For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த நெருக்கடியிலும் திமுகவை மக்கள் காப்பாற்றுவார்கள்-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். அதுபோல எனக்கும் ராமதாசுக்கும் இடையே என்னதான் பிணக்குகள் வந்தாலும் ஒரு லட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் பேரன் சுகந்தனுக்கும், டீனாவுக்கும் இன்று சென்னை மேயர் இராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். புது மணத்தம்பதிகளை கருணாநிதியும், தயாளு அம்மாளும் வாழ்த்தினர்.

திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து கருணாநிதி பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி அன்புமணி ராமதாஸ் அவர்களே, தம்பி ஸ்டாலின் இங்கே வாழ்த்தும்பொழுது தேர்தல் திருமணம் என்று குறிப்பிட்டார். இது மணமகனை மணமகள் வீட்டாரும், மணமகளை மணமகன் வீட்டாரும் தேர்வு செய்த பிறகு நடைபெறுகின்ற திருமணம். ஏற்கனவே இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம். எனவே ஒரு நல்ல கூட்டணி, இரு குடும்பத்திற்கிடையே அமைந், அந்தக் கூட்டணி இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய கூட்டணியாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு அவர்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

பாமக தலைவர் ஜி.கே மணி பேசும்போது, கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, எதிர்க் கட்சி கொறடாவாக, அண்ணா அமைச்சரவையிலே அமைச்சராக, பிறகு முதலமைச்சராக என்று இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்தப் பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற, இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்.

புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என்று யாராவது கேட்பீர்களேயானால், இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மணமக்களை நான் வாழ்த்துகிறேன். என்னுடைய அன்பை, உண்மையான நெஞ்சத்தை, உறவு முறையில் காட்ட வேண்டிய அந்தப் பாசத்தை மணமக்களுடைய குடும்பத்தாருக்கு குறிப்பாக அய்யா ராமதாஸ் அவர்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.

குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக, ராமதாஸ் மணமகளாக இருந்தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ஆனாலும் ஒரு லட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம் என்பதற்கு நீங்கள் காணுகின்ற காட்சி தான் சாட்சி என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

நம்முடைய நாட்டில் காலாகாலமாக நடைபெற்ற தமிழகத்தின் திருமணங்கள் எல்லாம், சங்கக் காலத்துத் திருமணங்கள் எல்லாம், ஞாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் முந்தையும் எம்முறை கேளிர், நானும் நீயும் எவ்வழி அறிதும்- செம்புலப் பெய் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே - நீ யாரோ, நான் யாரோ, உன்னுடைய தந்தை யாரோ தாயார் யாரோ,செம்புலப் பெய் நீர் போல, சிகப்பு நிறத்திலே ஊற்றப்பட்ட தண்ணீர் அந்த வண்ணத்தோடு கலந்து ஒன்றாகி விடுவதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் கலந்து விட்டன என்று சொல்லி மணவிழாவை முடித்துக் கொண்டார்கள்.

அந்தத் தமிழர்களுடைய திருமணம் இடைக்காலத்தில் தடைபட்டு விட்டன என்று நாம் எண்ணியதற்கு மாறாக பெரியாருடைய கொள்கைப் பற்றால், அதனை சட்டப்பூர்வமாக நிறைவேற்றியதோடு மாத்திரமல்ல- இப்படி எங்களுடைய குடும்பங்களிலும் தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும், நடத்துவோம், சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடத்துவோம் என்கின்ற உறுதியோடு ராமதாஸ் இங்கே நடத்திக் காட்டிய திருமணம், பழந்தமிழர் காலத்திலே பசும்புல் தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை, அது காலத்தால் அழிவதுமில்லை என்று வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக இங்கே இருந்ததை நான் கண்டேன். வியந்தேன், வாழ்த்துகிறேன். ராமதாஸையும், அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கட்சித் தோழர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

