் களத்திலே இறங்கி வேலை செய்ய வேண்டிய நாள் வெகு விரைவிலே வந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மக்களாட்சியின் மகிமையை வலுப்படுத்துகின்ற வகையிலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்கின்ற மலிவான விலைக்கு மக்களுடைய உணவுக்கு முக்கியத்துவம் தந்து அரிசியை விலை குறைத்து வழங்குகின்ற ஒரே ஆட்சி - இந்தியாவிலே தி.மு.க. ஆட்சி.

பக்கத்திலே கேரள மாநிலம் கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற மாநிலம். நேற்றைக்குத்தான் செய்தி வருகிறது - கேரளத்தில் இனிமேல் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு தரப்படும் என்ற அறிக்கை. ஏழை, எளிய மக்கள் இல்லாவிட்டால் நாங்கள் இல்லை - இந்த இயக்கம் இல்லை - இந்த இயக்கத்தினுடைய லட்சியங்கள் இல்லை - கொள்கைகள் இல்லை. எனவே, அவர்களை வாழ வைக்க அண்ணாவின் லட்சியமான, ஏழைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதுதான் முதல் பணி என்று, இன்றைக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று கொடுக்கிறோம்.

அரிசி மாத்திரம் கொடுத்தால் போதுமா! அகில இந்திய அளவிலே விலைவாசி ஏறியிருக்கிறதே என்று சில பேர் கை உயர்த்தியபோது, பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு அமைதி கற்பித்து, சமையல் பொருட்கள், பண்டங்களான பருப்பு, பாமாயில், உளுந்து - இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களையெல்லாம் 10 பொருள்களை ஒரு பையிலே வைத்து, விலை குறைவாக - விலைவாசியைச் சமாளிக்கலாம் என்று அதற்காகவும் பணியாற்றிய அரசு தி.மு.க. அரசு.

அது மாத்திரமல்ல! ஒரு பெண்ணுக்கு திருமணமே ஆகாமல், வாழாவெட்டியாகி விடுவாளே என்று பெற்றோர் தவிக்கின்ற நேரத்தில், அந்தப் பெண்ணின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்காக ரூ.25 ஆயிரம் நன்கொடையும் தருகின்ற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

மாமன மச்சான் கூட செய்ய மாட்டான்:

திருமணமான பிறகு குழந்தை பிறக்குமே! குழந்தை உருவானால் அதற்கு செலவாகுமே என்று வருந்துகின்றவர்களைப் பார்த்து, வருந்தாதீர்கள் என்று அபயக்கரம் நீட்டி, குழந்தை உருவான அந்த பெண்ணுக்கு ஆறுமாத காலத்திற்கு ஆகிற எல்லா செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்ற அளவிற்கு 6 ஆயிரம் ரூபாய். மாமன் மச்சான் கூட இந்த அளவிற்கு அந்த குழந்தைக்காக செலவு செய்ய மாட்டான். அந்த செலவை தி.மு.க. அரசே ஏற்றுக்கொள்கிறது.

அது மாத்திரமல்ல, தமிழகத்திலே எத்தனை குடிசைகள் இருக்கின்றன என்று கணக்கிட்டு அந்த குடிசைகளையெல்லாம் கோபுரங்கள் ஆக்குவோம். மதுரை கோபுரமாக அல்ல, திருவரங்கம் கோபுரமாக அல்ல. வாழக்கூடிய குடும்பக் கோபுரங்களாக ஆக்குவோம். ஒவ்வொரு குடும்பமும், பெண்டு பிள்ளைகளோடு, குழந்தைகளோடு வாழக்கூடிய குடும்பங்களின் குடிசைகளை - கான்கிரீட் வீடுகளாக மாற்றுவோம் என்று கணக்கிடச் செய்து, ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டுவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்ட ஆரம்பித்து, 3 லட்சம் குடிசைகளை இன்றைக்குக் கான்கிரீட் வீடுகளாக அமைந்து வருகின்றோம்.

இன்னும் 6 வருடத்தில், தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் வீடுகளாக ஆகிவிடும். இன்னும் 6 வருடத்திலா, நீ இருப்பாயா! என்றால் நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும்''. நீங்கள் இருக்கும்போது நாங்கள் இல்லாமல் எங்கே போவோம்!

ஆகவே, நாங்கள் வெளியிட்டிருக்கின்ற இந்த திட்டங்களையெல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அவைகளைத் தொடங்கி விட்டோம். ஏறத்தாழ ஒரு லட்சம் வீடுகள் இப்பொழுதே கான்கிரீட் வீடுகளாக - பல கிராமங்களில், பல நகரங்களில் மாற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 6 ஆண்டு காலத்தில் ஒரு அயல்நாட்டுக்காரன் தமிழ்நாட்டிற்கு வந்து பார்த்தால், அதிசயப்படுவான். ஏ அப்பா! இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே குடிசைகள் இல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடுதான்'' என்று சொல்வான்.

உலகத்திலே உள்ள பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு, இந்தியாவிலே, தமிழகத்திலே குடிசைகள் அற்ற கிராமங்கள், நகரங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி இரும்பூதெய்துவார்கள். அந்த காணக் கிடைக்காத காட்சியைக் காண எதிர்காலத்திலே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். எங்களையும் தயார் நிலையிலே வையுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் கருணாநிதி.

English summary
CM Karunanidhi has said that, ADMK is working against MGR ideals. RK Nagar ADMK MLA P.K.Sekharbabu officially joined DMK yesterday. CM Karunanidhi welcomed Sekharbabu. While he was speaking he hailed Sekharbabu as a good orator and fighter. He also said Sekharbabu has realised that ADMK is deviating from MGR's ideals, so that he has left the party and joined DMK. CM noted that TN will be hut free in next 6 years. I will be there till then and the DMK rule also continue, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X