For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஜெயலலிதாவே வெல்வார்-இந்தியா டுடே கணிப்பு

By Shankar
Google Oneindia Tamil News

Jayalalitha
டெல்லி: வரும் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி வரை பல கட்டங்களாக நடக்கவிருக்கும் 5 மாநிலத் தேர்தல்கள் குறித்து பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் கள ஆய்வு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகின்றன.

இவற்றில் கடந்த வாரம் வெளியான நக்கீரன் கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 146 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 80 இடங்கள் கிடைக்கும் என்றும் 8 இடங்களில் இழுபறி நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்தியா டுடே-ஓஆர்ஜி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 164 தொகுதிகளையும், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

சதவீத அடிப்படையில் பார்த்தால், அதிமுக கூட்டணிக்கு 50 சதவீதத்தினரும், திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2 ஜி விவகாரம்:

திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எழுந்த முறைகேடுகள்தான். இதுகுறித்த முழுமையான விவரங்கள் தங்களுக்குத் தெரியும் என்று 50.5 சதவீதத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விலைவாசிதான் இந்த ஆட்சியின் மிகப் பெரிய பிரச்சினை என்று 59.3 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சியை விட கருணாநிதி ஆட்சியில்தான் ஊழல் அதிகம் என்று 39.3 சதவீதத்தினர் குறிப்பிட்டுள்ளனர். திமுக ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்புகள் ஏராளம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், 37 சதவீதத்தினர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர், இலங்கை கடற்படையினரால் தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனை திமுக அரசு தடுக்கத் தவறியதாகக் கருத்துக் கூறியுள்ளனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதத்தினர் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் அவசியம் என்று கூறியுள்ளனர்.

யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு 36.1 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 34.1 சதவீதத்தினர் கருணாநிதிக்கும் வாக்களித்துள்ளனர். இந்தக் கேள்விக்கு ஸ்டாலின் பெற்றுள்ள வாக்குகள் 3.5 சதவீதம் மட்டுமே. ப சிதம்பரத்துக்கு 0.6 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர்.

இதே போல, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் தொடர் ஆட்சிக்கு இந்த முறை முடிவு கட்டப்படும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில்...

மம்தா தலைமையிலான கூட்டணிக்கு 182 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் அணிக்கு 101 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 11 இடங்களும் கிடைக்கும் என இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

53 சதவீதம் மேற்கு வங்க வாக்காளர்கள் ஆட்சி மாற்றம் தேவை என்று கூறியுள்ளனர். 38 சதவீதத்தினர் இப்போதுள்ள ஆட்சி தொடர ஆதரவளித்துள்ளனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

2009ல் பொய்யான இந்தியா டுடே கருத்துக் கணிப்பு:

ஆனால், 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு பொய்த்தது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய கருத்துக் கணிப்பில் அதிமுக தான் 21 இடங்களில் வெல்லப் போவதாகவும், ஜெயலலிதா மீண்டும் தலையெடுக்கப் போவதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வியே ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்தத் தேர்தலில் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது அப்படியே உல்டா ஆனது நினைவுகூறத்தக்கது.

அதிமுகவே வெல்லும்-அவுட்லுக், எம்டிஆர்ஏ கணிப்பு:

அதே போல அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும்,

திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் பேரும், மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

English summary
The recent opinion poll of India Today-Headlines Today-ORG predicted that AIADMK supremo J Jayalalitha will ride back to power in Tamil Nadu in the ensuing assembly elections. The grand alliance, stitched together by AIADMK supremo J. Jayalalithaa, is expected to bag 164 out of 234 seats and send chief minister M. Karunanidhi's DMK-led coalition packing. The projection for the DMK alliance stands at 68. In West Bengal, ORG projects Trinamool and allies will get 182 seats, the Left will get 101 seats, and others 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X