For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடித் திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் செயலை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் வாக்குப் பதிவுக்கு கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

ரூ. 23 கோடி பணம் பறிமுதல்

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் ஆணையம் சட்டப்படியும், பாரபட்சம் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக பணம், பரிசுப்பொருட்கள், மதுபானம் கொடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் வாகன சோதனை சாவடிகளுடன், தேர்தலையொட்டி புதிதாக வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாகன சோதனையில் இதுவரை ரூ.23 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு மட்டும் பணம் திருப்பி தரப்பட்டுள்ளது.

பண பட்டுவாடாவை தடுக்க வழக்கம் போல சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பணம் கடத்தப்படுவது, மறைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி யாராவது புகார் தந்தால், உடனே நடவடிக்கை எடுக்கிறோம். இதுவரை பகலில் மட்டும் நடந்த வாகன சோதனை, இனிமேல் இரவு நேரத்திலும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பண பட்டுவாடா அதிகளவில் நடைபெறும் என்று கருதப்படும் பகுதிகளில் 24 மணி நேரமும் வாகன சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு, வாக்காளர்களுக்கு பல வழிகளில் பணம் கொடுக்க முயற்சி நடக்கும் என்று கூறப்படுவதால், மாநிலம் முழுவதும் அந்த 2 நாட்கள் தீவிர வாகன சோதனை நடைபெறும். இந்தப்பணியில் ஏராளமான துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

துணை ராணுவத்தினர் வருகை ரகசியம்

வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் வருகிறார்கள்? எந்தந்த பகுதிகளில் பணி அமர்த்தப்படுகிறார்கள்? என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், கூடுதலாக போலீஸ் போடப்படும் பகுதிகளைவிட்டு விட்டு, மற்ற பகுதிகளில் பண பட்டுவாடா நடைபெறலாம். அதனால்தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.

அத்தனை பூத்களும் முக்கியமானவை

தமிழகத்தில் அமைக்கப்படும் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமானவைதான். வாக்குச்சாவடிகளில் முக்கியமானவை என்பது வேறு, பதட்டமானவை என்பது வேறு. பதட்டமான வாக்குச்சாவடிகளில் தேவையான அளவுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்தல் நாளன்று, பதட்டமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக பணியாற்றுவார்கள். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். எனவே, வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் ஓட்டுப் போடலாம்.

பண பட்டுவாடாவை தடுக்கும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டங்களில் கூடுதலாக பறக்கும்படை தேவைப்பட்டால், அதுபற்றி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கூடுதல் பறக்கும்படை அமைக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

குக்கிராமங்களிலும் ரெய்டு செய்வோம்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, டூவீலர், கார், வேன், லாரி, பஸ்களில் பணம் கடத்தி செல்வதை தடுத்து வருகிறோம். இனிமேல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுப்போம். நகரங்களில் உள்ள முக்கியமான ரோடுகள் மட்டுமல்லாமல் இணைப்பு சாலைகள், தெருக்களிலும், கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலும் வாகன சோதனை நடத்தி பண பட்டுவாடா தடுக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் வாக்காளர்களுக்கு சர்வசாதாரணமாக பணம் கொடுப்பது தடுக்கப்பட்டு உள்ளது. திருட்டுத்தனமாக பணம் கொடுப்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

ஓட்டுக்காக மக்கள் பணம் வாங்கக்கூடாது. அதேநேரத்தில் பண விநியோகம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கை, தேர்தல் நடைபெறும் 13-ந் தேதி காலை வரை தொடரும்.

வாக்காளர்களிடம் போய், அடகுக்கடை ரசீதை கொடுங்கள், பணத்தை நாங்கள் செலுத்திவிடுகிறோம் என்றும், உங்கள் செல்போன் நம்பரை தாருங்கள், நாங்கள் ரீஜார்ஜ் செய்து தருகிறோம் என்றும், உங்கள் வீட்டுக்கு டிடிஎச்' இணைப்பு வாங்கி தருகிறோம் என்று சொல்லி வாக்காளர்களை கவர்வதாக புகார்கள் வந்துள்ளன. அதுபற்றியும் விசாரித்து வருகிறோம்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சட்டப்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு வாக்குச்சாவடி ஏஜெண்டையும், இரண்டு மாற்று ஏஜெண்டுகளையும் நியமித்துக்கொள்ளலாம்.

ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடி ஏஜெண்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார். அவர்களுக்கு பதிலாக மாற்று ஏஜெண்டுகளை உட்கார வைத்துவிட்டு வெளியே செல்லவும் அனுமதி கிடையாது.

தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை போலீசார் நடைமுறைப்படுத்தாவிட்டால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவான்மிiர் கடற்கரையில் பண பட்டுவாடா நடக்கிறது என்று புகார் வந்தவுடன், அந்த கடற்கரை போலீஸ் பூத்தில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டது.

அதையடுத்து 3 நாட்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இப்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை என்று மீண்டும் தகவல் வந்துள்ளது. இதுபோல தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சரியாக நடைமுறைப்படுத்தாத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

English summary
EC has decided to intensify the raids to curb money power in TN polls. CEC Praveen Kumar told the reporters that, we are going to intensify the raids. We will conduct raids in villages too. Voters should not get money for vote, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X