அந்தக் கட்சியிலே உள்ள அத்தனை உறுப்பினர்களையும் நான் வழக்கமாகச் சொல்வதைப் போல என்னுடைய உடன்பிறப்புகள் என்ற முறையில் அந்த உடன்பிறப்புக்களுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லி, நாம் அடையப் போகும் வெற்றிக்கு இது முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டக்கூடிய போற்றக் கூடிய, விரும்பக் கூடிய விழாவாக அமையும், அதைப் போல இந்தக் குடும்ப விழா எல்லோராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக, வெற்றிக்கு அடையாள விழாவாக இந்த விழா அமைந்திருக்கின்றது என்று கூறி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி, இன்று ராமதாஸ் பேரனுக்கான திருமணம், இனி கொள்ளுப் பேரனுக்கு நடைபெறுகின்ற திருமண விழாவிலும் கலந்து கொள்கின்ற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்குக் காரணம் அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன். அப்படி நீடிப்பதற்கு அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

திருமணத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மக்கள் காப்பாற்றுவார்கள்:

இதையடுத்து துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு 20,000 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. அதி்ல் கலந்து கொண்டு முதல்வர் பேசுகையில்,

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினை நான் மகனாக பெற்றேன் என்பதை விட நீங்கள் தொகுதியின் பிரதி நிதியாக அவரை பெற்றிருக்கிறீர்கள். பொதுவாக எல்லோருக்கும் பிறந்தநாள் வரும். ஆனால் சிலரது பிறந்தநாள்தான் போற்றப்படுகிறது. பாராட்டப்படுகிறது. எல்லோராலும் வாழ்த்தப்படுகிறது.

இதை எல்லோராலும் பெற முடிவதில்லை. இதைப் பெற்றுள்ள கழகப் பொருளாளரை நான் துணை முதல்வர் என்று அழைப்பதை விட பொருளாளர் என்று அழைப்பதைதான் பாராட்டத்தக்க பதவியாக கருதுகிறேன். அண்ணா தலைமையில் நான் திமுக பொருளாளராக இருந்தபோது இந்த இயக்கத்தின் சார்பில் 1967ல் நடந்த பொதுத் தேர்தலுக்கு அண்ணாவிடம் ரூ.11 லட்சம் நிதியை கொடுத்தபோது அவர் நம்பவில்லை. நம் இயக்கத்துக்கா இவ்வளவு என்று ஆச்சரியத்துடன் கேட்டார். இன்று திமுகவை வெற்றி பெற செய்ய, வெற்றியை தேடித்தர சாதாரண மக்கள், தொழிலாளர் தோழர்கள், பாட்டாளி மக்கள், ஏழைகள் என எல்லோரும் தங்களால் இயன்றதை தந்து இந்த இயக்கத்தை வளர்க்கிறார்கள். வளர்க்கத் தயாராக இருக்கிறார்கள்.

அவர்களால் வளர்க்கப்பட்ட, அவர்களே வளர்ந்த இயக்கம் திமுக இந்த இயக்கம் தமிழ் இன உணர்வை ஊட்டும் கழகமாக உள்ளது. நீங்கள் எந்த நெருக்கடியிலும் இந்த இயக்கத்தை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் அன்றாடம் உங்களை சந்தித்து வருகிறேன். நான் ஒரு முதல்வராக மட்டுமல்ல தொண்டர்களில் ஒருவனாக உங்களுக்காக உழைக்கிறேன். இந்த இயக்கத்தின் சார்பாக, உங்களுக்கு பாத்திரம், பண்டம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ள தாய்-தந்தைக்கு தருவதுபோல் வழங்கப்படுகிறது. இதில் நானும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

English summary
TN CM Karunanidhi attended PMK founder Ramadoss's grandson Sugandhan, Tina's wedding today. He blessed the newly wed couple with his wife Dayalu Ammal. Apart from him, deputy CM Stalin, ministers Ko. Si. Mani, Veerapandi Arumugam, Duraimurugan, Ponmudi, PMK leader G.K. Mani, IUML state head Kader Mohaideen attended the wedding and blessed the couple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X